பார்வையாளர்களை கவரும் மாயக்கூஜா!

காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியகத்தில் 19- ஆம் நூற்றாண்டை சேர்ந்த "மாயக்கூஜா' ஒன்று அங்கு வரும் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. 
பார்வையாளர்களை கவரும் மாயக்கூஜா!
Updated on
1 min read

காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியகத்தில் 19- ஆம் நூற்றாண்டை சேர்ந்த "மாயக்கூஜா' ஒன்று அங்கு வரும் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. 

இக்கூஜாவின் மேல்  உள்ள மூடியை திறக்க முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கூஜாவின் அடிப்பகுதியில் தண்ணீர் ஊற்றுவதற்கான துளையுள்ளது. 

கூஜாவை தலைகீழாக கவிழ்த்து,அதன் வழியாக தண்ணீரை ஊற்ற வேண்டும். ஊற்றப்பட்ட தண்ணீர் தனித்த குழாய் வழியாக சென்று கூஜாவின் உட்பகுதியினை நிரப்புகிறது.

இதனை மீண்டும் அதே நிலைக்கு(தலைகீழாக)வைத்தாலும் தண்ணீர் சிந்துவதில்லை.அதாவது நீர் ஊற்றப்பட்ட வழியாக வெளியேறாமல் கூஜாவை சாய்க்கும் போது அதன் மூக்குப்பகுதி வழியாக மட்டும் வெளியேறுவது இக்கூஜாவின் சிறப்பம்சம்.

இந்த "மாயக்கூஜா' நெகிழ்வுத் தன்மை மிக்க களிமண்ணால் செய்யப்பட்டு, பின்னர் அலங்கார வேலைப்பாடுகள், பூ வேலைப்பாடுகள் போன்றவையும் செய்யப்பட்டுள்ளன.

பார்ப்பதற்கு பளபளப்பாகவும், பச்சை  நிற வண்ணத்திலும் இருக்கும் இந்த மாயக்கூஜா குறித்து காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் எஸ். உமாசங்கர் கூறியது...

""ராணிப்பேட்டை மாவட்டம் குடியாத்தம் தாலுகா கிரிகிரி என்ற கிராமத்தில் இது போன்ற மட்பாண்டங்கள் செய்யப்பட்டதால் இதற்கு கிரிகிரி மட்பாண்டங்கள் என்கிறார்கள். கலைநயம் மிக்க இத்தகைய மட்பாண்டங்கள் 19-ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆற்காடு நவாப்புகளின் ஆதரவில் கிரிகிரி மட்பாண்டம் தயாரிப்புக் கலையானது அக்கிராமத்தில் வளர்ச்சியடைந்திருப்பதாகவும் தெரிய வருகிறது.

சலவைக்கல் போன்று தோற்றமளிக்கக்கூடியது. இவ்வகை மட்பாண்டங்கள் தயாரிக்கப் பயன்படும் களிமண் மிகுந்த கவனத்துடன் பதப்படுத்தப்படுகிறது.
மண்பாண்டம் தயாரிக்கும் சக்கரத்தில் வனையப்பெற்ற பின்னர் 10 நாட்கள் நிழலிலும், 2 நாட்கள் வெயிலிலும் காய வைக்கப்பட வேண்டும் என வட ஆற்காடு மாவட்ட விவரச்சுவடியில் காக்ஸ் என்பவர் குறிப்பிட்டுள்ளார். செம்புக்களிம்பு,

சவுடுமண் ஆகியனவற்றை சமஅளவு எடுத்து,அவை பச்சை நிறமாக மாறும் வரை உலைகலனில் இட வேண்டும்.பின்னர் அதைப் பொடியாக்கி நீர் கலந்து பாண்டத்தின் மீது பூச வேண்டும்.பின்னர் சூரிய ஒளியில் காயவைக்கப்பட்டு சூளையிடப்படுகிறது.

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு கிரிகிரி என்ற கிராமத்திலிருந்து ஒருவர் இந்த மாயக்கூஜாவை விலைக்கு வாங்கி அரசு அருங்காட்சியகத்துக்கு அன்பளிப்பாக தந்துள்ளார்.

மன்னர்கள் பலரும் குடிநீரில் யாரும் விஷம் கலந்து விடக்கூடாது என்பதற்காக அவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டிருக்கலாம்.

ஏனெனில் இக்கூஜாவின் மேற்புறத்தில் தண்ணீர் ஊற்ற முடியாது.

அடிப்பகுதியில் (தலைகீழாக கவிழ்த்து) மட்டுமே தண்ணீர் ஊற்றி கூஜாவை நிரப்ப முடியும். தண்ணீர் ஊற்றிய பிறகு மீண்டும் பழைய நிலைக்கே கூஜாவை தலைகீழாக கவிழ்த்தால் ஊற்றிய நீர் வருவதில்லை, வராது. இது தான் மாயக்கூஜாவின் தனிச்சிறப்பு என  தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com