/

பாடல் பிறந்த கதை..!

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்..?'' என்ற பாடலைக் கேட்டால், கேட்போரின் மனம் இன்றும் உருகும்.

News image

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

Updated On :24 ஆகஸ்ட் 2024, 6:30 pm

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்..?'' என்ற பாடலைக் கேட்டால், கேட்போரின் மனம் இன்றும் உருகும். அந்தப் பாடல் ரிக்கார்டிங் செய்யும்போது நடைபெற்ற சுவாரசிய நிகழ்வு தெரியுமா?

பல்லவிக்காக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன் மூன்று ட்யூன்கள் போட்டு காண்பித்தார். அதில், ஒன்று படக் குழுவினருக்குப் பிடித்துப் போக, பல்லவிக்காக வரிகளை

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்..

இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்..

நான் "அவன்' பேரை தினம் பாடும் குயிலல்லவா..

என் பாடல் "அவன்' தந்த மொழியல்லவா என்று எழுதினர். , பாடல் தயார்.

மறுநாள் ரிக்கார்டிங். விசுவநாதன்-ராமமூர்த்தி குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். பி.சுசீலாவும் வந்து தன் போர்ஷன்களை பாடிப் பார்க்கத் துவங்கிவிட்டார். ஆனால், டி.எம்.

சௌந்தரராஜன் வரவில்லை. சிறிது நேரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வர, பீம்சிங் பேசினார்.

'என்ன செளந்தரராஜன்.. குரல் ஒரு மாதிரியாக இருக்கு?''

'அதைச் சொல்லத்தான் ஃபோன் செய்தேன். நேற்று இரவு முதல் ஜலதோஷம். அதனால் இன்னைக்கு ரிக்கார்டிங்கை கேன்சல் செஞ்சுடுங்க. இரண்டு நாள் கழித்து வச்சுக்கலாம்.''

இப்போ மாதிரி ட்ராக் சிஸ்டம் எல்லாம் அப்போது கிடையாது. பாடகர்கள், இசைக் குழுவினர் எல்லோரும் ஒரே நேரத்தில் அமர்ந்து பாடலை ரிக்கார்டிங் செய்து முடிக்க வேண்டும். ஒருவர் தவறு செய்தாலும் அத்தனை பேரும் மீண்டும் வாசிக்க வேண்டும். இப்போது டூயட் பாடல் என்றால் பாடகி தன்னுடைய போர்ஷனை பாடி விட்டு போய்விடுவார். தன்னோடு உடன் பாடும் பாடகர் யார் என்பது பாடல் வெளியான பின்புதான் அவர்களுக்கே தெரியும்.

பீம்சிங்கோ, 'உங்களுக்கு ஜலதோஷம் மட்டும்தானா? அல்லது ஜுரம் ஏதாவது அடிக்கிறதா?''

'இல்லீங்க வெறும் ஜலதோஷம் மட்டும்தான்..''

'அப்படீன்னா உடனே புறப்பட்டு ரிக்கார்டிங் தியேட்டருக்கு வாங்க. நீங்க இப்போ பேசுகிற குரல்தான் இந்தப் பாடலுக்கு வேண்டும்'' என்றார் பீம்சிங்.

டி.எம்.சௌந்தரராஜனும் வந்து விட்டார். 'அப்படி என்னென்னே இன்று என்னுடைய குரலில் விசேஷம்?'' என்று கேட்க, இயக்குநர் சொன்னார்.

'இந்தக் காட்சியில் சிவாஜி உடல்நிலை சரியில்லாதவராக இருக்கிறார். அதோடு வாக்கிங் போகும்போது மழையிலும் நனைந்து விடுகிறார். அதனால் இந்தக் காட்சிக்கு இப்போதுள்ள உங்கள் ஜலதோஷக்குரல் கச்சிதமாக பொருந்தும்'' என்றார்.

டி.எம்.சௌந்தரராஜன் ஒத்திகை பார்த்து விட்டு ரிக்கார்டிங்குக்கு தயாரானார். அப்போது விசுவநாதன், ' அண்ணே.. மூக்கை உறிஞ்சுவது, தும்மல் போடுவது எல்லாத்தையும் ரிக்கார்டிங் துவங்கும் முன்னர் பண்ணிக்குங்க. இடையில் பண்ணிடாதீங்க..?'' என்றார்.

அதற்கு பீம்சிங், 'பரவாயில்லை, அப்படியே தும்மல் வந்தாலும் போடுங்க. படத்தில் சிவாஜி சாரையும் தும்ம வைத்து எடுக்கிறேன்'' என்று சொல்ல அனைவரும் சிரித்தனர். நல்லவேளையாக பாடல் முடியும் வரை டி.எம்.சௌந்தர

ராஜன் தும்மல் எதுவும் போடவில்லை. இப்போதும் கூட அந்தப் பாடலைக் கேட்கும்போது, அவருடைய ஜலதோஷக்குரல் நமக்கு நன்றாகத் தெரியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.