அழகான வெற்றிகளின் பட்டியல் தொடரும்!

சூரியின் வெற்றிக் கதை: சினிமா பயணத்தின் மறுபக்கம்
அழகான வெற்றிகளின் பட்டியல் தொடரும்!
Updated on
3 min read

சூரியிடம் கொஞ்சம் பேச்சுக் கொடுத்தால், வாழ்வில் வெற்றி என்பது இவ்வளவு துயரமானதா...? என எண்ணிவிடத் தோன்றும்! ஆனாலும், இஷ்டப்பட்டு ஏற்ற கஷ்டம் அது. இலக்கை அடையும் வரை தின வாழ்வின் சுமைகளை ஒரு பொருட்டாகக் கருதாதமல் வெற்றிக் கனி பறித்தவரின் சொல்லாத பக்கங்கள் நிறைய இருக்கின்றன...

"எங்கேயோ அந்த போஸ்டரைப் பார்த்தேன். புலி ஒன்று ஆக்ரோஷமாக மானைத் துரத்தும் படம். "நீ மானாக இருந்தால், புலியைவிட வேகமாக ஓடு. நீ புலியாக இருந்தால், மானைவிட வேகமாக ஓடு...' என்கிற அந்த வரிகள் என்னை பாதித்தது. ஏனென்றால் என் வாழ்க்கையே அதுதான். கட்டியணைத்து அன்பு கரம் கோர்க்கிறார் சூரி. "விடுதலை' படத்தைத் தொடர்ந்து "கருடன்' படமும் ஹிட் அடித்ததில் ஹீரோவாக அடுத்த கட்டம் போகிறார் சூரி.

20 வருடத்துக்கு மேலான சினிமா அனுபவம், இவ்வளவு படங்கள் திரும்பி பார்க்கும் போது என்ன தோன்றும்....

வறுமையை ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சினிமாவுக்காக சென்னை புறப்பட்டு வந்தவன் நான். பெரிதாக பின்னணி இல்லை. நண்பர் வட்டம் இல்லை. அம்மா கொடுத்த ஆயிரம், நான் கடன் வாங்கி வந்த ஆயிரம். இதுதான் என் மூலதனம். பசியுடன்

பணம், பொருள் என தேடி அலைந்த நாள்கள் அது. பெயிண்டிங், ஆர்ட் அசிடெண்ட், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என இப்படி பல வேலைகள் பார்த்திருக்கிறேன். தி. நகர் ஜவுளிக் கடைகளுக்கு எல்லாம் ஒரு காலத்தில் பெயிண்ட் அடித்தவன் நான். போத்தீஸ், சரவணா ஸ்டோர்ஸ் என எல்லா கடைகளிலும் கயிற்றில் தொங்கி கொண்டு பெயிண்ட் அடித்திருக்கிறேன். பெயிண்ட் அடித்துக் கொண்டே நான் சொல்லும் காமெடிக்கு அத்தனை ரசிகர்கள். சூரி இருந்தால் பொழுது போறதே தெரியலை... என என்னை வேலைக்கு அழைத்துப் போனவர்கள் பலர். ஒரு கட்டத்தில் சினிமா தாகத்தால் வருமானத்தின் ஒரு பகுதியிலிருந்து வடபழனி பக்கம் நடக்கும் திருவிழாக்களில் நாடகம் போட்டேன். அப்போது நான் போட்ட "இன்னாது கோரிக்கையா...' நாடகம் பெரும் பிரபலம். சந்தன கடத்தல் வீரப்பனின் மர்ம சாவு குறித்து அந்த நாடகம் காமெடியாக பேசும். இது மாதிரி நாடகம், பெயிண்டிங் வேலை என்று திரிந்த நாள்கள். அதன் பின் ஆர்ட் அசிடெண்ட், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என ஒரு வழியாக சினிமாவுக்குள் வந்தேன்.

அதன் நிறைய வேலைகள். எல்லாவற்றிலும் கொஞ்ச நாள்களே.... இதுதான் நிரந்தரம் என எந்த இடத்திலும் நின்றது கிடையாது. இப்போது கூட மதுரையில் அம்மன் ஹோட்டல் என்ற பெயரில் டீக்கடை, சாப்பாட்டுக் கடை ஆரம்பித்திருக்கிறேன். ஒரு பிடி சோறுக்காக அலைந்து திரிந்தவன் நான். அதனால் மற்றவர்களும் வயிறாற சாப்பிட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பித்திருக்கிறேன். தம்பிகள்தான் அதைபார்த்துக் கொள்கிறார்கள். வறுமையை ஜெயிக்க வந்தேன். கொஞ்சம் ஜெயித்திருக்கிறேன். இவ்வளவுதான் என் அனுபவம்.

"கருடன்' பட ஹிட்... உங்களைப் பற்றிய இயக்குநர்களின் பார்வை இன்னும் மேலோங்கும்...

வெற்றி அண்ணன் கொடுத்த வாய்ப்பைத் தக்க வைக்க முடியும் என்று நம்பினேன். என்னுடைய ரசிகர்கள் என்னை ஓட வைத்திருக்கிறார்கள். இன்றைக்கு இங்கே கிடைக்கிற விசில் சத்தம் எல்லாம் வெற்றி மாறன் அண்ணன் மனது வைத்ததால்தான். விடுதலைக்கு முன்.. விடுதலைக்கு பின் என்று என் சினிமா வாழ்வைப் பிரிக்கலாம். பெரிய ஸ்டார், சின்ன ஸ்டார் என எந்த வித்தியாசத்தையும் ரசிகர்கள் பார்ப்பதில்லை. கதை இருந்தால் போதும்... இந்த நிலை இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்தால், எல்லாமே மாறி விடும். கதைதான் முக்கியம். இதுதான் கதை என தீர்மானமாக பிடித்து விட்டால், அந்த கதையில் எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று விடுவேன். ஓடுகிற படத்தில் இருப்பதை விட, கதை உள்ள படத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன். இந்த நிலைப்பாடு கடைசி வரை இருந்தால் அழகான வெற்றிகளின் பட்டியல் தொடரும்.

என் அப்பாதான் எனக்கு ரோல் மாடல் என்பீர்கள்....

ஆமாம், இதை நிறைய இடங்களில் சொல்லியிருக்கிறேன். என் அப்பாதான் நான் முதன் முதலில் பார்த்த பெரிய காமெடியான மனுஷன். பேச ஆரம்பித்தால், அவர் நடைக்கு யாரும் வேகம் காட்ட முடியாது. அத்தனை மடக்கல், நக்கல், நையாண்டி இருக்கும். உங்க அப்பா முத்துச்சாமி அளவுக்கு, யாரும் காமெடி பண்ண முடியாது.. என அவர் செட் ஆள்கள் சொல்ல இப்போதும் நான் கேட்பதுண்டு. என்னுடைய உடல் மொழி, உச்சரிப்பு எல்லாமே அவரிடம் இருந்து வந்ததுதான். இப்போது அவர் என் கூட இல்லை. மிஸ் யூ டாடி.

முன்பெல்லாம் காமெடிக்கென தனி ட்ராக் இருக்கும்.... இப்போது அப்படியில்லையே....

அது தமிழ் நகைச்சுவையின் பொற்காலம். ட்ராக் இல்லாமல் காமெடி செய்வது பெரும் கஷ்டம். அதை ஒவ்வொரு சினிமாவிலும் அனுபவித்து வருகிறேன். கவுண்டமணி - செந்தில் சார் கூட்டணியில் வருடத்துக்கு 100 படம் வருமாம். இப்போது அப்படி ஒரு நிலை எந்த காமெடியனுக்கும் இல்லை. உதாரணத்துக்கு, ஒரு ஹீரோ வருடத்துக்கு 5 படம் நடித்தால், காமெடியன் 7 படம்தான் நடிக்க முடிகிறது. ஹீரோ கால்ஷீட் 55 நாள்கள் என்றால், காமெடியனுக்கு 45 நாள்கள். இதில் எங்கேயிருந்து காமெடி டிராக் வைப்பது. அப்போதெல்லாம் ஹீரோவும், காமெடியனும் சந்தித்துக் கொள்ளவே மாட்டார்களாம். காமெடி டிராக் தனியாக எடுக்கப்பட்டு சேர்க்கப்படும். இப்போது அப்படியல்ல. ஹீரோ இருந்தால், அங்கே காமெடியனும் இருந்தாக வேண்டும். ஹீரோவுடன் டான்ஸ் வரைக்கும் ஆட வைத்து விட்டார்கள். ஹீரோ சோகமாக இருந்தால், அங்கே நானும் சோகமாக இருக்க வேண்டும். அவர் ஜாலியாக இருந்தால், நானும் ஜாலியாக இருக்க வேண்டும் இதுதான் இப்போதைய சினிமா. எல்லா காட்சிகளிலும் மீட்டரில் உட்காரம் வசனம் பேச வேண்டும். இப்படி கஷ்டப்பட்டு நடிக்கும் படம் நன்றாக இருந்தால்தான் காமெடி எடுபடும். படம் தோல்வி என்றால் காமெடியும் தோல்வி. இப்போது சினிமாவில் இருக்கும் காமெடியன்களுக்கு இது பெரும சவால்.

விடுதலை பாகம் 2....

ரசிகர்களைப் போல் நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். எல்லாம் சரியாக நடந்தால், நான் அடுத்த தளத்துக்குப் போவேன். இந்தப் படத்தை பற்றி வெற்றி அண்ணாதான் பேச வேண்டும். அதுதான் நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com