பலருக்கு வாழ்க்கை போராட்டமாக இருக்கும்; சிலருக்கு போராட்டமே வாழ்க்கையாக அமையும். மறைந்த பொதுவுடமைத் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு போராட்டம்தான் வாழ்க்கையானது.
திருச்செந்தூர் வட்டத்துக்கு உள்பட்ட ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நரசிம்மலு - ராமானுஜம் தம்பதியின் இரண்டாவது மகன் பிரதாப சந்திரன். தாத்தாவின் பெயரான "சங்கரய்யா'வை தனக்கு வையுங்கள் என்று ஒற்றைக் காலில் நின்று பெயரை மாற்றிக் கொண்ட பிரதாப சந்திரன், சங்கரய்யாவாக அவதாரம் எடுத்தார்.
கோவில்பட்டியில் பொறியாளராகப் பணிபுரிந்த நரசிம்மலு , மதுரை நகராட்சியில் வேலை கிடைத்ததால் குடும்பமே மதுரைக்கு குடிபெயர்ந்தது. பள்ளிப் படிப்பை மதுரையில் தொடர்ந்த சங்கரய்யா, அமெரிக்கன் கல்லூரியில் வரலாறு படித்தார். கல்லூரி மாணவர் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சுய மரியாதை இயக்கத்தால் கவரப்பட்ட சங்கரய்யா, 1938-இல் ஹிந்தித் திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்ற "முதல் ஹிந்தி எதிர்ப்பு' போராட்டத்தில் கலந்துகொண்டார். ராஜாஜிக்குக் கருப்புக் கொடி காட்ட பலரும் தயங்கியபோது, அதைச் சவாலாக எடுத்துகொண்டு நிறைவேற்றினார். மறுபக்கம் மாணவர்களை ஒன்று திரட்டி ஆங்கில ஆட்சிக்கு எதிராகப் போராட்டங்களையும் நடத்தினார்.
சுதந்திரப் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்த கொண்டிருந்தபோது, சென்னைக்கு வந்திருந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோûஸ சந்தித்து மதுரைக்கு வருமாறு சங்கரய்யா அழைத்தார். பயணம் முன்னமே திட்டமிட்டபடியால் "நேரம் இல்லை' என்று நேதாஜி சொன்னார். இருந்தாலும், சங்கரய்யாவின் விடுதலை உணர்வை மதித்து மதுரைக்கு நேதாஜி வருகை தந்து மாணவர்கள் மத்தியில் வீர உரை நிகழ்த்தினார்.
அதேசமயம், சங்கரய்யாவின் விடுதலை இயக்க ஈடுபாட்டை கண்டித்த கல்லூரி நிர்வாகம் சங்கரய்யாவை கல்லூரியிலிருந்து நீக்க முடிவு செய்தது. இதற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்துக்குத் தயாராகவே, கல்லூரி நிர்வாகம் தனது எதிர்நடவடிக்கைகளை கைவிட்டது.
ஆங்கில அரசுக்கு எதிரான தொடர் போராட்டங்களால், பட்டப்படிப்பு இறுதித் தேர்வுக்கு 15 நாள்கள் இருந்த நிலையில், சங்கரய்யா கைது செய்யப்பட்டதால் கல்லூரிப் படிப்புக்கு நிரந்தர முற்றுப்புள்ளி விழுந்தது. "மகனை வழக்குரைஞராக்கிப் பார்க்க வேண்டும்' என்று நரசிம்மலு கண்ட கனவும் கலைந்தது. தாயோ கதறி அழுதார். ஆனால் , சங்கரய்யாவின் அரசியல் பயணத்துக்கு அந்த சிறைவாசம் புதிய தொடக்கத்தைக் குறித்தது.
வேலூர் சிறைவாசம் சங்கரய்யாவுக்கு காமராஜர் போன்ற அரசியல் தலைவர்களின் அறிமுகத்தைப் பெற்றுத் தந்தது. சுதந்திரப் போராட்டக் கைதிகளைச் சிறையில் கொடுமைப்படுத்தியதால், சங்கரய்யா உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதனால் தனிமைச் சிறைக்கு சங்கரய்யா மாற்றப்பட்டார்.
விடுதலையானதும் முன்பைவிட சங்கரய்யா அதிக முனைப்புடன் "வெள்ளையனே வெளியேறு' இயக்கத்துக்காக, மாணவர்களை ஒன்று திரட்டி ஊர்வலம் நடத்தினார். ஊர்வலத்தைக் கலைக்க போலீஸ் நடத்திய தடியடியில் சங்கரய்யா காயம் அடைகிறார். கைதாகிறார்.
1944-இல் சங்கரய்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளரானார். பின்னர், 1947-இல் நவமணி எனும் கம்யூனிஸ்ட் குடும்பத்தைச் சேர்ந்த கிறிஸ்தவப் பெண்ணை குடும்ப எதிர்ப்பையும் மீறி சங்கரய்யா திருமணம் செய்தார்.
சாதி, மத தீண்டாமைகளுக்கு எதிரான கண்ணோட்டத்தைக் கொண்டிருந்த சங்கரய்யா, மேடைகளில் பேசுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், தனது வாழ்க்கையிலும் கடைப்பிடித்தவர்.
கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் தடை செய்யப்பட்டபோது சங்கரய்யா தலைமறைவானார். சலவைத் தொழிலாளி வீட்டில் அழுக்கு துணி மூட்டைகளுக்கு நடுவில் மாதக் கணக்கில் பதுங்கி வாழ்ந்தார். தடை நீங்கியதும், கட்சிப்பணியுடன் பொதுத் தேர்தல் பணியிலும் ஈடுபட்டார். ஆனால், தேர்தல் களத்தில் சங்கரய்யாவுக்குத் தோல்வி காத்திருந்தது.
1957, 1962-இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல்களில், மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட சங்கரய்யா தோல்வியுற்றார். ஆனால் 1967, 1977, 1980-ஆம் ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றார்.
பின்னாளில், "நீங்கள் படித்து முடித்திருந்தால் நல்ல வேலைக்கு போயிருக்கலாமே?' என்று சங்கரய்யாவிடம் சிலர் கேட்டபோது, "நாங்கள் வேலை தேடி அலைபவர்கள் அல்ல; நாட்டு விடுதலையை விரும்பிப் போராடியவர்கள்' என்று பதில் வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


