சிறகடித்த சிட்டுக்குருவி...

பூட்டி சீல் வைக்கப்பட்ட ஜவுளிக் கடையில் இரண்டு நாள்களாக சிக்கித் தவித்த சிட்டுக்குருவியை விடுவிக்க நடந்தேறிய சுவாரசிய நிகழ்வு கேரளத்தில் பேசுபொருளாகியுள்ளது.
சிட்டுக்குருவி
சிட்டுக்குருவி
Published on
Updated on
1 min read

பூட்டி சீல் வைக்கப்பட்ட ஜவுளிக் கடையில் இரண்டு நாள்களாக சிக்கித் தவித்த சிட்டுக்குருவியை விடுவிக்க நடந்தேறிய சுவாரசிய நிகழ்வு கேரளத்தில் பேசுபொருளாகியுள்ளது.

கண்ணூர் அருகே உல்லிக்கல் நகரத்தில் அமைந்துள்ள ஆண்களுக்கான ஆயத்தத் துணிக்கடை, அக்கம்பக்க கடை வியாபாரிகளுக்கு இடையே உருவான தகராறால், கேரள உயர்நீதிமன்றத்தின் ஆணையின்படி ஆறு மாதங்களுக்கு முன் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இந்தச்சூழலில் கடையின் முன்புறம் இருந்த கண்ணாடி அறைக்குள் சிட்டுக்குருவி ஒன்று அண்மையில் நுழைந்துவிட்டது. அது வந்த வழி மூலமாக திரும்ப முடியாமல் சிறைப்பட்டது. தப்பிக்கும் வழியைத் தேடிய காட்சியைப் பார்க்கக் கூடிய கூட்டத்தைப் பார்த்து சிட்டுக்குருவி மேலும் பயந்தது.

சிலர் தீயணைப்புப் படையினரையும், வனத் துறையையும் தொடர்பு கொண்டு குருவியை விடுவிக்க அழைத்தனர். சீல் வைத்திருந்ததால் கடையைத் திறக்க முடியாத நிலை உருவானது. குருவி கண்ணாடி அறைக்குள் சிக்கித் தவிப்பதை பலரும் பார்த்தனர்.

வெப்பம், கண்ணாடி அறைக்குள் காற்று புகாதது, புழுக்கம் காரணமாக, சிட்டுக்குருவி அல்லாடிக் கொண்டிருந்தது. இரும்பு ஷட்டருக்கும், ஷோகேஸின் கண்ணாடி சுவருக்கும் இடையில் உள்ள நூலிழை இடைவெளியில் குருவிக்காக அரிசியையும் தண்ணீரையும் பொதுமக்கள் செலுத்தினர். ஆனாலும் குருவி பயத்தில் அங்கும் இங்கும் கண்ணாடி அறைக்குள் சிறகடித்துப் பறந்தது. சில சமயங்களில் கண்ணாடி அறையின் மேல்பகுதியில் உள்ள சின்ன 'தாங்கி'யில் அமர்ந்து கொண்டது. சிட்டுக்குருவியின் துயரம் ஊடகங்களிலும் வெளியானது.

மாவட்ட ஆட்சியர் அருண் கே. விஜயன் உடனடியாக கடையைத் திறக்க ஏற்பாடு செய்ய உள்ளூர் பஞ்சாயத்து செயலாளருக்கு உத்தரவிட்டார். அந்தக் கடையை மாவட்ட நீதிபதி நிசார் அகமது பார்வையிட்டு நிலைமையைப் புரிந்துகொண்டு, உயர்நீதிமன்றத்துக்குத் தகவல் சொல்லி கடையைத் திறக்க அனுமதி பெற்றார். மாவட்ட நீதிபதி முன்னிலையில் கடை திறக்கப்பட்டதும் சிட்டுக் குருவி சுதந்திரமாகப் பறந்து சென்றது.

'ஒவ்வொரு உயிரும், அது ஒரு சிறிய குருவியின் உயிராக இருந்தால் கூட அதை மதிக்க வேண்டும். ஒரு குருவிக்காகத் தவித்த பொதுமக்களையும், குருவியின் பரிதவிப்பை நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்த ஊடகங்களையும் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும்'' என்கிறார் மாவட்ட நீதிபதி நிசார் அகமது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com