மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் சிப்பிப்பாறை நாய்கள்', பாளையத்துக்காரர்கள் பயன்படுத்தியது ராஜபாளையம் இனம்', ராமநாதபுரத்தில் ராமநாதபுரம் மண்டை நாய்' என தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதிக்கும் வெவ்வேறு வகையான தொன்மை நாய் இனங்கள் உள்ளன. இதுபோல, தஞ்சாவூர், திருச்சி மண்டலங்களில் அலங்கு நாய்' இனம் பெரும்பான்மையாக வளர்க்கப்பட்டன.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் காலத்தில் இருந்த தொல் நாய் இனமே அலங்கு. போருக்கு, காவலுக்கு, வேட்டைக்குப் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டன. இவற்றுக்கு புலியைத் தாக்கக் கூடிய வல்லமை இருந்ததாக வரலாறு கூறுகிறது. சோழர்கள் காலத்துக்கு பிறகு அலங்கு நாய் இனம் பராமரிப்பில்லாமல் அழிந்துவிட்டது. இவை மீண்டும் கலப்பினமாகக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூர் அண்ணா நகரைச் சேர்ந்த நாய்கள் பண்ணை அமைப்பாளரும், பல் மருத்துவருமான எஸ். டிக்சன் ஜான் கூறியது:
தஞ்சாவூர் பெரிய கோயிலிலுள்ள சோழர் கால ஓவியங்களில் அலங்கு நாய் இடம்பெற்றுள்ளது. 12 -ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாராசுரம் கோயிலில் அலங்குக்கு புடைப்புச் சிற்பமும் உள்ளது.
அந்தக் காலத்தில் அலங்கு நாயின் உயரம் 27 - 28 அங்குலம் இருந்தது. 40 - 50 கிலோ எடை கொண்ட நாயின் உடல் வலிமையாக இருக்கும். தலை சிறியதாக இருந்தாலும், கால், உடம்பு பெரியதாக இருக்கும். சாதாரணமாக ஆறு அடி உயரத்தைத் தாண்டக் கூடியது. நாய் வளர்ப்போருக்கு மிகவும் விசுவாசமாகவும், பாசமாகவும் இருக்கக் கூடியது. அதனால்தான் அவை அழிந்தாலும், இன்றும் பேசுகிறோம்.
இந்த அலங்கு நாய்க்கு நாள்தோறும் 3 கிலோ கறி வரை கொடுத்தாக வேண்டும். அரிசி, காய்கறிகளைக் கொண்டு சமைத்தாலும், இரண்டு கிலோ அளவுக்கு உணவு தர வேண்டும். இதனால் மன்னர்கள் காலத்துக்கு பிறகு சாமானிய மக்களால் வளர்க்க முடியாமல், அலங்கு இனம் கைவிடப்பட்ட நிலையில் தெருக்களில் விடப்பட்டது. காலப்போக்கில் அலங்கு இனம் மறைந்துவிட்டது. என்றாலும், தெரு நாய்களில் கலப்பினமாகி அலங்கு இனத்தின் மரபணுவும் தொடர்கிறது.
இந்தியாவுக்கு ஆங்கிலேயர்கள் வந்த பிறகு, போருக்கு பயன்படுத்துவதற்காக நிறைய கலப்பின நாய்களை உருவாக்கினர். அப்போது, இங்கிருந்த அலங்கு இன நாய்களைப் பார்த்து வியந்த ஆங்கிலேயர்கள், அதை இந்திய தொல் நாய்களுடன் கலப்பினம் செய்து.
இதன் மூலம் உருவானதுதான் புல்லி குட்டா'. புல்லி' என்பது போர் வீரன்', முக சுருக்கம்' என்பதையும், குட்டா' என்பது நாய்' என்பதையும் குறிக்கிறது. இவ்வாறு உருவாக்கப்பட்ட புல்லி குட்டா, தற்போது நவீன புல்லி குட்டாவாக உள்ளது. இந்த இனம் பாகிஸ்தான், பஞ்சாப்பிலிருந்து இங்கு வந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதைப் பற்றிய பேச்சு 50 ஆண்டுகளாக இருந்தாலும் பிரபலமாகவில்லை.
தஞ்சாவூர் பெரிய கோயிலில் 2010 -இல் நடைபெற்ற ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது, அலங்கு இன நாய் பற்றிய தகவல் பரவலானது. அதிலிருந்து புல்லி குட்டா இன நாய்' என்பது அலங்கு' என்ற பெயரில் பிரபலமானது. தற்போது அலங்கு இனம் எனக் காட்டப்படும் நாய்கள் புல்லி குட்டா வகைகள். அக்காலத்தில் இருந்த அலங்கின் தாடை பெரியதாக இருந்தாலும், தோல் தொங்காது; மண்டையிலும் சுருக்கம் இருக்காது. அதன் உயரம் அதிகபட்சமாக 28 அங்குலம்தான் இருக்கும். தற்போதுள்ள புல்லி குட்டா இனம் கலப்பினம் செய்யப்பட்டு வந்ததால், 29 முதல் 34 அங்குலம் வரை வளருகிறது. பெரிய தாடையுடன் தோலும் சுருக்கமாக இருக்கிறது. எனவே, அலங்கின் மரபணுவில் புல்லி குட்டா வந்தாலும், அது அலங்கு கிடையாது; புல்லி குட்டாதான்.
இதனிடையே, அலங்கு இனத்தை மீட்டுருவாக்கம் செய்வதற்காக சில ஆய்வாளர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். என்றாலும், அலங்கின் அசல் உருவத்தைக் கொண்டு வர முடியாது. எனவே, எவ்வளவு கலப்பினம் செய்தாலும், இனிமேல் அசல் அலங்கை கொண்டு வருவது கடினம்.
வளர்ப்பது எப்படி?
இந்த இன நாய்க் குட்டி ரூ. 25 ஆயிரத்திலிருந்து விற்கப்படுகிறது. எங்களிடம் ஒரு மாதத்துக்கு விற்கப்படும் 60 - 70 நாய்களில் ஏறத்தாழ 50 சதவீதம் பூர்வீக இனங்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை, அலங்கு ஆகிய இனங்கள் விற்பனையாகின்றன. இதில், அலங்கு இனம் மட்டுமே 20 சதவீதம் விற்பனையாகிறது. வெளிநாட்டு நாய் இனங்களைக் குறைத்து நம் தமிழ்நாட்டு இனங்களை அதிகமாக வாங்குகின்றனர்.
எந்த வகை நாயாக இருந்தாலும், நாம் வளர்ப்பதைப் பொருத்தே அதனுடைய குணங்களும் அமையும். அலங்கு என்கிற புல்லி குட்டாவுக்கு பயிற்சி இல்லாவிட்டால், வளர்ப்பது கஷ்டம். அதற்கு முறையாகப் பயிற்சி கொடுத்து, பாசத்துடன் வளர்த்தால், அதுவும் நமக்கு கட்டுப்பட்டு, நாம் சொல்வதைக் கேட்டு செயல்படும். குடும்பத்துடன் மிகவும் நெருக்கமாக இருக்கும். அலங்கை வீட்டில் வளர்க்க வேண்டுமானால், ஓடி விளையாடுவதற்கு ஒரு பிளாட் (2,400 சதுர அடி) அளவுக்கு இடம் இருக்க வேண்டும். இந்த இன நாயை அப்பார்மென்ட்டில் வளர்க்க முடியாது. இந்த நாயைப் பொருத்தவரை பயிற்சி இல்லாமல், வளர்க்கத் தெரியாமல் வளர்த்தால் கடிப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன'' என்கிறார் டிக்சன் ஜான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.