மறக்க முடியாத மனிதர்..!
ஓவியரும் எழுத்தாளருமான மனோகர் தேவதாஸ் 1936-இல் மதுரையில் பிறந்தவர்.


ஓவியரும் எழுத்தாளருமான மனோகர் தேவதாஸ் 1936-இல் மதுரையில் பிறந்தவர். 2020-ஆம் ஆண்டில் மத்திய அரசின் "பத்மஸ்ரீ' விருது பெற்றவர். மதுரையையும், சென்னையையும் தனது கறுப்பு, வெள்ளை கோட்டுச் சித்திரங்களால் என்றும் வாழும் பொக்கிஷங்களாக ஆவணப்படுத்தியவர்.
அண்மையில் மறைந்த அவரைப் பற்றிய நட்புணர்வுடன் கூடிய நெகிழ்ச்சியான நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் நடிகர் சிவகுமார்:
""மதுரை நகரத்துக்குத் தன் கோட்டுச் சித்திரங்களால் பெருமை ஏற்படுத்தியவர் மனோகர் தேவதாஸ். எல்லாவற்றையும் அற்புதமான சித்திரங்களாக வரைந்தவர். ஓவியர் என்ற முறையில் நான் பல்வேறு இடங்களுக்கும் சென்று, அங்கேயே அமர்ந்து "ஸ்பாட் ஸ்கெட்ச்சிங்' செய்வது என்னுடைய பழக்கம். ஆனால், மனோகர் தேவதாஸ் பல்வேறு இடங்களுக்கும் சென்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு வந்து, அவற்றின் அடிப்படையில் ஓவியமா, புகைப்படமா என்று வித்தியாசம் தெரியாத வகையில் ஓவியமாக்குவது அவரது பாணி.
மனோகர் தேவதாஸ் என்று நினைக்கும்போது, கூடவே எனக்கு நினைவுக்கு வருவது அவருடைய மனைவி மஹிமா. அந்த இரண்டு பேருக்கும் இடையிலான ஆழமான காதலும், புரிதலும்தான்.
மஹிமா பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். மனோகர் தேவதாஸூக்கு மதுரைதான் சொந்த ஊர். மனோகரின் உறவுக்காரப் பெண் சத்யா, மஹிமாவுக்கு நெருக்கமான சிநேகிதி. எனவே, சத்யா மூலமாக மனோகர் மஹிமாவைப் பற்றியும், மஹிமா, மனோகரைப் பற்றியும் தெரிந்துகொண்டனர். எதேச்சையாக ஒரு திருமணத்தில் சந்தித்தபோது, இருவருக்கும் இனிய ஆச்சர்யம். இருவரும் மூச்சுவிடாமல் பேசிக் கொண்டனர் என்பதை இரு வீட்டாரும் கவனித்தார்கள்.
1963-இல் இரு குடும்பத்துப் பெரியோர்களும் மனோகர்-மஹிமா திருமணத்தை நடத்தி வைத்தனர். அவர்களுக்கு ஒரு பெண். பெயர் சுஜாதா. மனோகரின் பெற்றோர் மதுரையில் வசித்ததால், இவர்கள் இருவரும் அவ்வப்போது காரிலேயே மதுரைக்குச் சென்று அவர்களைப் பார்த்துவிட்டு வருவது வழக்கம்.
இருவருக்கும் நன்றாகக் கார் ஓட்டத் தெரியும். மதுரைக்குச் செல்லும்போது இருவரும் மாறி, மாறி கார் ஓட்டிச் செல்வார்கள். அப்படி ஒருமுறை மஹிமா காரை ஓட்டிக் கொண்டு சென்றபோது விழுப்புரம் அருகில் ஒரு விபத்து நிகழ்ந்தது. தாறுமாறாக ஓட்டப்பட்ட ஒரு லாரியும் இவர்களது காரும் மோதின. இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மனோகர் பலத்த காயத்துடன் உயிர்த் தப்பினார். மஹிமாவுக்கு கழுத்துக் கீழே இயக்கம் போய்விட்டது. மஹிமாவால் கண்களால் பார்க்க முடியும். வாயால் பேச முடியும். ஆனால் உடலை, கை, கால்களை அசைக்க முடியாது. அதன் பின் அவரை ஒரு குழந்தை போலப் பார்த்துக் கொண்டார் மனோகர். 2007-இல் மஹிமா மறைந்தார்.
மனோகர் ஓவியக் கலையின் மீதான ஆர்வம் காரணமாக தமது சொந்த ஊரான மதுரையின் பல்வேறு இடங்களையும் சித்திரங்களாகத் தீட்டத் துவங்கினார். அதேபோல சென்னையின் பழைமையான கட்டடங்கள், முக்கிய இடங்களையும் வரைந்தார். ஆனால், விபத்தின் பாதிப்பு காரணமாக, அவருக்கும் படிப்படியாக பார்வை குறைந்துகொண்டே வந்தது.
ஒரு நாள் நானும், ஓவியர் மணியம் செல்வனும் மனோகர் தேவதாஸை சந்திப்பதற்காக அவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தோம். பார்வையற்றை நிலையிலும், அவர் வாசலுக்கு வந்து எங்களை வரவேற்று, உள்ளே அழைத்துச் சென்றார். அவருடன் உரையாடத் துவங்குவதற்கு முன்பாக, "மஹிமாவுக்கு மதுரை மல்லிகைப் பூ என்றால் மிகவும் பிடிக்கும். நீங்கள் வருகிறீர்கள் என்பதால், அவளுக்குப் பிடித்த மதுரை மல்லிகைப் பூ மாலை வாங்கி வைத்திருக்கிறேன். முதலில், அந்த மாலையை அவளுடைய படத்துக்குப் போட்டுவிடுங்கள். அதன் பின் நான் பேசலாம்!' என்றார். அவர்களின் ஆழமான அன்புக்கு நெகிழ்ந்து, மாலை அணிவித்தபோது என்னையும் அறியாமல் கண் கலங்கிவிட்டேன். புறப்படும்போது, கூடவே வாசல் வரை வந்தார்.
"எதுக்கு உங்களை இவ்ளோ சிரமப்படுத்திக்கறீங்க?' என்று நாங்கள் கேட்க,"வீட்டுக்கு வரும் விருந்தாளிங்களை வாசல் வரை போய் வரை அனுப்பி வைக்கணும்னு மஹிமா சொல்லுவாள்! அதனால்தான் என்று மனோகர் சொன்னார்'' என்றார் சிவகுமார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...