சோழர்களின் தலைநகரான தஞ்சாவூரை பாண்டியர்கள் கைப்பற்றி, பெரிய கோயிலைத் தவிர மற்ற பகுதிகளைத் தரைமட்டமாக்கினர். பின்னர், நாயக்கர்கள் உருவாக்கிய தஞ்சாவூரில் அரண்மனையும், ராஜ வீதிகளுமே இருந்தன.
அரண்மனைக்குத் தென் பகுதியும், மேற்குப் பகுதியும் வனப்பகுதிகளாக இருந்தன. பெரிய கோயிலுக்குப் பின்புறம் தொடங்கி வல்லம், செங்கிப்பட்டி வரையிலும் அடர்ந்த வனப் பகுதியாக இருந்தது. வனங்களுக்கு இடையே கல்விராயன்பேட்டை, ஆலக்குடி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட சிற்றூர்கள் இருந்தன.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி வளாகம், அதன் எதிரேயுள்ள மானோஜிபட்டி, நகர விரிவாக்கப் பகுதிகள் அடங்கிய பகுதிகளே 'நீலகிரி ஊராட்சி' என்கிற 'நீலகிரி தோட்டம்' ஆகும். முன்பு மரங்கள் நிறைந்த அடர்ந்த வனமாக இருந்த இந்தப் பகுதி, கோடைகாலத்தில் நீலகிரியைப் போன்று குளிர்ச்சியாக இருந்தது.
அக்காலத்தில் நீலகிரியிலிருந்து தைல மரங்கள் கொண்டு வந்து வளர்க்கப்பட்டதாலும், கோடைகாலத்தில் சோலை சூழ்ந்த இப்பகுதி நீலகிரி போல இன்பம் தந்ததாலும் 'நீலகிரி' என அழைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார் தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணி. மாறன்.
அவர் கூறியது:
'நாயக்கர்கள் காலத்திலிருந்தே அரசக் குடும்பத்தினர், உயர் அலுவலர்கள் பொழுதுபோக்க இருந்த இடமே நீலகிரி. இங்குள்ள சில பகுதிகள் 'நாயக்கர் காடு' என அழைக்கப்பட்டது. பின்னர், தஞ்சாவூரைக் கைப்பற்றிய மராட்டிய மன்னர்களும் கோடைகாலத்தில் இங்கு முகாமிட்டனர். வனப் பகுதியில் அப்போதிருந்த மான், முயல் உள்ளிட்ட சிறு விலங்குகளை வேட்டையாடினர்.
வேட்டைக்குப் பின்பு தங்கி ஓய்வு எடுப்பதற்காக மானோஜிபட்டியில் உப்பரிகை மண்டபம் கட்டப்பட்டுள்ளது. 'உப்பரிகை' என்றால் மேல் மாடி, மேல் மாடம் எனப் பொருள். சுட்டச் செங்கற்கள், சுண்ணாம்புக் காரையைப் பயன்படுத்தி நேர்த்தியான வேலைப்பாடுடன் கட்டப்பட்டுள்ள இந்த மண்டபத்தில் நாயக்கர் கால, மராட்டியக் கால கலைப் பாணி காணப்படுகிறது.
நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட இந்த மண்டபம் பிற்காலத்தில் மராட்டியர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், யார் கட்டியது என்ற தகவல் கிடைக்கப் பெறவில்லை. கோடைகாலத்தில் எவ்வளவு வெப்பம் நிலவினாலும், இந்தக் கட்டடத்தில் அதன் தாக்கம் தெரியாது. குளிர்ச்சியான காற்று வரும். அக்காலத்தில் வேட்டைக்குச் சென்ற மன்னர்கள் இந்த மண்டபத்தில் தங்கி ஓய்வு எடுத்துள்ளனர்.
நீலகிரியின் மேற்குப் பகுதியில் வழுவழுப்பான உருண்டைக் கூழாங்கற்கள் கிடைக்கின்றன. 'மேற்குத் தோட்டம்' என்கிற இந்தப் பகுதி முன்பு 'லட்சத்தோப்பு' என அழைக்கப்பட்டது. லட்சம் மரங்கள் வளர்க்கப்பட்டதாலே இந்தப் பெயர். இதற்கிடையில் பூக்கள் விளைந்த பகுதி 'பூக்கொல்லை' என அழைக்கப்பட்டுள்ளது.
பிற்காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது, சிற்றூர்கள் உருவாகி, மக்கள் குடியேறியிருக்கலாம். 90 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி உருவாக்கப்பட்ட கல்லணைக் கால்வாய் மூலம் இந்தப் பகுதிக்கு பாசன வசதி கிடைத்தது. இதன் மூலம் வனப்பகுதிகளை விளைநிலங்களாக மாற்றி, மக்களும் வசிக்கத் தொடங்கியிருக்கலாம்.
நீலகிரியின் ஒரு பகுதிக்கு 'மானோஜிப்பட்டி' எனப் பெயர். மராட்டிய மன்னர் பிரதாபசிம்மனின் தளபதியாகவும், அமைச்சராகவும் விளங்கிய மானோஜி ஜெகதாப் அப்பா என்கிற பெருவீரரின் பெயரில் இவ்வூர் 'மானோஜிப்பட்டி' என அழைக்கப்படுகிறது.
மானோஜிப்பட்டி, கரையாம்பட்டி, இராமநாதபுரம், வடக்கு மானோஜிப்பட்டி, மேற்கு மானோஜிப்பட்டி, நடுத்தெரு, புதுத்தெரு, பழைய தெரு, கலைஞர் நகர், திருவள்ளுவர் நகர், திருவேங்கடம் நகர், நீலகிரி, வாண்டையார் நகர், மானோஜிப்பட்டி போன்ற சிற்றூர்கள் உள்ளன. இவற்றிலிருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
2011- ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நீலகிரி ஊராட்சியில் 11,0 44 பேர் வசிப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருகாலத்தில் அடர்ந்த வனப்பகுதியாகவும், நீலகிரியைப் போன்று குளிர்ந்த பகுதியாகவும் இருந்த இந்த ஊராட்சியில் விளைநிலங்களும் வீட்டு மனைகளாக மாறியதால், தற்போது அடர்த்தியான மக்கள்தொகையுடனும், நெருக்கமான வீடுகளுடனும் காணப்படுகிறது. இதனால் உதகை போன்று குளிர்ந்திருந்த இந்தப் பகுதி வெப்பமான பகுதியாக மாறிவிட்டது' என்கிறார் மணி. மாறன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
புவியின் அதிசயம்...
சுடுமண்ணில் மிளிரும் கலைவண்ணம்

நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்ட இரு தனியாா் விடுதிகளுக்கு ‘சீல்’ வைத்த உத்தரவு: உயா்நீதிமன்றம் தலையிட மறுப்பு

புதிய மலை!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

