பல்லவர்களும் பாண்டியர்களும் போற்றி வளர்த்த கலைமரபை, அவர்களுக்குப் பின்பு வந்த பிற்காலச் சோழர்களும் தொடர்ந்து ஆதரித்ததால், அது மென்மேலும் வளர்ச்சியடைந்தது. எனவே, சோழர் காலமானது 'கலைகளின் பொற்காலம்' என வர்ணிக்கப்படுகிறது. குறிப்பாக, ஐம்பொன் சிலை வடிவமைப்பில் சோழர் காலத்துக்கு இணையாக வேறெதுவும் இல்லை.
டெல்டா மாவட்டங்களில் கண்டெடுக்கப்பட்ட சோழர் கால ஐம்பொன் சிலைகள் தஞ்சாவூர் அரண்மனை வளாகத்திலுள்ள கலைக்கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு நடராஜர் சிலைகளுக்கு மட்டுமே தனி அரங்கம் உருவாக்கப்பட்டு, கடந்த ஜூலையில் திறக்கப்பட்டது.
இந்தக் கலைக்கூடத்தின் காப்பாட்சியர் எஸ். இளையராஜாவிடம் பேசியபோது:
ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் 1951- ஆம் ஆண்டிலிருந்து 1985- ஆம் ஆண்டு வரை சோழர், நாயக்கர் காலத்தைச் சார்ந்த ஏறக்குறைய 250 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. 9-ஆம் நூற்றாண்டிலிருந்து 16-ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சார்ந்த இவை அனைத்தும் ஒரே இடத்தில் தஞ்சாவூர் கலைக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ளன.
தற்போது நடராஜர், சிவகாமி சிலைகளையும் சேர்த்து 32 சிலைகள் தனி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் செம்பு, பித்தளை, ஈயம், தங்கம், வெள்ளி ஆகியவற்றாலான ஐம்பொன்னால் வார்க்கப்பட்டவைகளாகும். சிலைகளில் வேலைப்பாடு மிக நுணுக்கமாக இருக்கும். வேறு எந்த சிலைகளிலும் இதுபோன்று காண முடியாது.
ஆனந்த தாண்டவ கோலத்தில் காணப்படும் இந்தச் சிலைகளில் வலது கால் தரையில் ஊன்றப்பட்ட நிலையிலும், இடது கால் தூக்கிய நிலையிலும் இருக்கின்றன. இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற தத்துவத்தின் அடிப்படையை உணர்த்தும்.
இதில், 10 - 11 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த விழித்து மூடுதல் சிலை மிக அரிதானது. ஒவ்வொரு கரமும் பார்த்தல், காத்தல், அழித்தல், அருளல் ஆகியவற்றை உணர்த்தும் விதமாக இருக்கிறது. இறைவன் இயங்கிக் கொண்டிருக்கிறார் என்பதைக் காட்டும் விதமாக விரிசடை வார்க்கப்பட்டிருப்பது மிகவும் தத்ரூபமாக உள்ளது.
இடுப்பில் கட்டப்பட்டுள்ள கச்சை பறந்து விரிந்திருப்பதும் மிக நேர்த்தியாக இருக்கிறது. சடையில் காணப்படும் கங்கை, மூன்றாம் பிறை, தலையின் உச்சியில் எலும்புக் கூடு, புலித்தோல் ஆடை, வலது காதில் மகர குண்டலம், இடது காதில் காதோலை போன்றவை மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அறியாமையை விட்டொழித்து இறைவனை மட்டுமே சிந்தித்து விழிப்புடன் இருந்தால் துன்பம் நேராது என்ற தத்துவத்தை உணர்த்துகிறது இச்சிலைகள்.
இதேபோல, 11 - 12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சிவகாமி சிலையில் கழுத்திலுள்ள ஆபரணங்கள், கையில் வளையல், நகம், காலில் மகர கொலுசு, ஆடையில் பூ வேலைப்பாடு, வரி வடிவம், சடை, சிரச்சக்கரம், முகத்தில் மூக்கு, வாய், கன்னம், நெற்றி போன்றவை மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
எந்தவித தொழில்நுட்பமும் இல்லாத அந்தக் காலத்திலேயே இவ்வளவு தத்ரூபமாக வடிவமைத்திருப்பது வியப்பளிக்கிறது. சிலைகளில் சோழர் காலம், நாயக்கர் கால வடிவமைப்பின் நேர்த்தி, நுட்பங்களையும் அறிய முடிகிறது.
இந்த அரங்கத்துக்கு அடுத்துள்ள தர்பார் கூடத்தில் சோழர், நாயக்கர் காலத்தைச் சார்ந்த சிவன், விஷ்ணு உள்பட 103 சிலைகள் இடம்பெற்றுள்ளன. இதில், சோழர் காலத்துக்கு உள்பட்ட 11 - 12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ரிஷப வாகன தேவர் சிலையில் தலையில் முடி மகுடத்தில் பாம்பு படம் எடுத்த நிலை, எருக்கம்பூ சூடியிருப்பது, அழகாக நின்று ரிஷபரின் மீது கை வைத்திருக்கும் பாணி போன்றவை மிக நேர்த்தியாக வடிமைக்கப்பட்டுள்ளது. இதில், ரிஷப வாகனம் மட்டும் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. மிக அரிதான இச்சிலை வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.
ஒவ்வொரு சிலையும் தனித்தனியாக கண்ணாடி பெட்டியில், மின்னொளியில் ஜொலிக்கும் விதமாக வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சிலைகளின் கீழே அதனுடைய காலம், கண்டெடுக்கப்பட்ட இடம், அச்சிலையில் காணப்படும் சிறப்புகள் போன்ற விவரங்களும் பார்வையாளர்கள் அறிந்து கொள்வதற்காகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், விரிவாக்கக் கூடத்தில் 33 சிலைகள் இடம்பெற்றுள்ளன. சிலைகளை மாதத்துக்கு ஒருமுறை பாரம்பரிய முறையில் எந்தவித சேதமும் ஏற்படாத வகையில் வேதிப்பொருள்கள் கொண்டு சுத்தப்படுத்தி பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால் சிலைகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் வாழ்நாள் நீடிக்கிறது' என்கிறார் இளையராஜா.