ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

ஊழியர்கள் யோசனை கூறலாம்

கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் 35 ஆயிரம் ஊழியர்கள் கொண்டாடும் கதாநாயகனாக மாறியிருக்கிறார் அதன் மேலாண் இயக்குநர் வி.அன்புக்குமார்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2023, 6:30 pm


கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் 35 ஆயிரம் ஊழியர்கள் கொண்டாடும் கதாநாயகனாக மாறியிருக்கிறார் அதன் மேலாண் இயக்குநர் வி.அன்புக்குமார்.

பொறுப்பேற்று 14  மாதங்களான நிலையில், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ததோடு,  பயணிகள் கொண்டாடும் வகையில் மின்னணு பேருந்து சேவைகளையும் அறிமுகம் செய்திருக்கிறார். 

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அலுவலரான அவரிடம் பேசியபோது:

""வேலூர் மாவட்டத்தில் சின்னப்பள்ளிகுப்பம் எனது சொந்த ஊர். அப்பா வெங்கடேசன் காவலராகப் பணியாற்றினார். அம்மா தனலட்சுமி.  பிளஸ் 2  வரை ஒடுகத்தூரில் தமிழ்ப் பயிற்றுமொழியில் படித்தேன். 

சென்னையில் விவேகானந்தா கல்லூரியில் பி.ஏ. வரலாறும்,  சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் எம்.ஏ. வரலாறும்  படித்தேன்.  ஐ.ஏ.எஸ். அலுவலராக வேண்டும் என்ற எனது தந்தை அளித்த தொடர் ஊக்கமே,  கனவாகவும் மாறியது. எனது மாமா மகேஸ்வர், தமிழ்நாடு அரசின் முதல்நிலை அதிகாரியாக இருந்ததால், அவரைப் போலவே நானும் பெரிய வேலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தேன். 

வரலாறு, தமிழ் இலக்கியத்தைப் பாடங்களாக எடுத்து ஆறு முறை முயற்சித்தும்  வெற்றி கிடைக்கவில்லை.  2004ஆம் ஆண்டு 7ஆவது முறையாகத் தேர்வு எழுதியபோது,  தேர்ச்சி பெற்றேன். தரவரிசையில் நல்ல இடம் கிடைத்ததால்,  கர்நாடகத்தில் பணி நியமனம் செய்யப்பட்டேன். 

பெல்லாரியில் பயிற்சி அதிகாரியாகப் பணியாற்றினேன்.  மதுகிரியில் கூடுதல் ஆட்சியர்,  சிவமொக்கா, கலபுர்கி மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி தலைமைச் செயல் அதிகாரி, ராய்ச்சூர்,  ஹாசன்,  பெலகாவி மாவட்டங்களில் ஆட்சியராகப் பணிபுரிந்தேன்.  அரசின் பல்வேறு துறைகளின் உயர்பதவிகளில் பணிபுரிந்த பின்னர், தற்போது போக்குவரத்துத் துறையில் பணி.

35 ஆயிரம் ஊழியர்களுக்கும் எனது கைப்பேசி எண்ணை கொடுத்திருக்கிறேன். அவர்களும்  தொடர்பில் இருக்கிறார்கள்.  

அவர்களின் வாழ்விடங்களுக்கே பணியிடமாற்றம் அளித்து வருகிறேன்.  கல்வி, சுகாதார உதவிகளைச் செய்து வருகிறேன். தினமும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் என்னை சந்தித்து குறைகளைக் கூறுவார்கள். அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். 

ஊழியர்கள் மீது பதிவு செய்திருந்த  ரூ.15 கோடி அபராத மதிப்பிலான 10,364 விதிமீறல் புகார்களைத் தள்ளுபடி செய்தேன்.  10 மாதங்களுக்கு மேல் பணிக்கு வராமல் இருந்த 424 பேரை மீண்டும் பணி அமர்த்தினேன். 

1957ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் 7ஆம் தேதி வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை, ஒன்றாம் தேதிக்கு மாற்றினேன். 

நாட்டில் இயங்கிவரும் போக்குவரத்துக்கழகங்களின் வரலாற்றில் முதல்முறையாக, ஊழியர்களுக்கு ரூ.1கோடி விபத்து நிவாரண காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்தேன்.

இதில் குழந்தைகளின் கல்விச்செலவு ரூ.5 லட்சம், மகளின் திருமண செலவு ரூ.5 லட்சம் அடங்கும். 

கடந்த ஒன்றரை ஆண்டில் விபத்துகளும் குறைந்தது.  போக்குவரத்துக் கழகம் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு புதுமையான யோசனைகள் மூலம் தீர்வு வழங்கும் ஊழியர்களுக்கு உரிய அங்கீகாரம் அளித்து, பாராட்டுகிறோம். 

கர்நாடகத்தில் முதன் முறையாக 300 கி. மீ.  தொலைவுக்குட்பட்ட நகரங்களுக்கு இடையே மின்சாரப் பேருந்து சேவைகளை அறிமுகம் செய்திருக்கிறோம். இதனால்,  நஷ்டத்தில் இயங்கி வந்த போக்குவரத்துக் கழகத்தை ரூ.40 கோடி லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றியிருக்கிறோம். 

தினமும் ஒரு கோடி பயணிகளை ஏற்றி செல்கிறோம்.  சிறந்த மனிதவள நிறுவனங்கள் வரிசையில் ஆசியாவில் கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகத்துக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. இதுபோல ஏராளமான மாநில, தேசிய, பன்னாட்டு விருதுகள் கிடைத்துள்ளன.

"மக்களின் நடமாட்டத்தை ஊக்குவிப்பதே பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்'  என்பதைக் கருத்தில் கொண்டு,  2020ஆம் ஆண்டு முதல் லக்சம்பர்க் நாட்டில்  இலவச பேருந்து பயணம் அளிக்கப்படுகிறது.  பிரேசில், கனடா, அமெரிக்காவின் சில நகரங்களில் இலவச பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  அதன்படி, கர்நாடகத்தில் பெண்களுக்கான இலவச பேருந்துப் பயணம்,  சுற்றுலா,  ஆன்மிகத் தலங்களுக்கு மக்களை அழைத்து செல்வது போன்றவை பொருளாதாரச் சுழற்சியை ஊக்குவித்துள்ளது. வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது. இலவசப் பயணம் நாள்தோறும் மேற்கொள்ளும் 50 லட்சம் பெண்களிடம் மீதமாகியிருக்கும் பேருந்துக் கட்டணம், வேறு வகைகளில் பொருளாதாரத்தில் கலக்கிறது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.