புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தேர்வர்களுக்கு வழிகாட்டி...

ஐ.ஏ.எஸ். பயிற்சியாளர் சிபிகுமரன்: கிராமப்புற இளைஞர்களின் வழிகாட்டி

News image
Updated On :1 ஜூன் 2024, 6:30 pm

சி.வ.சு.ஜெகஜோதி

ஐ.ஏ.எஸ். அலுவலர் எனும் லட்சியத்தோடு மு.சிபிகுமரன் இரு முறையும் முதல் நிலைத்தேர்வு, முதன்மைத் தேர்வு ஆகிய இரண்டிலும் தேர்ச்சி பெற்று நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இருந்தாலும், தனக்கு கிடைத்த அனுபவம் வாயிலாக பலரையும் ஐ.ஏ.எஸ். அலுவலர்களாக்கியுள்ளார். தேர்வர்களுக்கு அவசியத் தேவையான பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட பரமக்குடி அருகேயுள்ள "பகைவென்றி' கிராமத்தைச் சேர்ந்த இவர் சென்னையில் ஐ.ஏ.எஸ்.அகாதெமியில் பயிற்சி பெற்று டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில், நான்கு முறை தேர்ச்சி பெற்று வருவாய் ஆய்வாளராகத் தேர்வானவர்.

அவருடன் ஓர் சந்திப்பு:

குரூப்-2 தேர்வில் எத்தனை முறை வெற்றி பெற்றிருக்கிறீர்கள், எந்தெந்த மாவட்டங்களில் பணியாற்றியிருக்கிறீர்கள்?

2008-இல் கிருஷ்ணகிரி, 2009-இல் திருவண்ணாமலை, 2010-இல் நாமக்கல்,2011-இல் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் வருவாய் ஆய்வாளராக டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றேன். கிருஷ்ணகிரியில் ஆறு மாதங்கள் மட்டும் பணியாற்றிவிட்டு, அப்பணியை ராஜிநாமா செய்தேன். மற்ற மூன்று மாவட்டங்களுக்கும் தேர்வு செய்யப்பட்டேனே தவிர, பணியில் சேரவில்லை.

ஆட்சியராக வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் வேரூன்றி இருந்தது. ஐ.ஏ.எஸ். முதல்நிலைத்தேர்வு, முதன்மைத் தேர்வு என இரண்டிலும் தேர்ச்சி பெற்று நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற இயலாமல் போனது.

எனது 16 ஆண்டுகள் அனுபவத்தை கிராமப்புற இளைஞர்களுக்கு அளித்து வழிகாட்டியாக இருப்போம் என்று முடிவு செய்து, ஐ.ஏ.எஸ். பயிற்சி நிறுவனத்தில் பயிற்சியாளராகவும் பணியாற்றினேன்.

பின்னர், கிராமப்புற இளைஞர்களின் நலனுக்காகவே "ஆர்வம் கல்வி அறக்கட்டளை' என்ற அமைப்பை உருவாக்கி அதன் நிர்வாக இயக்குநரானேன். போட்டித் தேர்வுக்குச் செல்பவர்கள் எளிதில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி இருக்கிறேன்.

அந்த நூல்களின் சிறப்பு என்ன?

"நாளைய தலைமுறைக்கும் திருக்குறள்' என்ற நூல் இந்திய குடிமைப்பணி தேர்வர்களில் தமிழை விருப்பப் பாடமாக எடுத்து எழுதுகின்ற தேர்வர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். "நாளை நான் ஐ.ஏ.எஸ்.' எனும் நூல் ஐ.ஏ.எஸ். தேர்வை எழுதுவது எப்படி, தேர்வு முறைகள், தேர்ச்சி பெற்றவர்களின் வரலாறுகள் உள்ளிட்ட தகவல்கள்உள்ளன. குடிமைப் பணித் தேர்வு எழுதுபவர்களுக்கு மிகச்சிறந்த தன்னம்பிக்கை தரும் நூல்.

தினமணியில் 50 வாரங்கள் தொடர்ந்து கட்டுரையாக வந்தது.

"தமிழ்மொழி வளர்ச்சி மற்றும் வரலாறு' எனும் நூலில் தமிழ் வளர்ந்து வந்த வரலாறு, ஏற்பட்ட மாற்றங்களை விவரிக்கிறது.

"தமிழ் இலக்கிய சிறப்புகள்' எனும் நூலில் தமிழ் இலக்கியங்களின் வரலாறு, பல்வேறு கட்டங்களில் இலக்கியங்களின் தனித்தன்மை ஆகியவற்றை விவரித்துள்ளேன். "தமிழர் பண்பாடு, நாட்டுப்புறவியல்' என்ற நூலில் தமிழர்களின் பண்பாட்டு வாழ்வியல்,தமிழர்களின் கலை, கட்டடக் கலையின் வளர்ச்சி,நாட்டுப்புற மக்களின் வாழ்வியல் பாங்குகள் ஆகியவற்றை விவரிக்கிறது.

"திறனாய்வு, ஒப்பிலக்கிய கோட்பாடு' என்ற நூல் தேர்வர்கள் எளிமையாக திறனாய்வு செய்து, ஒப்பிலக்கிய பாடங்களை உணர்ந்து தேர்வுகளை எழுதும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. "தமிழர்களின் இலக்கிய உத்திகள்' என்ற நூலில் தமிழ் இலக்கியங்களின் உணர்வுகளை புலப்படுத்துவதற்காகவே காலம்தோறும் தமிழர்கள் சங்ககாலம் முதல் இன்று வரை பயன்படுத்தி வந்த உத்திகளை விவரித்திருக்கிறேன். மிக எளிய நடையில் புதிய நோக்கில் "புறநானூறு, குறுந்தொகை உரை' வெளியிடப்பட்டுள்ளது.

"கல்சுரல் ஹெரிடேஜ் ஆஃப் இந்தியா' என்ற ஆங்கில நூல் இந்திய குடிமைப்பணித் தேர்வு எழுதுபவர்களுக்காகவும், போட்டித் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காகவும் எழுதப்பட்டதாகும். இந்தியர்களின் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் தெளிவாக விளக்குகிறது இந்த நூல். இவற்றை எங்களிடம் போட்டித் தேர்வு எழுதுபவர்கள் அனைவருக்கும் இலவசமாகவே வழங்கி வருகிறோம்.

வேறு என்னென்ன உதவிகளை செய்து வருகிறீர்கள்?

தமிழ் வழியில் படித்தவர்கள்,கிராமப்புற மாணவர்கள், அரசுப் பள்ளியில் படித்தவர்கள்,அனைத்துப் பிரிவையும் சேர்ந்த பெண்களை நுழைவுத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு கட்டணமே இல்லாமல் இலவசமாகவே பயிற்சியளித்து வருகிறோம்.பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்களுக்காக மட்டும் உணவும், தங்குமிடமும், பயிற்சியும்,பயிற்சிக்காக கையேடுகளும் இலவசமாக வழங்குகிறோம்.

உங்களிடம் பயின்றவர்கள் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றிருப்பார்கள்?

ஐ.ஆர்.எஸ். பதவியில் 300 பேரும் ,ஐ.பி.எஸ்ஸில் 36 பேரும், ஐ.ஏ.எஸ்ஸில் 49 பேரும் என ஐநூறுக்கும் மேற்பட்டோர் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பல்வேறு மாநிலங்களில் அரசுத் துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இதுதவிர டிஎன்பிஎஸ்சி, ,காவல் துறைகளில் சுமார் 9 ஆயிரம் பேர் பயிற்சி பெற்று பணியாற்றுகின்றனர்.எனது 16 ஆண்டு கால அனுபவங்களே இவர்கள் உருவாக காரணங்களாகும்.

காவல் சார்பு ஆய்வாளர் பணிக்கு, எங்களில் பயிற்சி பெற்ற ஐநூறுக்கும் மேற்பட்டோர் விரைவில் தேர்வு செய்யப்படுவர் என்ற நம்பிக்கை உள்ளது. பொருளாதார ரீதியாக நலிந்த தேர்வர்கள் 50 பேருக்கு பயிற்சியளிக்கத் திட்டமிடப்பட்டு, இதுவரை 30 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு உணவு, தங்குமிடம், நான்கு மாத கால பயிற்சி, பயிற்சிக்கான நூல்களை இலவசமாக வழங்கிட முடிவு செய்துள்ளோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.