அரிய நாணயங்களைச் சேகரிக்கும் புலவர்..

பாரம்பரிய நாணயங்களின் பாதுகாவலர்: புலவர் வீ.வீரமணி வீராசாமியின் அரிய சேகரிப்பு
அரிய நாணயங்களைச் சேகரிக்கும் புலவர்..
Published on
Updated on
2 min read

முப்பத்து ஐந்து ஆண்டுகளாக அரிய பன்னாட்டு நாணயங்கள், பணத்தாள்கள், அஞ்சல் தலைகளைச் சேகரித்து, கண்காட்சிகளை நடத்தி வருகிறார் தமிழ்ப் புலவர் வீ.வீரமணி வீராசாமி.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகிலுள்ள பேளூர் கிராமத்தைச் சேர்ந்த இவர் எழுபத்து ஒரு வயதிலும், பல்வேறு சேவைப் பணிகளில் ஈடுபட்டுவருகிறார்.

அவரிடம் பேசியபோது:

""மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் திருமடத்துத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றேன். அருள்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கத்தின் காளியாபுரம் பழனியம்மாள் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் முப்பத்து இரண்டு ஆண்டு தமிழாசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினேன். பத்து ஆண்டுக்கு முன் ஓய்வு பெற்றேன்.

கோவை மாவட்டத்துக்கு உள்பட்ட மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆஸ்தானப் புலவராகவும் சில ஆண்டுகள் பணிபுரிந்தேன். மருதமலை கோயில், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில்கள் குறித்து ஆய்வு மாணவர்களுக்கும், திருச்சி கலைக்காவேரி கவின் கலைக்கல்லூரியில் நடனச்சிற்பங்கள் குறித்து மாணவர்களுக்கும் உதவி புரிந்துள்ளேன்.

பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் 10 ஆண்டுக்கும் மேலாக ஞாயிற்றுக்கிழமைகளில் வாராந்திர சமயச் சொற்பொழிவைஆற்றி வருகிறேன்.

சேலம் வரலாற்று ஆய்வு மையத் துணைத் தலைவர் இருந்துவரும் நான், 35 ஆண்டுகளுக்கு மேலாக, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரிய பன்னாட்டு பாரம்பரிய நாணயங்கள், அஞ்சல் தலைகள், பணத்தாள்களைச் சேகரித்து பாதுகாத்து வருகிறேன்.

கல்வி நிலையங்கள், கருத்தரங்குகளில் கண்காட்சிகளை நடத்தி மாணவர்கள், பொதுமக்கள், வரலாற்று ஆர்வலர்கள் இடையே நாணயங்கள், பணத்தாள்கள் உருவாகிய விதம், வளர்ச்சி மாற்றங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.

தஞ்சைப் பெருவுடையார் கோயில் படம் பொறித்த ஆயிரம் ரூபாய் பணத்தாள்- சிறப்பு நாணயம், தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் ஆயிரமாண்டு வெள்ளி நாணயம்,

புரி ஜெகந்நாதர் கோயிலின் வெள்ளி நாணயம் மற்றும் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., சி. சுப்பிரமணியம், எம்.எஸ்.சுப்புலட்சுமி உள்ளிட்ட ஆளுமைகளின் சிறப்பு வெள்ளி நாணயங்களைப் பாதுகாத்து வருகிறேன்.

யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ள மரபுச் சின்னங்கள் இடம் பெற்றுள்ள பல்வேறு நாடுகளின் பணத்தாள்களும், பன்னாட்டுப் பணத்தாள்களின் தொகுப்பில் ஒற்றை எண் கொண்ட பணத்தாள்கள், இரட்டை எண் கொண்ட பணத்தாள்கள்களும் எனது சேகரிப்பின் சிறப்பாகும்.

பி.பெரியார்மன்னன்

மகாத்மா காந்தியின் நினைவு அஞ்சல் தலைகள்(1948), நூற்றாண்டு நினைவு சிறப்புப் பணத் தாள்கள் (1969), நூற்றாண்டு வெள்ளி நாணயம் (1969) ஆகியவையும், அஞ்சல் துறை வெளியிட்ட தபால் தலை தொகுப்பும், அமெரிக்க டாலர், சுவிஸ் பிரான்க், ஆஸ்திரியா யூரோ ஆகிய மூன்று வகையான பண மதிப்பில் யுனெஸ்கோ அஞ்சல் துறையானது வெளியிட்ட அஞ்சல் தலைகளும் , செக் குடியரசு, அயர்லாந்து குடியரசு, கரிபியன் தீவுகளான நெவிஸ், மொன்செராட் உள்ளிட்டவற்றின் அஞ்சல் தலைகளையும் சிறப்புப் பெற்றவையாகும்.

தமிழ், ஆன்மிகப் பணி, அரிய பொருள்கள் சேகரிப்புப் பணிகளுக்காக, பல்வேறு அமைப்புகளின் விருதுகளைப் பெற்றுள்ளேன்.

சமூக ஊடகங்களில் தொடர் கட்டுரைகளை எழுதி, இளைய தலைமுறையினருக்கு இந்திய வரலாறு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.

தற்போது நாணயங்கள், பணத்தாள்கள், அஞ்சல் தலைகள் உருவான விதம் வரலாறு குறித்து புரிதல் இல்லாததால், கண்காட்சிகளை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். இதனால் எனக்கு மன நிறைவு கிடைக்கிறது. எனது பணிகளுக்கு மனைவி அமுத சரசு, மகன் உமாபதி, மகள் மேகலை ஆராத்யா மற்றும் குடும்பத்தினர் பக்க பலமாக இருக்கின்றனர்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com