களைச்செடிகள்: வீட்டு உபயோகப் பொருள்கள்!

முதுமலையில் வசிக்கும் பழங்குடியினரின் வனத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ள களைச்செடிகளான  உண்ணிச் செடிகளை
களைச்செடிகள்: வீட்டு உபயோகப் பொருள்கள்!
Published on
Updated on
2 min read

முதுமலையில் வசிக்கும் பழங்குடியினரின் வனத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ள களைச்செடிகளான  உண்ணிச் செடிகளை அகற்றி, அவற்றைக் கொண்டு வீட்டு உபயோகப் பொருள்களைச் செய்து விற்பனை செய்கின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், இருளர், பணியர், குரும்பர், காட்டு நாயக்கர் ஆகிய தொல்பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இதில், கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் வசிக்கும் பணியர், இருளர், குரும்பர், காட்டுநாயக்கர் இன மக்கள் இன்றும் விவசாய கூலிகளாகவே வாழ்க்கை நடத்தி வருகின்றனர். தினந்தோறும் கிடைக்கும்  வருமானத்தைக் கொண்டே குடும்பம் நடத்துவதுடன், பழங்குடியினர் பலரும் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளதால் கிடைக்கும் வருவாயும் அதற்கே செலவழிந்து விடுகிறது.

இதன் காரணமாக அவதியுறும் பழங்குடியினரைப் பாதுகாக்க முதுமலை புலிகள் காப்பகத்தில் வசிக்கும் பெட்ட குரும்பரின மக்களுக்கு உதவும் வகையில், சூழல் மேம்பாட்டுக் குழுக்களை ஏற்படுத்தி அங்காடி, உணவகம் போன்றவற்றை அவர்களைக் கொண்டே வனத் துறை நடத்துகிறது. அத்துடன் முதுமலை வனப் பகுதிக்கே அச்சுறுத்தலாக உள்ள களைச் செடிகளை அகற்றும் பணியிலும் பழங்குடியினரை ஈடுபடுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வனத்துக்கு அச்சுறுத்தலாகவும், எவ்விதப் பயனும் இல்லாத களைச் செடியான உண்ணிச் செடிகளை பழங்குடியினர் பயனுள்ள பொருள்களாக மாற்றி வருகின்றனர்.

முதுமலை தெப்பக்காட்டில் உள்ள குரும்பாடி கிராமத்தைச் சேர்ந்த மாறன் என்ற இளைஞர், அப்பகுதி மக்களை ஒன்றிணைத்து, உண்ணிக் குச்சிகளைக் கொண்டு பர்னிச்சர்களை உருவாக்கி வருகிறார். இந்த பர்னிச்சர்கள் பல ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. இதன் மூலம் பழங்குடியினர் வாழ்வாதாரமும் மேம்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக மாறன் கூறியதாவது:

"முதுமலையில் வசிக்கும் பழங்குடியின மக்களின்  வாழ்வாதாரத்தை மேம்படுத்த உண்ணிக் குச்சிகளைக் கொண்டு பர்னிச்சர் உருவாக்க வனத் துறை உதவியுடன் பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது இக்குழுவில் உள்ள இளைஞர்களைக் கொண்டு சோபா செட், இருக்கைகள், ஊஞ்சல், டிரெஸ்சிங் டேபிள் ஆகியவற்றைச் செய்து வருகிறோம்.
 
உண்ணிக் குச்சிகளை வேகவைத்து, பட்டையை உரித்து, குச்சிகளைப் பதப்படுத்தி பர்னிச்சர் செய்கிறோம். பின்னர், அதற்கு வார்னிஷ் இட்டு விற்பனை செய்கிறோம். ஆர்டரின் பேரிலும் தேவையானவற்றைச் செய்து கொடுக்கிறோம். இந்த தயாரிப்புகள் அனைத்தும் கைகளாலேயே செய்யப்படுகின்றன. மேலும், குச்சிகளைக் கட்ட பயன்படுத்தப்படும் பிரம்பு நார் மைசூரு மற்றும் பெங்களூருவில் இருந்து வாங்கப்படுகிறது.

எங்களது பொருள்களைச் சந்தைப்படுத்துவதில் சிக்கல் உள்ளது. கரோனா தொற்றின் காரணத்தாலும், முதுமலையில் சுற்றுலாப் பயணிகள் இல்லாததாலும் எங்கள் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வனத் துறை மற்றும் நீலகிரி ஆதிவாசிகள் நலச் சங்கத்தினர் எங்கள் படைப்புகளைச் சந்தைப்படுத்த உதவுவதாக உறுதி அளித்துள்ளனர். எங்களது பொருள்கள் குறித்து வெளியே தெரியவந்தால், விற்பனை அதிகரித்து, எங்கள் வாழ்வாதாரமும் மேம்படும்'' என்றார்.  

இதுகுறித்து, வனத் துறையினர் கூறுகையில், பழங்குடியினரின் பர்னிச்சர்கள் தரமானதாக உள்ளதோடு, கடைகளில் கிடைக்கும் பர்னிச்சர்களின் விலையைவிட இவை மலிவாக உள்ளன. இந்த பர்னிச்சர்களை வாங்கும்போது அவர்களின் வாழ்வாதாரமும் மேம்படும் என்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com