

பேராசிரியர், கல்வியாளர், எழுத்தாளர், மாணவர்களுக்கும் இளையதலைமுறையினருக்கும் வழிகாட்டி என்ற பன்முகத்தன்மை கொண்டவர் பேராசியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன். இந்தியா மட்டுமின்றி, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற பல்வேறு நாடுகளுக்குச் சென்று பேசியவர், சிறுகதை எழுத்தாளருக்கான பல விருதுகளைப் பெற்றவர், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து நாடுகளில் ஒரு மாதம் பயணித்து 25 அமர்வுகளில் அங்குள்ளோரைச் சந்தித்தவர், "மனதில் உறுதி வேண்டும்' என்ற தலைப்பில் 30}க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களை எழுதியவர், "எத்தனை கோடி இன்பம்' என்ற இலக்கியம் கூறும் வாழ்க்கை நெறிகள் பற்றிய நிகழ்ச்சிகளை வழங்கியவர் என இவரது சாதனைகள் பட்டியல் நீள்கிறது.
இவரிடம் ஓர் மினி பேட்டி:
ஒரு ஆசிரியையாக நீங்கள் சமூகத்துக்குச் சொல்லும் அறிவுரைகள்?
ஆசிரியர் பணி என்பது தகுதியல்ல; அது ஓர் பொறுப்பு. எந்தத் துறையாக இருந்தாலும், பொறுப்பாக செயல்பட வேண்டும். மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும். அடுத்தத் தலைமுறைக்கு நாம் வழிகாட்டியாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் 10 குழந்தைகளாவது முன்மாதிரியாகப் பார்க்கக் கூடிய பண்புகள் மூத்த தலைமுறைகளுக்கு இருக்க வேண்டும் என்பது என் கருத்து.
இணையதளத்தில் உங்கள் பேச்சை பலரும் ரசிப்பதன் காரணம்?
இணையதளங்களில் என் முகம் தெரிவதற்கு முன்பாகவே ஓரளவுக்கு பரிச்சயமானவள். "உங்களுடைய விசிறி' என்று யாரேனும் சொல்லும்போது நான் கூச்சப்பட்டு விலகிக் கொள்வேன்.
கூட்டுக் குடும்பமாக இருந்தபோது எல்லோர் வீடுகளில் வயதில் மூத்தப் பெண்மணி இருந்தனர். இப்போது இந்தக் கூட்டுக் குடும்பங்கள் இல்லாமல் போனதால், மூத்தப் பெண்மணியை சமுதாயம் இழந்து போனது. அவர்கள் மிகுந்த அறிவாளிகளாகவோ, மெத்தப் படித்தவர்களாகவோ இருக்கவேண்டிய அவசியமில்லை. ஒரு தனித்தன்மையோடு கருணை மற்று வாஞ்சையுடன் கூடிய பெண்மணியாக இருப்பார்கள். அவர்களிடம் புரிதலும், பரிவும் இருக்கும். ரொம்ப சுலபமாக ஒரு நபரை நெருங்க செய்யக் கூடிய பண்பும் இருக்கும்.
சமுதாயத்துக்கு அவர்களது செயல்பாடுகள் தேவைப்படுகிற மாதிரி அதை நோக்கி என்னை நகர்த்திக் கொள்ள முயற்சி செய்கிறேனோ என்னமோ? என்னைவிட மூத்த நபர்களுக்கும் கூட்டுக் குடும்பத்தில் பார்த்த சகோதரியின் ஞாபகம் வரலாம். அம்மாவிடம் இருக்கக்கூடிய பண்புகள் கிடைக்கலாம். முன்பின் அறிமுகமில்லாத நம்மோடு பேருந்தில் பயணம் செய்யும் சக பயணிகள்; வேதனைகளைப் பகிர்ந்து கொள்ளலாம். அப்படி நினைக்கக் கூடிய ஒரு மூத்த பெண்மணியின் நிலைபாட்டை நான் எடுக்கிறேன் என்று நினைக்கிறேன். அனைவருடைய மனதும் ஏதோ காரணங்களால் அதிகமாகக் காயப்பட்டிருக்கும், உணர்வுரீதியாக காயப்பட்டிருக்கும், சில பேருக்கு இன்னும் தழும்புகள் கூட ஆறாமல் காயங்களாகவே இருக்கும். அப்புறம் என்ன தோன்றும் என்றால் இந்தப் பெண்மணி பேசும்பொழுது என் குடும்பத்தில் ஒரு நபர் பேசுவது போல இருக்கிறது என்று தோன்றலாம். அப்படித் தான் தோன்றுகிறது என்றால் நான் ரொம்பக் கொடுத்து வைத்த ஒரு பெண்
மணியாகத்தான் இருக்க வேண்டும்.
குழந்தைகளைப் பற்றி பேசும்போது தாயாகவே மாறிவிடுகிறீர்களாமே?
கண் முன்னால் குழந்தைகள் இருக்கிறார்கள் என்னும் போது மனதில் அந்த காருண்யம் வரவேண்டும்தானே. அம்மா என்பவள் வெறும் அன்பை மட்டும் கொடுப்பவள் அல்ல; குழந்தைகளுக்கு தன்னுடைய அனுபவத்தை எச்சரிக்கை உணர்வாக ஊட்டுபவளும் தான். அன்பின் குறியீடாகவும் அம்மா இருக்க வேண்டும். அது ஓர் இயல்பான மாற்றம் தானே? அப்படித் தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஓர் ஆசிரியருக்குள் அம்மாவும் இருப்பதனாலும், அம்மாவுக்குள் ஓர் ஆசிரியர் இருப்பதனாலும் கண் முன்னே இருக்கக்கூடியவர்கள் குழந்தைகளாக இருக்கும்பட்சத்தில் ஒரு தாய் என்கிற என்னோட நிலைப்பாடு மிகச் சரியானது. எல்லோரும் அவரவர் பங்குக்கு மனதில் ஒரு கசப்பு, காழ்ப்பு, வன்மம் என மோசமான நினைவுகள். வெளியே சொல்ல கூச்சப்படக்கூடிய எண்ணங்கள். இவை எல்லாவற்றின் கூட்டுத் தொகையாகத் தான் அனைவரும் இருக்கிறோம்.
என்னை விடவும் கடுமையான பாதைக்குள் நீ போய்க் கொண்டிருக்கிறாய் என்று அந்தக் குழந்தைகளுக்கு சொல்லும்போது என்னுடைய கால கட்டங்களில் இல்லாத எல்லா சவால்களும் உன்னுடைய காலக் கட்டங்களில் இருக்கின்றன. அவற்றையும் தாண்டி ஒரு வகுப்புக்கு உன்னால் வரமுடியும் என்றால், சரணங்களைத் தாண்டி உன்னுடைய தேர்வுகளை எடுத்துக் கொள்ள முடியும் என்றால் கண்டிப்பாக என்னை விட இயற்கை உன்னை இன்னும் புத்திசாலியாகத் தான் படைத்திருக்கிறது என்பதை இயல்பாக ஏற்றுக் கொண்டாலே போதும்.
குழந்தைகளோடு உன் வாழ்க்கையை கடந்து வரும்போது இதைவிட மோசமாகத் தான் நான் இருந்தேன் என்கிற அந்த உண்மையை ஏற்றுக் கொண்டாலே போதும். அது தான் ஒரு பெரிய தாய்மையாக எனக்குத் தோன்றுகிறது.
மேடை ஏற ஆசைப்படும் பெண்களுக்கு சொல்ல நினைப்பது?
பெண்கள் இருக்கும் அனைத்து இடங்களும் மேடைகள்தான். ஒரு குரல் ஓங்கி ஒலித்தாலோ, காட்டமான வார்த்தைகளைப் பயன்படுத்தினாலோ, மற்றவர்கள் மனது காயப்படும் என்று தெரிந்தே அவர்களை கேலிப் பொருளாக மாற்றி விமர்சிப்பதோ இவை எல்லாமே என்னுடைய மனதுக்கு ஒவ்வாத விஷயங்கள். இதையெல்லாம் செய்ய எனக்கு தைரியம் கிடையாது. எதாவது சொல்லி யாரையும் காயப்படுத்தி விட்டு வந்தபிறகு தூக்கம் வராமல் இருப்பது நானாகத் தான் இருக்கும். அதை செய்யக்கூடாது என்ற ஒற்றை முடிவில் இருப்பதால் அதற்கான மேடைகளை யாரும் எனக்கு அமைத்து கொடுக்கவில்லை.
நானாக ஒரு மேடையின் மூலையில் நின்று பேசிக் கொண்டிருக்கிறேன், எது மனதுக்கு ஒவ்வாததோ அதை யாருமே செய்யக் கூடாது. சொல், சிந்தனை, செயல் இவைதான் என்னுடைய கோட்பாடாக இருக்கும். விருப்பம் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளலாம். இல்லாதவர்கள் அதற்கு மறுப்பு சொல்லலாம். அவரவர்களுக்கு எது எளிதாக இருக்கிறதோ அதைத் தானே பின்பற்ற முடியும். இது எனக்கு எளிதாக இருக்கு. என்னுடைய மன அமைதிக்கு எந்த பங்கமும் வராமல் இருப்பதற்கு இந்த முயற்சி ரொம்பவும் பயனளிப்பதாக இருக்கிறது.
மேடையில் ஏறினாலும், தரையில் நின்று கொண்டு பேசினாலும் மன அமைதி குலையாமல் இருக்க வேண்டும்.
என்னிடம் கைப்பேசியில் கேள்வி கேட்டால் கூட என் முன்னால் அவர் நேராக நிற்கிற மாதிரியே நினைத்து கொண்டு தலை அசைவோடு, முகத்தில் சிரிப்போடு என் மனக்கண் முன்னால் அவரைப் பார்த்துக் கொண்டே பதில்களை சொல்லுகிற உணர்வு இருக்கும். இந்த மாதிரி ஒரு தொடர்பு இருந்தால் போதும் என்று நினைக்கக் கூடிய பெண். இதனால் வரக் கூடிய உறவுகள் மிகவும் நேர்த்தியானவை. மிகவும் உயர்வானவை என்று நம்பக் கூடிய பெண் நான். அதனால் எனக்கு தனிப்பட்ட முறையில் மேடையேறும் ஆசை இல்லை. எல்லோரிடமும் நான் பகிர்ந்து கொள்வது இது மட்டும்தான்.
மறக்க முடியாத மேடை அனுபவம் குறித்து?
எனக்கு ஒவ்வொரு மேடையும் அச்சம் ஊட்டுவதுதான். எல்லா மேடைகளிலும் மிகுந்த மரியாதையுடன்தான் ஏறுவேன். பார்வையாளர்கள் மீது மிகுந்த மரியாதை. அச்சம் தரக்கூடிய ஒன்றாக எப்பொழுதுமே இருக்கக் கூடியது} யாரும் எதுவும் தெரியாமல் பேச்சைக் கேட்க வரவில்லை என்பதுதான்.
எல்லா மேடை அனுபவங்களுமே கண்டிப்பாக எனக்கு மறக்க முடியாதவை தான். குழந்தைகள் என் முன்னால் உட்கார்ந்திருக்கும்போதும், அந்த மேடைகள் எல்லாமே கொஞ்சம் பொறுப்புணர்வை பன்மடங்கு அதிகமாக கொடுக்கக் கூடிய மேடைகள். அக்குழந்தைகள் என் முகத்தைப் பார்த்துக் கொண்டு என்னுடைய பதிலில் அவர்களுக்கு எது பிடிக்கும் என்று எதிர்பார்க்கக் கூடிய அந்த நிமிடம் தான் என்னுடைய பொறுப்புணர்வு என் தோள்களில் மலையாக, பாரமாக அழுத்தும். எனவே எல்லா மேடைகளுக்கும் என்னுடைய மரியாதை உண்டு. எல்லா அனுபவங்களும் சம்பவங்களாக இல்லாமல், அனுபவங்களாக மாறுவதே அந்த மேடைக்குப் பின்புலம். என்னிடம் ஏதோ மாற்றம் வந்திருப்பதால் தானே? எல்லா மேடைகளும் அனுபவம் தரக்கூடிய மேன்மை வாய்ந்தவையாக இருக்கினறன என்கிறார் ஜெயந்தஸ்ரீ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.