மாணவ நேசன்...
விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள 113 அரசுத் தொடக்கப் பள்ளிகள், 32 நடுநிலைப் பள்ளிகள், 29 உயர்நிலைப் பள்ளிகள், 22 மேல்நிலைப் பள்ளிகள் என 196 அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் நலனுக்காக பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு, அதை செயல்படுத்தி வருகிறார் எம்.எல்.ஏ. அன்னியூர் அ.சிவா.
2024, ஜூலையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற இவர் குறுகிய காலத்திலேயே மக்கள் நலத் திட்டப் பணிகளை மும்முரமாகச் செய்து வருகிறார். அதிலும், கல்வி சார்ந்த பணிக்கு அதிக முக்கியத்துவம் அளித்துவருகிறார்.
அவரிடம் பேசியபோது:
'என் சொந்த ஊரான அன்னியூர், அதன் சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்தோர் 40 ஆண்டுகளுக்கு முன்பு கல்வியைப் பயில வெளியூருக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகுதான் எங்கள் கிராமத்துக்கு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், விடுதி வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டன. எனவே, அரசுப் பள்ளிகளில் அனைத்து வசதிகளையும் பெற வேண்டும் என்ற நோக்கில்தான் திறன்மிகு வகுப்பறைகளைத் தொடங்கும் திட்டத்தை மேற்கொண்டு, முதல்கட்டமாக 28 நடுநிலைப் பள்ளிகளுக்கு அந்த வசதியை பெற்றுத் தந்தேன்.
2024-25-ஆம் கல்வியாண்டில் 22 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதிய 2,203 மாணவ, மாணவிகளுக்கு "தேர்வை வெல்வோம்' என்ற வினா விடைத் தொகுப்பை பிப்ரவரி 4-இல் வழங்கினேன். இதைப் பயன்படுத்தி படித்தோர் சிறந்த மதிப்பெண்களைப் பெற்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறிப்பிட்ட அளவுக்கு உயர்ந்து காணப்பட்டது. நிகழ் கல்வியாண்டிலும் இதுபோன்று வினா விடை தொகுப்பு வழங்கப்படும்.
போட்டித் தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்குப் பயன்படும் வகையில், விழுப்புரத்திலுள்ள முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்க வளாகத்திலுள்ள நூலகத்துக்கு எனது ஒரு மாத ஊதியமான ரூ.1.05 லட்சத்திலிருந்து 375 புத்தகங்களை வாங்கி, மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மானிடம் வழங்கினேன்.
33 அரசு நடுநிலைப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் அமைப்பதற்காக, சமூகப் பொறுப்புணர்வு நிதியிலிருந்து ஒரு பள்ளிக்கு ரூ.2 லட்சம் வீதம் 33 பள்ளிகளுக்கு ரூ.66 லட்சம் வழங்குமாறு, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்தேன்.
இதன்பேரில் 28 அரசு நடுநிலைப்பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் அமைக்க ரூ.48.5 லட்சத்துக்கு ஒப்புதல் அளித்தது .தங்கள் நிறுவனம் அரசுப் பள்ளிகளுக்கு சமூகப் பொறுப்புணர்வு நிதியை பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் "நம்ம ஊரு நம்ம ஸ்கூல் பள்ளி' இயக்கத்தின் மூலமே வழங்கி வருவதால், திறன் வகுப்பறைகள் அமைப்பதற்கான நிதியையும் அதுபோன்றே வழங்கியிருப்பதாகவும் அறிவித்துள்ளது'' என்கிறார் அன்னியூர் சிவா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.