பொ.ஜெயச்சந்திரன்
'ஜனநாயகத்தின் உரிமையை வெளிப்படுத்தும் வாய்ப்பே வாக்குரிமை. அதற்கு நாம் அளிக்கிற மதிப்பு மிகப் பெரியது. அப்போதெல்லாம் அரசியல் தலைவர்களின் பேச்சுகள் உற்சாகத்தை அளிக்கும். அந்த உற்சாகமும், வார்த்தையும் மக்களின் வாழ்க்கையையே மாற்றும்'' என்கின்றனர் மூத்த வாக்காளர்கள்.
தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் குறித்து மூத்த வாக்காளர்கள் சிலரிடம் பேசியபோது, அவர்கள் கூறியது:
அறந்தாங்கி எல்.என்.புரம் கிராமத்தைச் சேர்ந்த 91 வயதான ரா.கிருஷ்ணமூர்த்தி ஐயர்
பிறந்த நாளை நாம் கொண்டாடுவதைப் போல்தான் வாக்குச் செலுத்தும் நாளையும் கொண்டாட வேண்டும். இந்த மண்ணுக்கும், குடும்பத்துக்குமானதை எடுத்துக் காட்டும் அடையாளம்தான் தேர்தல். நாட்டுக்கும், மனித உரிமைக்குமான அங்கீகாரம். அப்போதெல்லாம் பொதுக்கூட்டங்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு உண்டு.
அரசியல் கட்சிகளும் தங்களுடைய கொள்கை, திட்டங்களை மேடையில்தான் முழங்குவார்கள். யாரும், யாரையும் தரக்குறைவாகப் பேசியதில்லை. அந்தப் பேச்சைக் கேட்டால் அரசியல், பொது அறிவு சார்ந்த விஷயங்கள் மனதில் ஆழமாகப் பதியும்.
எனது முதல் வாக்கை 1962-இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் செலுத்தினேன். அப்போது மீண்டும் 2-ஆம் முறையாக ஆட்சியில் அமர்ந்தார் காமராஜர். மக்களவை, சட்டப் பேரவை, உள்ளாட்சித் தேர்தல் என இதுவரைக்கும் 20 முறை வாக்குகளைச் செலுத்தியிருப்பேன்.
சிவகங்கை அருகேயுள்ள பெரிய மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த எண்பத்தேழு வயதான கரு.கருப்பையா
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வாக்குச் சாவடிகள் குறைவாக இருக்கும். பல வாக்காளர்கள் தொலைதூரம் நடந்துசென்று வாக்களிக்கும் சூழ்நிலை இருந்தது. சைக்கிள், மாட்டுவண்டி, டிராக்டர் போன்றவை இருந்தாலும், நடந்து சென்றே வாக்களிக்க வேண்டும் என்ற உணர்வும் இருந்தது.
வாக்களிப்பதை கடமையாக மட்டுமல்ல; உரிமையாகவும் கருதினோம். பெரும்பாலான வாக்குச் சாவடிப் பள்ளிகளில் மின்சாரம் இருக்காது. ஜெனரேட்டரில் விளக்குகள் எரியும். சில நேரங்களில் கைவிளக்கு, மெழுகுவர்த்தி, பெட்ரோமாக்ஸ் லைட் எல்லாம் தயார் நிலையில் இருக்கும். 65 ஆண்டுகளுக்கு மேலாக வாக்களித்து வருவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஒவ்வொரு தேர்தலையும் திருவிழாவாகவே உணர்கிறேன்.
எழுபத்தைந்து வயதான கனக சுப்பிரமணியன்
திருச்சி அருகேயுள்ள மணப்பாறையை அடுத்த சிறிய கிராமத்தில் முதலில் வசித்தேன். என்னுடைய முதல் வாக்கை நான் செலுத்துவதற்காக 4 கி.மீ. நடந்து சென்றேன். வாக்குச்
சாவடிப் பணியாளர்களுக்கு கிராம மக்கள், வேட்பாளர்கள் இணைந்து உணவு, தேநீர், இளநீர் போன்றவற்றை அளிப்பார்கள். வாக்குச் சாவடிகளில் மின்விசிறிகள் அப்போது இல்லை. ஆனால், இயற்கை சார்ந்த மரங்கள் குளிர்ச்சியை ஊட்டும். வாக்குப் பதிவு முடிந்தவுடன் ஜீப், டிராக்டர், வண்டிகளில் வாக்குப் பெட்டிகளை வந்து எடுத்துச் செல்ல பல மணி நேரமாகும்.
தேர்தல் பணிக்கு முந்தைய நாள் வரும் அரசு ஊழியர்கள் வாக்குப் பதிவுக்கு மறுநாள் செல்லும் நிலை. அவர்களுக்கு மூன்று நாள்களுக்கு தூக்கம் இருக்காது. பணி முடிந்தவுடன் ஏதாவது ஒரு வானொலியை வாக்குச் சாவடிக்கு வெளியில் வைத்து சத்தத்துடன் பாடல்களை ஒலிபரப்புவோம். அதனைக் கேட்டு அவர்களோடு நாங்களும் மகிழ்ந்த காலம் உண்டு.

எழுபத்தொரு வயதான முனைவர் சு.சூரியநாராயணன்
1977-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் சிதம்பரத்தில்தான் நான் முதலில் வாக்களித்தேன். திருநெல்வேலி அருகேயுள்ள லத்தூர் எனது சொந்த ஊராக இருந்தாலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்ததால் நானாக விரும்பி சிதம்பரத்தில் வாக்காளராகப் பதிந்தேன். அவசரநிலைப் பிரகடனத்துக்குப் பின்னர் நடைபெற்ற முதல் தேர்தல்.
கட்டணம் வசூலித்து நடத்தப்பட்ட கூட்டங்களும் அப்போது உண்டு. துரைமுருகன், சுப்பு, ரகுமான்கான் உள்ளிட்டோரின் அரங்கு கூட்டங்கள் பிரபலம். சிதம்பரம் தொகுதி அப்போது திமுக கோட்டையாக இருந்தது. அதன்பின்னர், எத்தனையோ தேர்தலில் வாக்களித்திருந்தாலும், முதன் முதலாக வாக்களித்த அந்தத் தருணம் மறக்க முடியாதது. வாக்கு எண்ணிக்கையானது கிட்டத்தட்ட 2 நாள்கள் கூட நடந்திருக்கிறது. சக்கர நாற்காலியில் பயணிக்கும் எனக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.
எண்பது வயதான பார்வதி கோபால்
திருநெல்வேலி மாவட்டம், அத்தாளநல்லூரில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில்தான் என்னுடைய முதல் வாக்கை செலுத்தினேன். நான் வாக்களித்த வேட்பாளர் வெற்றி பெற்றார் என்பதை அறிந்தபோது, மனம் மகிழ்ந்தது. வானொலி, திரையரங்குகளில் தேர்தல் விளம்பரம் போடுவார்கள். சுவரொட்டிகள் அனைத்து வீடுகளையும் மறைத்திருக்கும்.
கட்சி மாறி யார் சுவரொட்டி ஒட்டினாலும், எந்தச் சண்டைகளும் வராது. தொடக்கத்தில் வாக்களித்த காலம் என்பது வெறும் ஓரு கடமையாக அல்லாமல், பெருமையாகவும் இருந்தது. வேட்பாளர்களின் எண்ணங்களும் மிகவும் உயர்ந்ததாக இருந்தது. அவர்கள் அரசியலை சேவை மனப்பான்மையுடன் அணுகினர்.
ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த எழுபத்தொரு வயதான ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் அ.அடைக்கலம்
அப்போதெல்லாம் வாக்கு சாவடிக்குச் செல்லும்போது, புது ஆடைகளை அணிந்து மகிழ்ச்சியாகச் செல்வோம். வெளியூர் சென்ற தோழிகள் வந்திருப்பார்கள். நான் தொடர்ந்து வாக்களிப்பதால், நாட்டின் முன்னேற்றத்தில் ஒரு சிறிய பங்கை தொடர்ந்து அளிக்கிறேன் என்ற உணர்வு இருக்கிறது.
எழுபது வயதான க.கீதாராணி
எனது முதல் வாக்கை ஈரோடு கலைமகள் பள்ளி வாக்குச் சாவடியில் தான் செலுத்தினேன். கடந்த காலமும், நிகழ்காலமும் இடையே இருக்கும் இந்த மாற்றங்களை நாம் உணர்ந்து, முன்னோர் காட்டிய வழியைப் பின்பற்றவேண்டும். வசதிகள் அதிகரித்தாலும், மதிப்புகள் குறையக் கூடாது. வாக்கு செலுத்துவதை நாம் தொடர்வதே ஜனநாயகத்தின் அடித்தளமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு

கரூா் பேரவைத் தொகுதியில் நாதக வேட்பாளா் பிரசாரம்

தமிழ்நாட்டில் முதல்முறை வாக்காளர்கள் 34% உயர்வு! 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பின்!!

மேடைப் பேச்சு எளிதல்ல...
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


