பொ.ஜெயச்சந்திரன்
'இன்றைய இளைய தலைமுறையினர் மிகத் திறமைசாலிகள். அறிவிலும், ஆற்றலிலும் வல்லவர்களாக அவர்கள் இருந்தாலும், மனதளவில் அமைதியை இழந்து தவிக்கின்றனர். இதற்கு முக்கியக் காரணமே ஆன்மிகத்தை விட்டு விலகி நிற்பதாகும். ஆன்மிகம் என்பது மதத்துடன் மட்டுமே தொடர்புடையது அல்ல; வாழ்க்கை நெறிமுறைகளைச் சொல்லித் தரும் அற்புதமான பயணம்.
மனதைக் கட்டுப்படுத்துதல், நன்றி உணர்வு, பொறுமை, தன்னம்பிக்கை, மனிதாபிமானத்தை வளர்க்கும் ஒரே வழி ஆன்மிகம்தான். எந்த அளவுக்கு உயர்ந்த நிலைக்குச் சென்றாலும், நம் உள்ளத்தின் அமைதியைப் பாதுகாக்க வேண்டும். அதற்கு ஆன்மிகமே வலுவான அடித்தளம்' என்கிறார் முனைவர் ரத்னமாலா புரூஸ்.
இவர் ஆன்மிகச் சொற்பொழிவாளர், கவிதாயினி, எழுத்தாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளினி, திறன் மேம்பாட்டுப் பயிற்சியாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர், ஓவியர், அகில இந்திய வானொலி அறிவிப்பாளர், பேராசிரியர் உள்ளிட்ட பன்முகத்திறன்களைக் கொண்டு விளங்குகிறார்.
சென்னை கேளம்பாக்கத்தில் வசிக்கும் அவரிடம் பேசியபோது:
'நான் எம்.பி.ஏ. பல்கலைக்கழகத் தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றதோடு, பல பட்டங்களையும் பெற்றுள்ளேன். தற்போது இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகவியல் துறையின் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறேன். அறிவைப் பகிரும் அற்புதமான பயணமாக பேராசிரியர் பணியைத் தொடங்கினேன். அந்தப் பயணத்தின் உள்ளார்ந்த சாரம் ஆன்மிகத்திலேயே இருந்தது. மாணவர்கள் அறிவை மட்டுமல்ல; மன அமைதியையும் தேடுகிறார்கள் என்பதை உணர்ந்துள்ளேன்.
ஆன்மிகப் பேச்சு
இறைதேடல் இல்லாத கல்வி அமைதியைத் தராது. இறைபக்தி, வழிபாடு, பக்தி நூல்கள் மீதான ஈர்ப்பு ஆகியவையே என்னை ஆன்மிகப் பாதைக்கு இட்டுச் சென்றன. மண்டைக்காடு
பகவதியம்மன் கோயிலில் நான் ஆற்றிய முதல் உரையின் மூலம் என்னுள்ளிருக்கும் இறைத்திறனை உணர்ந்தேன். மக்களின் வரவேற்பும், அவர்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றமும் எனக்கு ஒரு புதிய திசையைக் காட்டியது. சிவகாசியில் உள்ள பள்ளியொன்றில் 1,500 மாணவர்களிடையே சமுதாயப் பங்களிப்பையும், பொறுப்பையும் அதிகரிக்க ஏதுவான உரையை நான் நிகழ்த்தியதையும் என்னால் மறக்க முடியாது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி, விராலிமலை சுப்பிரமணிய சுவாமி, குரங்கணி முத்துமாலை அம்மன், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி, நாகர்கோவில் நாகராஜா, வேளிமலை முருகர், சென்னைக்கருகேயுள்ள திருவிடந்தை நித்யகல்யாணப் பெருமாள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட கோயில்களில் ஆன்மிகச் சொற்பொழிவாற்றியுள்ளேன். பல்வேறு தொலைக்காட்சிகளில் நேரலையாகவும் பேசியிருக்கிறேன். தற்போது ஆன்மிகச் சொற்பொழிவுகள் என் வாழ்க்கையின் அங்கமாகவே மாறிவிட்டன.
இணையவழியில் எண்ணற்றோர் ஆன்மிக உரைகளைக் கேட்கின்றனர். ஒன்றைத் திரும்பத் திரும்பப் பார்க்கும்பொழுதோ, கேட்கும்பொழுதோ அதைப் பற்றிய சிந்தனையில் மனம் செல்லும். மாற்றம் நிகழும்.
எழுத்துப் பணி
எழுதுவதற்கு என்னை அதிகம் தூண்டுவது நொடிக்கொரு தரம் மாறும் மனித உணர்வுகள்தான். மகிழ்ச்சி, துன்பம், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், நம்பிக்கை ஆகிய அனைத்தும் என் எழுத்தின் விதைகள். நடக்கும் சிறிய சம்பவமும் என் கதைக்கு ஒரு கருவாகிவிடும். வாழ்க்கையில் நான் சந்தித்த மனிதர்கள், அவர்களின் போராட்டங்கள், மனநிலை மாற்றங்கள், வெற்றிகள் ஆகியவை என்னை மிகவும் பாதித்திருக்கின்றன. அந்த அனுபவங்களைக் கற்பனை கலந்து எழுத்தின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.
சமூகப் பொறுப்பு என்பது எழுத்தாளர்கள் அனைவருக்கும் வேண்டிய ஒன்று. எனது எழுத்துகளில் அதற்குத்தான் நான் மிக முக்கியமான இடத்தைத் தருகிறேன். ஏனெனில் எழுத்து என்பது வெறும் கலை அல்ல. அது சமூகத்தையே தலை
நிமிர்த்தும் கருவி. ஒரு எழுத்தாளராக நான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் ஒருவரின் சிந்தனையை மாற்றக் கூடிய சக்தியுடையது. ஆகவே, எனது படைப்பு ஒவ்வொன்றிலும் மனிதநேயம், ஒழுக்கம், நல்லெண்ணம் ஆகியவற்றை வலியுறுத்துகிறேன்.
நிறைய வாசியுங்கள். கூர்ந்து கவனியுங்கள். கல்கி, புதுமைப் பித்தன் எனத் தொடங்கி தற்கால இலக்கியம் வரை அனைத்தையும் வாசிப்பதே ஒரு நல்ல எழுத்தாளனுக்கு முதல் தகுதி. எழுத்தில் நேர்மையும், சமூகத்தின் மீதான அக்கறையும் இருக்க வேண்டும். புதிய எழுத்தாளர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தங்கள் படைப்புகளை உலகுக்கு அறிமுகப்படுத்துங்கள். தொடர் முயற்சியும், எதையும் புதிய கோணத்தில் பார்க்கும் திறனுமே உங்களை ஒரு சிறந்த படைப்பாளியாக்கும்.
கவிதை
'எமக்குத் தொழில் கவிதை' என்பார் பாரதி. ஆசிரியராக, கல்வியால் அவர் பெற்ற அறிவும், அனுபவமும் கவிதைகளில் மிளிர்ந்தன. அதேபோல் கல்வியால் நான் பெற்ற அறிவும், அனுபவமும் எனக்குக் கட்டுப்பாட்டையும், தெளிவையும், பொறுப்பையும் அளிக்கின்றன. கவிதைகள் எனக்குச் சுதந்திரத்தையும், புத்துணர்ச்சியையும் அளிக்கின்றன. இதற்காக நாள்தோறும் கிடைக்கும் நேரத்தை ஒழுங்குப்படுத்திக் கொள்கிறேன். கல்விப் பணிகளுக்கு ஒரு பகுதி, எழுத்துக்கும் படைப்புக்கும் ஒரு பகுதி என்று பகிர்ந்து கொள்கிறேன். இரண்டுமே ஒன்றுக்கொன்று துணைபுரிகின்றன. கல்வி தரும் அனுபவம் என் கவிதைகளில் பிரதிபலிக்கின்றன. கவிதைகளில் எழும் உணர்வுகள் என் கற்பித்தலின் ஆழத்தை இன்னும் அதிகரிக்கின்றன.
'காய்ந்த மண் ஈரமாயிற்று', 'ரத்னமாலா கவிதைகள்', 'வானம்பாடி', 'ஆழ்கடலின் மெüனம்' ஆகிய கவிதை நூல்கள், 'நட்சத்திரப் பூக்கள்', 'இயற்கையோடு பேசுகிறேன்', 'அம்பராத்தூளி' ஆகிய ஹைக்கூ கவிதைகள், 'ரத்னா', 'மனத்தோணி' ஆகிய சிறுகதைகள் உள்ளிட்ட 14 நூல்களை எழுதியிருக்கிறேன். இதில் சில நூல்கள் கல்லூரி மாணவர்களால் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
இணையத்தில் இலக்கியப் பணி
2019-ஆம் ஆண்டில் கன்னியாகுமரியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் தொகுப்பாளராகப் பணியாற்றியது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாகும்.
அமரர் கல்கி எழுதிய 'வரலாற்றுக் காவியங்கள்', மதனின் 'வந்தார்கள் வென்றார்கள்',
சு.வெங்கடேசனின் 'வேள்பாரி' உள்ளிட்ட முக்கிய எழுத்தாளர்களின் படைப்புகள் எனது குரலில் ஒலிப்புத்தகங்களாக 'தமிழோசை எப்.எம்.' எனும் யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளன. பல்வேறு தலைப்புகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒலி -ஒளிப்பதிவுகளை சேனல்கள், சமூக ஊடங்களில் பதிவேற்றியிருக்கிறேன்.
எனது தம்பியின் நினைவாகத் தொடங்கிய, 'அமர்ஜோதி கல்வி, சேவை அறக்கட்டளை' சார்பில் ஏழைகளுக்கு உணவு, கல்வி, மருத்துவ உதவிகளைச் செய்து வருகிறேன்.' என்கிறார் ரத்னமாலா புரூஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
என்னைப் புதைத்தாலும், எனது திட்டங்களைப் புதைக்க முடியாது! - முதல்வர் ஸ்டாலின்
அசோகன் - நான் சந்தித்த பிரபலங்கள் - 51

கலையே உயிர்மூச்சு...

பி. எஸ். வீரப்பா - நான் சந்தித்த பிரபலங்கள் - 48
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

