பாலைவனத்தில் விளையும் ஆப்பிள்!

'குளிர்ந்த காலநிலையே ஆப்பிள் விளைச்சலுக்குத் தேவை' என்பது மாறியுள்ளது.
பாலைவனத்தில் விளையும் ஆப்பிள்!
Updated on
2 min read

'குளிர்ந்த காலநிலையே ஆப்பிள் விளைச்சலுக்குத் தேவை' என்பது மாறியுள்ளது. மணல் மேடாகவும் வறண்டதாகவும் இருக்கும் தார் பாலைவனத்தில் கோடை வெப்பநிலை 49 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும். அத்தகைய பாலைவனம் உள்ள ராஜஸ்தானின் சிகார், ஜுன்ஜுனு மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் ஆப்பிள் விளைச்சலில் சாதனை புரிந்து வருகின்றனர்.

சிகாரில் உள்ள பெரி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் தேவி கேதர் என்ற பெண் விவசாயியின் எளிமையான சிறிய பரிசோதனையானது வெற்றிக்கரமான ஆப்பிள் பழத்தோட்டத்தை உருவாக்கும் என்று நினைத்துப் பார்க்கவில்லை.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

'குஜராத்தில் உள்ள ஒரு அறக்கட்டளை 2015-இல் எனக்கு ஒரு ஆப்பிள் மரக்கன்றை வழங்கியது. எங்களது ஒன்றேகால் ஏக்கர் நிலத்தில் எலுமிச்சை, கொய்யா ஆகியவற்றை நீண்ட காலமாகப் பயிரிட்டு வந்தோம். ஆப்பிள் பயிரிட்டபோது, அண்டை நிலத்தார்கள் கேலியாகச் சிரித்தனர். தண்ணீர் ஊற்றினோம், தேவைக்கேற்ப கரிம உரங்களைப் பயன்படுத்தினோம். ஒரு வருடம் கழித்து, ஆப்பிள் தளிர் மரமாகி, ஆப்பிள்கள் விளைந்தது. இரண்டாவது ஆண்டில், ஒரு ஆப்பிள் மரம் கிட்டத்தட்ட 40 கிலோ பழங்களைத் தந்தது.

ஒவ்வொரு பருவத்திலும் 6 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான ஆப்பிள் பழங்களை விளைவிக்கும் ஒரு செழிப்பான ஆப்பிள் பண்ணையாக மாற்றும் காமதேனுவாக அந்த ஆரம்ப மரக்கன்று மாயாஜாலம் செய்தது.

ராஜஸ்தான் அரசிடமிருந்து 'ஆர்கானிக் சான்றிதழ்' பெற்றோம். ஹிமாச்சல, காஷ்மீரில் விளையும் ஆப்பிள்களின் சந்தை விலை ஒரு கிலோவுக்கு ரூ.100- க்கு விற்கப்படும் சூழலில், ராஜஸ்தான் ஆப்பிள்களை கிலோ ரூ.150- க்கு விற்கிறோம்.

தீவிர வெப்பநிலையைத் தாங்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட 'ஹெச்.ஆர்.எம்.என். 99' ரக ஆப்பிள் வகைதான். கோடை வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸைவிட அதிகமாக இருக்கும் வறண்ட பகுதிகளில் இந்த வகை வளரக்கூடியது.

எங்கள் உறவினர்கள், அண்டை நிலத்தினர் எங்களிடம் அதிக மரக்கன்று

களைப் பெற்று, தங்கள் பழத்தோட்டத்தை 100 ஆப்பிள் மரங்கள் கொண்ட பண்ணையாக விரிவுபடுத்தினோம். மரங்களின் எண்ணிக்கையைப் பெருக்க ஒட்டு ரக தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தினோம். ஆப்பிள் மரங்கள் வளர்ந்தவுடன் மிகக் குறைந்த நீரைப் பாய்ச்சினால் போதும். ஆப்பிள் மரம் ஐந்து வயதை அடையும்போது, இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

ஒவ்வொரு பிப்ரவரியிலும் மரத்தில் பூக்கள் பூக்கத் தொடங்கி, ஜூன் மாதத்துக்குள் ஆப்பிள்கள் அறுவடைக்குத் தயாராகிவிடும்' என்கிறார் சந்தோஷ் தேவி கேதர்.

கர்நாடகத்தில்...

கர்நாடகத்தின் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள முதோல் தாலுகாவின் குலாலி கிராமத்தில், கடுமையான வெப்பம் காணப்படும். சில சமயம் 42 டிகிரி சென்டிகிரேடை கூட தாண்டும். இந்தச் சூழலில் அங்கு ஆப்பிள் விளைந்துள்ளது.

இந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் கரும்புதான் பிரதான பயிர். இங்குள்ள விவசாயி ஸ்ரிஷைல் டெலி, சில சமயம் சோளம், கோதுமை, மாதுளை,கொண்டைக்கடலையும் பயிரிடுவார். அவர் முதல் தடவையாக முழு முயற்சி எடுத்து, தனது ஏழு ஏக்கர் நிலத்தில் மகாராஷ்டிராவின் ஷிரடியில் உள்ள ஒரு தனியார் நர்சரியில் இருந்து அண்ணா வகை 2, 600 ஆப்பிள் மரக்கன்றுகளை வாங்கி வந்து நட்டார். மிகுந்த அக்கறை எடுத்து பராமரித்தார். ஏழு லட்சம் ரூபாய் முதலீடு செய்தார்.

வழக்கமாக, ஆப்பிள் மூன்று ஆண்டு பயிர். முழுமையான இயற்கை விவசாய முறையையே பயன்படுத்தியே இவரது நிலத்தில் ஆப்பிள் இரண்டு வருடம் இரண்டு மாதங்களில் காய்த்து விட்டது. அது மட்டுமல்ல, பாரம்பரிய நிறம், தரத்துடன் ஒத்துப் போனதுதான் ஆச்சர்யம்.

12 டன் ஆப்பிள்கள் தரம் பிரிக்கப்பட்டு கிலோ 150 ரூபாய் வரை விற்பனையானது. போட்ட முதலீடும் திரும்பியது. ஏழு ஏக்கரிலும் ஊடு பயிராக இனிப்பு சோளம், தர்ப்பூசணி பயிரிட்டார்.இவருடைய முயற்சி மேலும் பலரை தூண்டியுள்ளது.

'நீங்கள் ஏதாவது ஒன்றை தொடங்கியவுடன் பாதியில் நிறுத்தாதீர்கள். பலன்களை பார்க்கும் வரை வேலை செய்யுங்கள். அதைத்தான் நான் செய்தேன்' என்கிறார் ஸ்ரிஷெல் டெலி.

- ஆர்.ஆர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com