எளியவர்களின் எதிர்பார்ப்பில்லாத பயணம்!

காதல், காமம், காமெடி: பாலாஜி கேசவனின் புதிய சினிமா
எளியவர்களின் எதிர்பார்ப்பில்லாத பயணம்!
M S Raja Guhen
Updated on
2 min read

ஒரு சினிமா ரசிகனாக எனக்கு பாரதிராஜா, பாக்யராஜ், மணிரத்னம் ஆகியோரின் படங்கள் ரொம்பப் பிடிக்கும். அமெரிக்க இயக்குநர் ஃப்ராங்க் காப்ரா என்னை ரொம்பப் பாதித்தவர்.

இரண்டாம் உலகப் போர் சமயம், உலகம் முழுக்கவே போர் அழுத்தம் மக்கள் மனதில் ஒருவித வெறுப்பை உண்டாக்கி இருந்த போது, தன் சினிமாக்களில் பிரியத்தையும் நேசத்தையும் நிரப்பிக் கொடுப்பார் ஃப்ராங்க். சார்லி சாப்ளின், பாலுமகேந்திரா சார் படங்களிலும் நீங்கள் அந்த அழகை ரசிக்கலாம்.

நமக்குள் ஏதோ ஒரு சின்ன இலையை அசைக்கிறதுதான் ஒரு சினிமாவின் தாக்கமாக இருக்க வேண்டும். அப்படி ஒரு சினிமா காட்ட ஆசைப்பட்டுதான் இதை எடுத்தேன். படிக்கிற புத்தகம் மாதிரி, பார்த்து வளர்ந்த சினிமா மாதிரி இதுவும் ரொம்பவே எளிமையானது. பெரிய திட்டம் எதுவும் இல்லை.

இந்தக் கதைக்கு எது உண்மையோ, எது நேர்மையோ... அவ்வளவுதான் படம்'' என்று நம்பிக்கையாக பேசுகிறார் இயக்குநர் பாலாஜி கேசவன். லிங்குசாமி, எழில் ஆகியோரிடம் சினிமா கற்று வந்திருக்கிறார். படத்தின் பெயர் "எமக்குத் தொழில் ரொமான்ஸ்'.

தலைப்பே வசீகரமாக இருக்கிறது....

வரம்பு மீறிய காதல், காமம், பெற்றோர்களை ஏமாற்றுவது, பொய் சொல்லுவது.. இன்னும் இன்னப் பிற மீறல்களைத்தான் பல சினிமாக்கள் அர்த்தப்படுத்தி வந்திருக்கின்றன. இது அது மாதிரி இல்லாமல், வேறொரு மீட்டுருவாக்கத்தில் நான் எழுதிய கதை இது. நமக்கு திண்டுக்கல் பக்கத்தில் பட்டிவீரன்பட்டி கிராமத்துக்கு வாழ்க்கை. இப்போது பெரு நகர வாழ்க்கை.

ஆனாலும், எப்போதைக்குமான மனசு அந்தப் பள்ளி வாழ்க்கையிலேயே சிலாகிக்க விரும்புகிறது. சக தோழர்கள், ஆசிரியர்கள், அந்த மர நிழல், குளம், ஆறு என எதையும் மறக்க மறுக்கிறது மனசு. ஆயிரங்களில் இருந்து லட்சங்களுக்கு மாறின வாழ்க்கை கிடைத்தாலும், இன்னொரு முறை அந்த வாழ்க்கையை வாழவே முடியாது.

வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்பது மாதிரி, முகத்தால்... குரல்களால்... செயல்களால்... சாயல்களால்தான் நம் பிரிவுகளையும் பிரியங்களையும் நிரப்பிக் கொண்டே இருக்கிறோம். மனித மனம் காட்டை மறந்து, வீட்டின் சூழலுக்குப் பழக்கப்பட்ட மிருகம் போல எப்போதும் ஒரு நிர்பந்தத்துக்குக் கட்டுப்பட்டது. மிருகம் மிருகமாக இருக்க இயலாமல் தடுப்பது மிருகத்தின் கோணத்தில் பெருந்துக்கம்.

எங்கேயாவது ஒரு மரத்தடியில் அமர்ந்து, உள் இழுத்து முழுவதுமாக புதைந்து போயிருந்த நினைவுகளை எல்லாம் தூர்வாரி வெளியே இழுத்துப்போட்டால் எப்படி இருக்கும். அப்படி ஒரு தாக்கத்தில் எழுந்த உணர்வுதான் படம். பரவசம் கொடுக்கும் பயணம், எளியவர்களின் எதிர்பார்ப்பு இல்லாத பிரியம்... இப்படித்தான் இருக்கும் இது.

எந்த மாதிரி திரை பாணி வடிவம்....

கடந்து போன காலங்கள்தான். காதல்தான். எப்பேர்ப்பட்ட ஆன்மிக அனுபவம் அது. மலையின் முன் நிகழும் அற்புதம். காதலும் கூட ஆன்மிகத்தின் ஒரு வழிதான். காதல் மட்டும் அல்ல; எந்தத் தீவிரமான உணர்வும் ஆன்மிகத்துக்கான முதல் திறவுதான். ஷாஜகானைப் பற்றி எத்தனைக் கருத்துகள் உலவினாலும், நிரம்பி வழிந்த அவனுடைய காதல்தான் தாஜ்மஹால் என்ற இப்படி ஓர் அற்புதத்தை உருவாக்கி இருக்க முடியும். காதல், வாளைப் பறித்துவிட்டு... பூக்களைத் தருகிறது.

காதல், ஒரு வீரனைக் கோழையாக்குகிறது... கோழையை வீரனாக்குகிறது. எப்போதும் காதல் முரணுக்குப் பிறந்த குழந்தைதான். கண்ணுக்குத் தட்டுப்படாத பிரியங்களின், கரிசனங்களின் குவியல்தான் இந்தப் படம்.

உள்ளடக்க கதை பற்றி இன்னும் கொஞ்சம் பேசலாமே...

சூரியன் குளிர்ந்து போகும்வரை நட்சத்திரங்கள் முதுமையடையும் வரை நான் உன்னைக் காதலிப்பேன் என்று எப்படிக் காதலிக்க வேண்டும் எனக் கற்றுத்தந்தார் ஷேக்ஸ்பியர். அப்படித்தான் இந்த காதலும். உள்ளார்ந்த உணர்வை, அன்பை, காதலை நகைச்சுவையின் வழியில் சொல்ல வருகிறேன். ஒரே மாதிரியான சினிமாக்கள் பார்த்து எல்லோருக்கும் ஒரு அலுப்பு இருக்கிறது.

காமெடி, பேய் இதுதான் மாறி மாறி இருக்கிற ட்ரெண்ட். ஆனால் காதல் படங்களுக்கு எப்போதுமே ஒரு கூட்டம் உண்டு. கரோனா கால முடக்கத்துக்குப் பின்னும் ரசிகர்கள் தியேட்டருக்கு வருகிறார்கள். அவர்களுக்கு நன்றி. நல்ல படங்களுக்கு வந்த கூட்டம் எல்லாம் நல்ல சினிமாக்களின் பின்னால் நிற்கிற கூட்டம். அப்படியான ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும். அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா... இந்த இருவருமே இந்த காதலுக்கு ஆதாரம்.

லிங்குசாமி, எழில் இருவருமே உணர்வுகளை கடத்துகிற இயக்குநர்கள்...

கண்டிப்பாக... அதை நானும் உணர்ந்திருக்கிறேன். எல்லாமே வாழ்க்கையை சொல்லி தந்த படங்கள். நானும் அப்படித்தான்... இங்கே நடப்பது, பத்திரிகைகளில் படிப்பது, ஏதோ ஒரு சந்திப்பு, சம்பவம் இதுதானே இங்கே கதை. அப்படித்தான் இதுவும்.

உணர்வுகளை கடத்தி விடும் எந்த படமும் இங்கே எல்லோருக்குமான சினிமா என்பதை புரிந்து கொள்ள வேண்டும். "தி கோல்ட் ரஷ்' என்று ஒரு படம். பனிமலையில் புதைந்து கிடக்கிற தங்கப் புதையலைத் தேடிப் போகிற பயணம்.

அதில் சார்லி சாப்ளினும் ஒருத்தர். ஓயாமல் அடிக்கிற பனிப்புயலில் பசி பந்தாடும். ஒரு கட்டத்தில் பசி.. பசி... அங்கே ஆரம்பிக்கும் பயம். இவன் நம்மை அடித்து தின்று விடுவானோ என்று ஒவ்வொருத்தருக்கும் பயம். தூங்காமல், நிம்மதியில்லாமல் ஒவ்வொருத்தரும் பயத்தில் அலைவதாக படம் போகும். அட, ஒரு இங்கிலாந்துக்காரன், அமெரிக்காவில் படம் எடுத்தவன் பசியைப் பற்றி எப்படி இப்படி யோசித்தான் என்று ஆச்சரியமாக இருந்தது.

அதுதான் மானுடத்தை தேடுகிற கலைஞன் மனசு. காதலியை கரம் பிடிக்க இந்த சமூகத்தில் நடக்கும் பிரச்னைகள் என்னென்ன என்பதை, அவன் சந்திக்கிற மனிதர்கள், சிறு பயணம் என எங்கெங்கும் இதில் உணர்வுகள் நிறைந்து கிடக்கிற கதை. ஆனால், அதே அளவுக்கு காமெடியும் சரியாக இருக்கிற படம். நிறைய வசனங்கள் இருக்கும். ஆனால், அதுவெல்லாம் சூழலுக்கானது. அப்படி ஒரு அழகில் வந்திருக்கிறது படம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com