திரைக் கதிர்

'அக்யூஸ்ட்' படத்தில் முதல் முறையாக உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்துள்ளனர்.
திரைக் கதிர்
Published on
Updated on
2 min read

'அக்யூஸ்ட்' படத்தில் முதல் முறையாக உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கியுள்ளார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடித்துள்ளார். இதன் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் உதயா பேசுகையில், 'எனது தாயார் கடவுளாக இருந்து என்னை வழிநடத்துகிறார்.

என்னை அவர் எங்கிருந்தோ பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார், ஆசீர்வதித்துக் கொண்டே தான் இருக்கிறார். திரையுலகத்தை விட்டே போய் விடலாம் என்று கூட யோசித்திருக்கிறேன், ஆனால் எனது தன்னம்பிக்கை காரணமாக இன்று உங்கள் முன்னால் நிற்கிறேன். எனவே அனைவரும் நம்பிக்கையுடன் உழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எனது 25-ஆவது ஆண்டில் இப்படி ஒரு படம் கிடைத்திருப்பது எனது பாக்கியம். இந்த படத்திற்காக எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி' என நெகிழ்ந்துள்ளார் உதயா.

வரும் ஜூன் 27 -ஆம் தேதி உலகம் முழுவதும் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ள 'கண்ணப்பா' படத்தின் பிரத்யேக காட்சிகள் திரையிடும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் விஷ்ணு மஞ்சு, மதுபாலா, இயக்குநர் முகேஷ் குமார் சிங், படத்தொகுப்பாளர் ஆண்டனி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள். கண்ணப்பா பிரமாண்டமான படைப்பாக உருவாகியுள்ளது.

படத்தின் கிராபிக்ஸ் பணிகள் உலகம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கிலாந்து மற்றும் துபை நாடுகளிலும், இந்தியாவில் 8 இடங்களிலும் பணிகள் நடக்கின்றன. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஷ்ணு மஞ்சு எழுத்து, தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள படைப்பான 'கண்ணப்பா' இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. பிரபாஸ், மோகன்லால், அக்ஷய் குமார், சரத்குமார் உள்ளிட்ட இந்தியா சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இதில் நடிக்கின்றனர்.

'குரங்கு பொம்மை' படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் நித்திலன். இவரது இயக்கத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'மகாராஜா'. இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தியாவில் மட்டுமின்றி சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் இந்தப் படம் நல்ல விமர்சனத்தைப் பெற்றிருந்தது.

இந்நிலையில், தற்போது அமெரிக்கா சென்றுள்ள இயக்குநர் நித்திலன், நியூயார்க்கில் 'பேர்ட்மேன்' பட திரைக்கதை எழுத்தாளர் அலெக்சாண்டர் டினோலாரிஸை சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பு தொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அவர், 'என்றைக்கும் மனதில் வைத்து போற்றும் வகையிலான ஒரு சம்பவம் நியூயார்க்கில் நடந்தது. மிகப் பெரிய திரைக்கதை ஆசிரியர் என் படத்தை பாராட்டி பேசியது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று' என்று தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய ஸ்ட்ரீட் கிரிக்கெட் லீக் நிகழ்ச்சி ஒன்றில் ரவி மோகன் கலந்துகொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பேசிய ரவி மோகன், 'என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்ததற்கு மிக்க நன்றி. எனக்கு கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்கும். பள்ளி, கல்லூரிகளில் அணியின் கேப்டனாக இருந்திருக்கிறேன்.கிரிக்கெட் நன்றாக விளையாடக்கூடிய சிலருக்கு ஒரு எல்லையைத் தாண்டி போகமுடியாத சூழல் இருக்கும்.

அப்படி ஒரு சூழலை தென்னிந்திய தெரு கிரிக்கெட் லீக் உடைத்திருக்கிறது. அதனால் இளைஞர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்று, பயன்படுத்திக் கொள்ளவேண்டும். பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இங்கு வந்துள்ளீர்கள். கன்னடம், மலையாளம் மொழிகள் எனக்கு புரியுமே தவிர, பேசத் தெரியாது. ஆனால் தெலுங்கு கொஞ்சம் கொஞ்சம் பேசத் தெரியும். இனி எல்லாம் சுகமே' என்றிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com