சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வாய்ப்புகளை கண்டறிந்தால் உயரலாம்!

""பெண்கள் வாய்ப்புகளைக் கண்டறிந்து சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் உயர்ந்த நிலையை அடைய முடியும்'' என்கிறார் மத்திய அறிவியல், தொழிலக ஆராய்ச்சிக் குழுமத்தின் (சி.எஸ்.ஐ.ஆர்.) பொது இயக்குநர் ந. கலைச்செல்வ

News image
Updated On :21 ஆகஸ்ட் 2022, 12:30 am

கே.பாலசுப்பிரமணியன்

""பெண்கள் வாய்ப்புகளைக் கண்டறிந்து சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் உயர்ந்த நிலையை அடைய முடியும்'' என்கிறார் மத்திய அறிவியல், தொழிலக ஆராய்ச்சிக் குழுமத்தின் (சி.எஸ்.ஐ.ஆர்.) பொது இயக்குநர் ந. கலைச்செல்வி.

ஆண்கள், பெண்கள் என்ற பேதங்கள் இருப்பதாக இன்றைக்கும் பேசிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில், பெண்களுக்கு எல்லா நிலைகளிலும் சமவாய்ப்புகள் இருக்கின்றன என்றும் அவர் கூறுகிறார்.

சிவகங்கை மாவட்டத்துக்குள்பட்ட காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆய்வக இயக்குநராகப் பொறுப்பு வகித்து வந்த ந. கலைச்செல்வி, 37 ஆராய்ச்சி நிறுவனங்களின் தலைமையிடமான புதுதில்லியில் உள்ள அறிவியல், தொழிலக ஆராய்ச்சிக் குழுமத்தின் பொது இயக்குநர் பதவியில் அமர்ந்துள்ளார். கடந்த 80 ஆண்டு கால வரலாற்றில் உயர் பொறுப்புக்கு வந்த முதல் பெண் என்பதால், அவர் தமிழகத்துக்கே பெருமை சேர்த்துள்ளார். இவருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் உள்பட பல்வேறு தலைவர்கள், உயரதிகாரிகள் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

அவருடன் ஓர் சந்திப்பு:

உங்களது இளவயது வாழ்க்கை, படிப்பு..?

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் 1967-ஆம் ஆண்டு பிப். 5- இல் பிறந்தேன். பள்ளிக்கல்வியை தமிழ் வழியில் அம்பாசமுத்திரம் புனித வளனார் நடுநிலைப் பள்ளியிலும், பாளையங்கோட்டை காந்தி அம்பாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தேன். பி.எஸ்சி. வேதியியல் பட்டத்தை திருநெல்வேலி அரசு கலைக் கல்லூரியிலும், எம்.எஸ்சி. வேதியியல் பட்டத்தை கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியிலும், முனைவர் பட்டத்தை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றேன். கல்லூரிக் கல்வி வரை தமிழ் வழியிலேயே பயின்றேன்.

உங்களது குடும்பம்...?
எனது கணவர் ஸ்ரீகண்ட பிரபன்ன பாலன் காரைக்குடி அருகே செட்டிநாடு அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரியில் இயந்திரவியல் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். மகள் கிருத்திகா அமெரிக்காவில் முனைவர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.

பணி அனுபவம், சாதனை எப்படி...?

கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் சில ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணியாற்றினேன்.

1997- ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் காரைக்குடி செக்ரி ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணியைத் தொடங்கினேன். மின் வேதியியல் ஆற்றல்சார் துறையில் லித்தியம் மின்கல ஆய்வுகளை மேற்கொண்டேன். 13-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சித் திட்டங்களுக்கு முதன்மை ஆராய்ச்சியாளராக இருந்து நிறைவேற்றினேன். 125-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை தேசிய, சர்வதேச அறிவியல் இதழ்களில் வெளியிட்டேன். ஆராய்ச்சிகள் மூலம் 6 காப்புரிமைகளைப் பெற்றேன். எனது வழிகாட்டுதலில் 10 ஆராய்ச்சி மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

குன்றக்குடியில் இருந்து வெளிவரும் "அறிக அறிவியல்' இதழின் ஆசிரியராகவும் இருக்கிறேன். கடந்த 25 ஆண்டு ஆராய்ச்சியில் பல துறைகளில் விருதுகளைப் பெற்றுள்ளேன்.

பல்வேறு நாடுகளில் நடைபெற்ற அறிவியல் மாநாடுகளில் பங்கேற்று எனது ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளேன்.

ஒரே நாளில் 1000 லித்தியம் அயன் மின்கலைன்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட வசதி, மேக் இன் இந்தியா திட் டத்தின் கீழ் லித்தியம் அயன் மின்கலன் உற்பத்தி தொழில்நுட்பத்தை டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் தொழில் நுட்ப பரிமாற்றம் செய்தது, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கரியமில வாயுவை உறிஞ்சும் தொழில்நுட்பத்தை இந்தியாவிலேயே முதல் முறையாகக் கண்டுபிடித்து கோயம்புத்தூர் சம்மிட்ஸ் ஹைக்ரோனிக்ஸ் தொழிற்சாலைக்கு தொழில்நுட்ப பரிமாற்றம் செய்தேன்.

கரியமில வாயுவை பயன்படுத்தி மதிப்புக்கூட்டு பொருள்கள் தயாரிக்கும் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு, மண்வளத்தை மதிப்பிட ஸ்மார்ட் மண் பரிசோதனை செயல் மாதிரி கருவி உருவாக்கியுள்ளேன்.

பெண்களுக்கு கூறும் அறிவுரை...?

தலைமை இயக்குநர் பணியை வெற்றியாகக் கருதவில்லை. அதற்குப் பதிலாக ஒரு கடமையாகவே ஏற்றுக் கொண்டுள்ளேன். நாட்டுக்காக அறிவியல் தொழில்நுட்பத்தில் ஆற்ற வேண்டிய கடமை அதிகமாக இருக்கிறது.

இந்தியா என் மீது கொண்டுள்ள நம்பிக்கையை நான் ஒருபோதும் குறைத்துவிடமாட்டேன். உலக அளவில் இந்நிறுவனம் சிறந்து விளங்க முயற்சிப்பேன்.

பெண் எப்படி இந்த உயர்பதவிக்கு வரமுடியும் என்று எல்லோரும் கேட்கிறார்கள். அறிவியல் தொழில்நுட்பத்தில் ஆண், பெண் யாராக இருந்தாலும் சம வாய்ப்புகள் இருக்கின்றன. இதில் முன்னேற வேண்டும் என்றால் வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும். அதனை முறையாகப் பயன்படுத்திக் கொள்பவர்கள் எளிதாக உயர முடியும். அதிலும் பெண்களுக்கு குடும்ப பொறுப்பு உள்ளது. அதனை கையாளும் லாகவத்தை தெரிந்துகொண்டு குடும்பத்தை அரவணைத்துச் செல்பவர்கள் வெற்றிக்கனியை பறிக்கிறார்கள்.

தாய்மொழியை ஆழமாக உள்வாங்கிக் கொண்டால் எந்த மொழியையும் எளிதாக கையாள முடியும். தாய்மொழியை நாம் சரியாகப் புரிந்துகொள்ளும்போது அறிவியலும் நமக்கு எளிதாகிவிடும்.

உங்களது லட்சியம்..?

மின்வேதியியலில் (பசுமை வேதியியல்) எனது ஈடுபாடு அதிகமிருந்ததால் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது. லித்தியம் மின்கலன், லித்தியம் அயன் மின்கலன்களை மேன்மைப்படுத்துவது அவசியம்.

உலக நாடுகளின் சாலைகளில் மின் வாகனங்கள் அதிக அளவில் உலா வருவதுபோன்று இந்தியச் சாலைகளிலும் சில ஆண்டுகளிலேயே மின் வாகனங்களின் எண்ணிக்கை உயரத் தொடங்கும். இதனால், லித்தியம் மின்கலன்களை அதிக அளவில் வரும் காலங்களில் பயன் படுத்தும் வகையில் இந்திய அரசு பல்வேறு முதலீடுகளுக்கு சில நிறுவனங்களை அனுமதித்துள்ளது. சிஎஸ்ஐஆர் நிறுவனமும் லித்தியம் மின்கலன்களை மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் பல நூறு கோடி ரூபாய் முதலீடு செய்து செயலாற்றி வருகிறது. இப்பணியை தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.