ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

புவியின் அதிசயம்...

ஐஸ்லாந்தின் மகுடமான 'வட்நாயோகூல்' என்ற பகுதி நெருப்பும் பனியும் சங்கமிக்கும் இடமாகவும், புவியின் ஓர் அதிசயமாகவும் உள்ளது.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 10:33 pm

முனைவர் ஜி.குமார்

ஐஸ்லாந்தின் மகுடமான 'வட்நாயோகூல்' என்ற பகுதி நெருப்பும் பனியும் சங்கமிக்கும் இடமாகவும், புவியின் ஓர் அதிசயமாகவும் உள்ளது. இது வட துருவப் பகுதியில் பனி மூடிய மலைப் பகுதியாகும். சுமார் 7,900 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்தப் பகுதி ஐரோப்பாவின் மிகப் பெரிய கொள்ளளவு உடைய பனிப் பாறையும்கூட! பனி மூடிய இந்தக் குன்றுப் பகுதியின் அடியில் பல எரிமலைகளும் உள்ளன.

'வட்நாயோகூல்' என்றால் ஐஸ்லாந்து மொழியில், 'ஏரிகளின் பனிப் பாறை' என்பது பொருள். இந்த நாட்டின் மொத்தப் பரப்பளவில் சுமார் 8 சதவீதம் பனிப்பாறைகள்தான். பனி சராசரியாக 400 மீ. வரை இந்தப் பாறைகளை மூடியிருக்கும். சில இடங்களில் பனியின் தடிமன் ஆயிரம் மீட்டர்கள் இருக்கும். இந்த மொத்தப் பகுதியையும் யுனெஸ்கோ உலகின் பாரம்பரியப் பகுதியாக அறிவித்திருக்கிறது.

வட்நாயோகூல் பகுதியை தனி உலகம் எனலாம். இதன் அடியில் உள்ள சில பயங்கர எரிமலைகள் வெடிக்கும்போது, மேலே உள்ள பனி உருகி ஆறாக ஓடுகிறது. இந்த வெள்ளப் பெருக்கே பனி, நெருப்பின் பெரிய சங்கமத்தைத் தெரிவிக்கும். இந்த எரிமலைகளிலிருந்து எழும் புகை பனிப்பாறைகளின் சில பகுதிகளை கருமையாகவும் காண்பிக்கிறது.

இத்தகைய எரிமலை வெடிப்புகள் பனிப்பாறைகளுக்குள் பல குகைகளையும் தோற்றுவித்திருக்கின்றன. இருப்பினும், குளிர்காலமான நவம்பர் முதல் மார்ச் வரையிலான பருவத்தில் மட்டுமே இந்தக் குகைகளுக்குள் நுழைய முடியும். குகைகளை மூடியுள்ள பனிப்பகுதி நீல நிறத்தில் காணப்படும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கும் இந்தப் பனி அடுக்குகள் ஒன்றின் மேல் ஒன்றாக அழுத்தப்பட்டிருக்கும் நிலையில், அதனுள் இருக்கும் காற்று, மாசுத் துகள்கள் அகன்றிருக்கும். சூரிய ஒளி படும்போது அது நீல நிறத்தை மட்டுமே பிரதிபலிக்கும். குகைகளில் நுழையும் சுற்றுலாப் பயணிகளுக்கு வேற்றுக் கிரகத்தில் இருப்பது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தும்.

துருவப் பகுதி என்பதால், கோடையிலும் அதிக வெப்பம் இருப்பதில்லை. இருப்பினும், சில பகுதிகள் உருகுவதால் குகைகளின் வடிவம் மாறிக் கொண்டே இருக்கும். உருகிய நீர் ஐஸ்லாந்தின் உள்ள ஏரியைச் சென்றடையும். பனிக்கட்டிகளாகவே மிதந்து வந்து சில கடலில் கலக்கின்றன. இந்தப் பனிக்கட்டிகள் வைரம்போன்று மின்னுவதால் இவை சென்றடையும் இடத்தை 'டைமண்ட் கடற்கரை' என்று குறிப்பிடுகின்றனர்.

உலகம் வெப்பமயமாவதால் வட்நாயோகூல் பகுதி உருகி குறைந்து வருகிறது என்றும், அடுத்து வரும் சில நூற்றாண்டுகளில் இந்த அதிசயம் கரைந்தே போகலாம் என்றும் விஞ்ஞானிகள் அச்சப்படுகின்றனர்.

வட்நாயோகூல் வெறும் பனிப்பாறை மட்டும் அல்ல; புவியின் வரலாற்றையும் மறைந்துள்ள சில சக்திகளையும் உணர வைக்கும் ஒரு புவியியல் அதிசயம் எனலாம். குளிர்காலச் சுற்றுலாவுக்கு இந்தப் பகுதியை ஏராளமானோர் தேர்ந்தெடுக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.