

கடமை உணர்வுடையவர்க்கும் காதல் உணர்வுடையவருக்கும் தூக்கம் வராது. இரவுப்பொழுதில் இத்தகையவர்கள் விழித்தே இருப்பார்கள். சிந்தனை ஒரு பொருளையே மையமாகக் கொண்டு சுழலும்.
நாடு காவல் செய்யும் கடமை பூண்டவர் எல்லையில், பனிமலைப் பகுதிகளில், உடம்பை ஊடுருவும் குளிரில். மனைவி மக்களைத் தொலைவில் பிரிந்த தனிமையில், துப்பாக்கியே துணையாக நின்று நெடிது விழித்துத் தன் பணியைச் செய்கிறார்.
அவரை நோக்கிச் சரமாரியாகக் குண்டு மழை பொழியலாம்; நிலச்சரிவில் அவர் புதைய நேரலாம். உடல் பனியில் விறைக்கலாம்; இன்னும் எத்தனையோ இடர்கள் வரலாம். அவர் உள்ளம் கடமையில் ஆழ்ந்து வைராக்கியம் பூண்டிருக்கிறது. இவர்கள் எப்படித் தூங்க முடியும்? 'நாட்டை நினைப்பாரோ எந்த நாள் போய்க்காண்பதென்று வீட்டை நினைப்பாரோ' என்பது போல அவர் நிலை இருக்கும்.
உள்ளத்தை ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு, அவ்வொருவரைப் பிரிந்து நிற்பவர் ஆணாயினும் பெண்ணாயினும், இரவுப்போதில் உறங்காமல் காத்திருக்கும் காதலர் நிலையும் அத்தகையதுதான்.
'தென்றல் உறங்கிடக் கூடுமடி
என் சிந்தை உறங்காது'
என்கிறாள் தலைவி. வான்மேகமே போய் உரைப்பாய் என் உள்ளத்தில் குடியிருக்கும் ஒரு பேதைப் பெண் இரவில் தனிமையில் அழுதிருப்பாள். விரைவிலே நான் வருவதாகப் போய்ச் சொல்லுங்கள் என்கிறான் தலைவன் ஒருவன்.
ஓடுகின்ற மேகங்காள்
ஓடாத தேரில் ஒரு
கூடு வருகிறதென்று கூறுங்கள்
என்று முகிலினத்தைத் தூதுவிடுகின்றான். இரவு நீள நீள மனத்துயர் இருவருக்கும் பெருகுகிறது. தென்றல் சுடுகிறது; நிலவு காய்கிறது. மனம் நெஞ்சைப் புண் செய்கிறது. தோழியே பகைபோல் தோன்றுகிறாள். உணர்ச்சியற்று உறங்குகிறதே இவ்வூர். எனது துயரில் இவ்வூருக்குப் பங்கில்லையா எனக் கொதிக்கிறாள் தலைவி.
உருவெளியில் தலைவியின் உருக்கண்டு மனமுருகி வெதும்புகிறான். தலைவியின் காட்சி வந்துவந்து மறைகிறது. மண்ணும் மரமும் செடியும் கொடியும் மலரும் அவள் போலத் தோன்றுகின்றன. இதை அகத்துறை 'நோக்குவ எல்லாம் அவையே போறல்' என்கிறது.
சங்க அக இலக்கியம் காதல் காட்சிகளின் பெட்டகம்; வைரமணிகள் துலங்கும் வைப்பகம். அதிலிருந்து சிலவற்றை இங்கு காணலாம்.
தலைவி ஒருத்தி கேட்கிறாள்: 'தோழி! தினைப்புனக் காவலில் நாம் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்து அப்புனத்தின் பக்கத்தே நின்ற தலைவனைப் பார்த்தவர்கள் பலர். மற்றவரெல்லாம் எந்த மாற்றமும் தாக்கமும் அடையவில்லை. ஆனால், என் கண்கள் மட்டும் இரவெல்லாம் துயிலாமல் இருக்கின்றனவே ஏன் தோழி?' என்று கேட்கிறாள்.
கபிலரின் தலைவி இவள். எத்தனையோ பேர் இருக்க என்னைத் துயிலாதவளாக ஆக்கியது ஏன் என்று கேட்கிறாள். திரைப்பாடலாயிலும் கவிஞர் கண்ணதாசன் இதே கேள்வியைத் தலைவி தொடுப்பதாகப் பாடுகிறார்.
'மாலைப் பொழுதின் மயக்கத்திலே கனவு கண்டேன் தோழி!'
இது இரவில் விளைந்த கனவன்று. மாலை மயக்கத்தில் வந்த கனவு. அடுக்கடுக்காக நிகழ்ச்சிகள் விரிகின்றன. தலைவியின் துயர அலைகள் கரைகடந்து போகின்றன. இந்தப் பாட்டுக்கெல்லாம் மூலம் கபிலரின் அகப்பாட்டேயாகும் (அகம். 82).
'அங்கே மாலை மயக்கம் யாருக்காக?',
'கனவு கண்டேன் தோழி நான் கனவு கண்டேன்!',
'நம் காதல் கனிந்து வரக் கனவு கண்டேன்',
'விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே'
என்றெல்லாம் காதலர்களின் துயரமும் தனிமையும் இன்ப துன்பக் கூற்றோடு பொருந்த வருவனவெல்லாம் நம் அக இலக்கிய மரபை ஒட்டி வருவனவேயாகும். இப்போது கபிலர் காட்டும் தூங்காத இரவைக் காண்போம்.
அசைகின்ற மூங்கிலை வண்டுகள் துளையிட்டன. அவற்றில் காற்றுப் புகுந்தது; கேட்க இனிய குழலிசை கிளர்ந்து எழுந்தது. அழகிய அருவி பாறையின் மேலே குதித்து மத்தளம் போல முழங்கியது. கலைமான்கள் வங்கியம் போல ஒலி வினளத்தன. வண்டுகள் யாழென இசைத்தன. இந்த இசைநிகழ்ச்சியை மந்திகள் நல்லவையாய்க் கேட்டபடி இருந்தன.
இவ்விசைக் கேற்ப மயில்கள் ஆடின. இந்த ஆடலும் பாடலும் அவன் நாட்டில் நிகழ்வன. அவன் 'இங்குத்தினைப்புனம் வந்து நிற்க அவனைப் பார்த்ததிலிருந்து என் உறக்கம் போயிற்றுத் தோழி!' என்கிறாள்.
காதல் துயரை விளைத்தது. கண்களும் மூடவில்லை என்பதற்குக் காட்டில் நிகழும் இசை நிகழ்ச்சியைக் கூறுவானேன். சங்க அக இலக்கியப் பண்பு அதுதான். பிரிவோ, வருத்தமோ, மகிழ்ச்சியோ எதுவாயினும் ஓர் இயற்கைப் பின்புலக் காட்சியில் வைத்துச் சித்தரித்துக் காட்டுவதே சங்க அகப்பாடல். இந்த இயற்கை வருணனையில் உள்ளீடான ஒரு பொருள் இருக்கிறது. அதுதான் உள்ளுறை எனப்படுவது.
'அந்தத் தலைவன் காட்டில் இயற்கையிலேயே உருவான இசை அமைதியாக நடைபெறுகிறது. மந்திகள் தம் செயலொடுங்கிக் கேட்குமளவு இசை விலங்கு மனத்தையும் உருக்குகின்றது. இப்படிப்பட்ட நாட்டின் தலைவன் என்னை உறங்காமலிருக்கச் செய்யலாமா?' என்பதுதான் அந்த உள்ளுறை. 'கண்ணே! நீதானே இந்தக் காதல் துயர் தந்தாய்! பின் நீ ஏன் உறங்காமல் இருக்கின்றாய்? என்று கேட்பதாக வள்ளுவர் கூறுகின்றார்.
இமைகளை மூடினால் உறக்கம் வந்து விடுமா? உள்ளம் அமைதி பெற்று உறங்க வேண்டும். கண்களும், அடிமனமும் தம் செயலொழிந்து ஓய்வில் உறைய வேண்டும். காற்றுறங்கும் மலையுறங்கும் கண் உறங்கவில்லை என்று நடு இரவில் ஒரு சோகக் குரல் கேட்கிறது. இது அவள் நிலை.
அவனும் அப்படித்தான் உறங்காத விழிகளோடு தனிமையில் நெஞ்சத்தில் துயரமேகங்கள் படர்ந்திருக்கத் தனித்து உறைகின்றான். ஒரு காலத்தில் இவர்கள் ஒன்றாக இருந்தபோது உண்டான மகிழ்ச்சியில் உறங்கவில்லை. இப்போது பிரிவால் உண்டான துயரத்தில் உறங்கவில்லை. காதல் கண்களைத் தண்டித்துவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த வாரம் கலாரசிகன் - 08-03-2026

பி. எஸ். வீரப்பா - நான் சந்தித்த பிரபலங்கள் - 48

ஹிந்து – முஸ்லிம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின்
நாவல்கள் பிறந்த விதம்...
வீடியோக்கள்

ஈரான் போர், பெருந்தொற்று காலத்துக்கு இழுத்துச் செல்கிறதா?: சுமந்த் ராமன் கவலை | US Israel Iran War |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திமுக கூட்டணி: நீடிக்கும் சிபிஐஎம்; வெளியேறிய தவாக | News and Views | Epi - 17 | Sarathkumar
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியிலிருந்து விலகிய த.வா.க! Velmurugan பேட்டி | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

திறக்கப்பட்ட கூட்டணிக் கதவுகள்...யாரும் வராததால் ? | TVK Vijay | TN Election 2026 | Alliance
தினமணி வீடியோ செய்தி...

