

"பண்டைய ஆவணங்களைப் பாதுகாப்பது அவசியம்'' என்கிறார் ஜெ.ராஜா முகமது.
சமூக சேவகர், வரலாற்று ஆய்வாளர், கோட்டை அமீர் உள்பட தமிழக அரசின் பல்வேறு விருதுகளைப் பெற்றவர் ஜெ.ராஜாமுகமது. இவருடன் பேசுவோம்:
உங்களது எழுத்துப் பணி குறித்து?
"தமிழகத்தில் மாலிக்காபூர் ஓர் ஆய்வு', "புதுக்கோட்டை தொண்டைமான் செப்பேடுகள்', "தமிழகத்தில் இஸ்லாம் வந்ததும் வளர்ந்ததும்- வாழ்வதும்', "இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழக முஸ்லிம்கள்' என்பன உள்ளிட்ட 18 நூல்களையும், "ஒரு ராஜாவின் காதல் கதை', "காதலுக்காக முடி திறந்த புதுக்கோட்டை மன்னரின் வரலாறு', "கலாசார சங்கமம்', "புதுக்கோட்டை வரலாறு', "செய்தித்துளிகள்', "புதுக்கோட்டை சமஸ்தான நிர்வாகிகள்', " சித்தன்னவாசல்' உள்ளிட்ட குறு நூல்களையும் வெளியிட்டுள்ளேன்.
ஆய்வுகள் மூலமாக கிடைத்த அனுபவம் குறித்து?
என்னை உலகுக்கு அறிமுகப்படுத்தியது புதுக்கோட்டை அருங்காட்சியகம்தான். இங்கே பணியில் சேர்ந்தபோது, பழைய பாணி காட்சியமைப்புடன் இருந்தது. சுமார் 36 ஆண்டுகள் ஒரே இடத்தில் இருந்ததால், தரத்தை உயர்த்துவதில் கவனம் கொண்டேன். எனது பணி நிறைவுக் காலத்தில் உலகில் ஒரு சிறிய அருங்காட்சியகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, இந்த அருங்காட்சியகம் விளங்குகிறது. வாழ்நாளில் மிகப்பெரும் பகுதியை புதுக்கோட்டையின் வரலாறு குறித்து ஆய்வுகளிலேயே கழித்துள்ளேன்.
கள ஆய்வு மேற்கொண்டு வரலாற்றுத் தடயங்களையும், இதுவரை பதிவு செய்யப்படாத 100-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைகள், ஆவணங்கள் ஆகியவற்றை கண்டுபிடித்துள்ளேன். புதையுண்டு போன இரண்டு தொன்மையான நகரங்களின் அமைவிடத்தைக் கண்டறிந்து வெளிக் கொணர்ந்துள்ளேன்.
"புதுக்கோட்டையின் கற்கால வரலாறு' குறித்து பல சான்றுகளைக் கண்டுபிடித்து பதிவு செய்துள்ளேன். குடுமியான்மலையில் கி.மு.5000-க்கு முற்பட்ட பாறை ஓவியங்களை எனது ஆய்வில் கண்டுபிடித்ததன் மூலம் புதுக்கோட்டையின் தொன்மை வரலாற்றுக்கு புதிய ஒளியூட்டப்பட்டிருக்கிறது. இந்த அரிய கண்டுபிடிப்பை தமிழ்நாடு வரலாற்று ஆய்வுக் கழகம் 2014-ஆம் ஆண்டின் சிறந்த வரலாற்றுக் கண்டுபிடிப்பு என பாராட்டி பரிசு வழங்கியது. இதுபோன்ற ஆய்வுப் பணிக்கு மேலப்பனையூர் கரு.இராஜேந்திரன் உதவி செய்துள்ளார்.
தற்போது என்ன செய்து வருகிறீர்கள்?
செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் நிதியுதவியுடன் " பண்டைய புதுக்கோட்டையின் வரலாறும்- பண்பாடும்' என்ற ஆய்வுரையும், மத்திய அரசின் வரலாற்று ஆய்வுக் கழக நிதியுதவியுடன் "புதுக்கோட்டையில் சிறு தெய்வ வழிபாடும்-பண்பாடும்' என்ற ஆய்வுரையும் அண்மையில் நிறைவு பெற்றது.
எனது ஆய்வின் மற்றொரு பகுதி தமிழக முஸ்லிம்கள் குறித்ததாகும். முஸ்லிம்களின் வரலாற்று ஆய்வு என்பது சொல்வதைவிட தமிழ்நாட்டு பொது வரலாற்று அங்கத்தில் ஏற்பட்டு விட்டஒரு சிதைவை நேர்படுத்தும் எழுத்து முயற்சி என்று சொல்வது பொருந்தும்.
எனது ஆய்வுப்பணிகளைக் கண்ட திருச்சி ஜமால் முகமது கல்லூரி நிர்வாகம், இஸ்லாமிய தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மைய இயக்குநராக என்னை 2018-இல் நியமித்தது.
இளம்தலைமுறையினருக்கு கல்வெட்டு மீது ஆர்வம் இருக்கிறதா?
கல்வெட்டுகள் அவை பொறிக்கப்பட்ட காலத்தின் வரலாறு கூறும் ஆவணங்களாகும்.
கல்வெட்டுகள் பெரும்பாலும் கோயில் சுவர்களிலேயே பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டு எப்படி அமைய வேண்டும் என்பதற்கான பொது விதிமுறை உண்டு. பொதுவான இடத்தில் அமைய வேண்டும் என்பதற்காகவே கோயில் சுவர்களில் எழுதப்பட்டுள்ளன.
ஒரு கல்வெட்டில் சொல்லப்படும் செய்தி அக்காலத்தின் சரியான வரலாற்றுச் செய்தி எனக் கொள்வதில் தவறில்லை. தமிழ்நாட்டில்தான் கல்வெட்டு சான்றுகள் அதிகம்.
புதுக்கோட்டை சமஸ்தானத்தில் அதிக எண்ணிக்கையில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கல்வெட்டுகளை வெட்டுவதற்கும், பொறிப்பதற்கும் என்றே அப்போது பயிற்சி பெற்றவர்கள் இருந்தனர்.
1929-இல் வெளியிடப்பட்ட "புதுக்கோட்டை சமஸ்தானக் கல்வெட்டுகள்' என்ற நூலில் சுமார் 1200 கல்வெட்டுகள் இடம் பெற்றிருக்கின்றன. பல கோயில்களில் பதிவு செய்யப்படாமல் விடப்பட்ட கல்வெட்டுகளைத் தேடும் பணியை கடந்த காலத்தில் ஆய்வாளர்கள் சிலர் மேற்கொண்டனர். பண்டைய காலத்திலிருந்து 19-ஆம் நூற்றாண்டு வரை புதுக்கோட்டையின் வரலாற்றைக் கட்டமைக்க இந்தக் கல்வெட்டுகள் பெரிதும் துணை நிற்கின்றன. இதுவரை புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 300-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் மேலும் கூடுதல் தகவல்களை அளிக்கின்றன.
கல்வெட்டுகளின் மூலம் தமிழக வரலாற்றுக்கு புதிய செய்திகள் அறிமுகமாகின்றன. எதிர்வரும் தலைமுறையினருக்கு சரியான வரலாற்றை விட்டுச் செல்கிறோம் என்ற மகிழ்ச்சியான நோக்கத்துடனேயே இதுபோன்ற ஆய்வுப்பணிகளை இன்னும் செய்து கொண்டிருக்கிறேன். மற்றவர்களும் செய்துவருகிறார்கள்.
கல்வெட்டுகளைப் படிப்பதற்குப் பயிற்சி பெறுதல், பாதுகாத்தல் போன்றவற்றில் வரலாற்று மாணவர்கள் முன்வர வேண்டும்.
உங்களது சமூகப் பணிகள் பற்றி?
மனித நேயமும், தன்னார்வ சேவையும் கொண்ட இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தில் 1980-ஆம் ஆண்டிலிருந்து இருந்து வருகிறேன். 1995-ஆம் ஆண்டு முதல் மாவட்ட கெளரவ செயலாளராகப் பணியாற்றுகிறேன்.
2004-இல் ஏற்பட்ட சுனாமி நிவாரணப் பணிகளைத் திறம்பட செய்தோம். கடற்கரையில் வாழும் மீனவக் குடும்பங்களின் நலன் காக்க சுமார் ரூ.1 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.