லட்சக்கணக்கானவர்களைக் கவர்ந்த ஒரு துள்ளல் பாடலின் கதை இது. மண்ணைத் தோண்டி தொல்பொருள்களை எடுத்து அருங்காட்சியகங்களுக்குக் கொண்டு போகலாம். அமெரிக்காவில் வசிக்கும் சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர் முனைவர் கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரன், புராணங்களிலும், வரை
படங்களிலும் நாட்டிலுள்ள ஆறுகளைத் தேடி... கவிநயத்துடன் 'நதி கீதம்' பாடுகிறார். அது இணையத்தில் வைரலாகி, சிறார்களையும் பாட வைத்துள்ளது. என்ன பிரமாதம். தமிழ்நாட்டில் பாய்ந்த, பாய்ந்து கொண்டிருக்கும் 125 நதிகளைத் தேடிக் கண்டுபிடித்தவர், இந்த 'ஆறு'களை, 'ஆறு' பேர்களை வைத்து 'ஆறு' நிமிடங்களில் பாடி சிந்திக்க வைத்துள்ளார் கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரன்.
இந்த எதிர்பாராத '6' ஒற்றுமையைக் கொடுத்து ஆற்று கீதத்தை எழுதி, அதற்கு மெட்டு அமைத்து, ஆறில் ஒருவராகப் பாடியும் அசத்தியுள்ளார் கன்னிக்ஸ். இசை அரங்குகளைத் தாண்டி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக இசையின் ஆற்றலை நீர்நிலைகளை பாதுகாக்க தன்னுடைய முன்னாள் கல்வி நிறுவனத்தோடு இணைந்துள்ளார்.
சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சி பூங்காவில் செயல்படும் தூய நீருக்கான சர்வதேச மையத்தோடு (ஐ.சி.சி.டபிள்யு.) இணைந்து 'தமிழ்நாட்டின் ஆறுகள்' என்கிற இசைக் காணொலியை அமெரிக்காவின் சின்சினாட்டி நகரிலிருந்தபடியே இயக்கியுள்ளார்.
அவரிடம் பேசியபோது:
'பெற்றோர் வாழ்ந்தது திருவண்ணாமலை. நான் பிறந்து வளர்ந்தது சென்னையில்தான். சென்னை ஐ.ஐ.டி.-யில் உலோகவியல் பொறியியல் துறையில் படித்தேன். தற்போது அமெரிக்காவில் தரவு பகுப்பாய்வு உள்ளிட்ட பல்துறைகளில் பணி.
சில ஆண்டுகளுக்கு முன்பு புவி தினத்துக்காக, 'இந்தியாவின் ஆறுகள்' என்கிற இசைக் காணொலியை உருவாக்கினோம். இந்திய நாட்டின் பண்பாடு, கலாசாரத்தில் நதிகளுக்கு முக்கியமான பங்கு உண்டு. முதலில் மரியாதையாகப் பார்த்தோம். நாளடைவில் இந்த நதிகள் மாசுபட்டன. 'எதிர்காலம் என்னாகுமோ?' என்கிற கருத்தில் இவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க 7 தேசிய சப்த நதிகள் உள்ளிட்ட 51 நதிகளின் பெயர்களை இணைத்து, அதை கவிதையாக உருவாக்கினோம்.
இதில் 'நடந்தாய் வாழி காவேரி' என்கிற சிலப்பதிகார வரியுடன் இந்தப் பாடலை முடித்து, நதிகள் மீதான நம்பிக்கையைக் கொண்டாடினோம். இப்படி எழுதியதோடு, மட்டுமல்ல, அதை வடக்கு - தெற்கு பாடகர்களையும், அதுவும் வித்தியாசமாக தாய்-மகன் உறவுள்ள பாடகர்களை வைத்துப் பாட வைத்தோம்.
பாம்பே ஜெயஸ்ரீ, அவரது மகன் அம்ரித்தும், கொல்கத்தா கெளசிக் சக்ரவர்த்தி, அவரது மகன் ரிஷித் தேசிகனும் பாடினர். பாடலின் கடைசியாக 51 நதிகளைக் குறிப்பிடும் வகையில் 51 பாடகர்கள் கோரஸூம் பாடினர். இந்த முதல் காணொலி வைரலானது. இதை தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா மிகப் பெருமைப்பட்டு 'டிவிட்' செய்தார்.
'பருவ மழை'யைப் பற்றிய காணொலியைத் திருக்குறளின் வான்சிறப்பு அதிகாரத்தை எடுத்து, அதில் உள்ள பாடல்களை வைத்து முத்துசாமி தீட்சிதர் அமிர்தவர்ஷினி ராகத்தில் பிரபலப் பாடகிகள் ரஞ்சினி - காயத்ரி சகோதரிகளைப் பாடவைத்தோம்.
நதிகளைத் தேடி...
தமிழ்நாட்டின் நீரியல் வரலாற்றைப் பற்றி ஆராய வேண்டும் என்கிற எண்ணம் வந்தது. பாரதியார் பாடல்களிலிருந்த நதிகள், திருவையாறில் சுவாமிக்கு ஐயாறப்பர், பஞ்சநதீஸ்வரர் என்ற பெயர்கள். அங்கு இருந்த ஐந்து நதிகள். காஞ்சிபுரத்தில் இருந்த வேகவதி நதி. இப்படி ஒவ்வொரு நதிகள் பெயர்களாகக் கிடைத்தது. பல புத்தகங்கள், பழைமையான வரைபடங்களை ஆய்வு செய்தோம். நதிகளின் பெயர்ப்பட்டியல் நீண்டது.
மலையிலோ, மழை நீர்ப் பிடிப்புப் பகுதியிலோ பிறந்து, வழியெங்கும் சலசலவென ஓசையுடன் சங்கீதம் பாடி ஓடி கிராமங்கள், நகரங்களைக் கடந்து கடலை அடையும். இப்படிப்பட்ட பல நதிகள் காணாமல் போயுள்ளன. அதன் பயணத்தை பல் முனைகள் வழியாக ஆய்வுகள் மேற்கொண்டோம்.
கிருதுமால் என்கிற ஆறு இருந்த இடத்தில் இப்போது ஆக்கிரமிப்புகள். எப்போதாவது வந்த வெள்ளம் வீடுகளை அடித்துக் கொண்டு போக, அங்கு ஓடிய கிருதுமால் ஆறு செய்தி வெளியே வந்தது. 'சங்கமம்' படத்தில் 'வராக நதிக்கரையோரம் ஒரே ஒரு பார்வை' என வைரமுத்துவின் பாட்டில் இருந்தது. இது கற்பனையா?, உண்மையா? என தேடிப்பார்த்தபோது அப்படியொரு நதியிருந்தது தெரியவந்தது.
செழிப்பான பேரரசுகள், பல நூற்றாண்டுகள் பூமியில் பிரம்மாண்டமான கோயில்களைக் கட்டி கட்டடக் கலைக்கு ஊக்கமளித்தனர். அந்தக் கோயில்கள் உள்ளன. ஆனால், அப்போது இருந்த நதிகள் இன்றைக்கு அழிவின் விளிம்பிலோ அல்லது முற்றிலும் மறைந்து, மறக்கப்பட்டுப் போயிருக்கின்றன. கம்பீரமான காவிரி, வைகை, பாலாறு, தாமிரவருணி (பொருநை) போன்றவைகள் புகழ்பெற்ற நதிகள். வராஹ நதி, வசிஷ்ட நதி, பாமணி, பஃறுளி, ஓடம்போக்கி, நாகநதி... போன்றவை அறியப்படாதவை.
சங்கராபரணம் ராகத்தின் பெயரிலும் ஒரு நதி இருந்துள்ளது. சில நதிகளுக்குப் பின்னால் சரித்திரம் உள்ளது. சரபங்கா ஆறும், வசிஷ்ட நதியும் ராமாயணத்துக்குத் தொடர்புடையவை. மனிதர்களைவிட நதிகள் பழைமையானதும், சக்தி வாய்ந்ததும்கூட! ஆனால், மரியாதைக்குரிய நதிகள் யாரால் மறைந்தது ? வெள்ளம் வந்தால்தான் தேடுவோமோ? இப்படித் தேடிக் கிடைத்த 125 நதிகள், ஆறுகள், ஓடைகள் பெயர்கள் கிடைத்தன. அவைகளை மரியாதை செலுத்தும் நோக்கம். கோட்பாடுடன் படிப்படியாகக் காப்பாற்றப்படும் என்கிற
நம்பிக்கையோடு, இதை வெளிப்படுத்த முன்வந்தோம். சென்னை ஐ.ஐ.டி.யுடன் 'தமிழ்நாட்டின் ஆறுகள்' என்கிற இசைப் படைப்பு உருவானது. நானே பாடல் எழுதி மெட்டு அமைத்தேன்.

தந்தை - மகள் கூட்டணி
இப்படி உருவான பாடலை இந்த முறை தந்தை- மகள் ஜோடிகளை வைத்து பாடவைத்தோம். உன்னிகிருஷ்ணன்- உத்தரா, ஸ்ரீனிவாஸ்- சரண்யா, நானும்- என் மகள் விதிதா எனப் பாடினோம். என் மகள் பாடினாள். ஆனால், காணொலியில் தோன்றவில்லை.
இந்தப் பாடகர்கள் எல்லோருக்கும் 'ஜூம்' வழியாகவே டியூனை சொல்லிக் கொடுத்தோம். எப்படிப் பாடுவது, குரல்களைப் பதிவது போன்றவற்றை அமெரிக்காவிலிருந்தே அனுப்பினோம். ஆறு பாடகர்களும் பிரமாதமாய் பாடியதை 'மல்டி ட்ராக் ரிக்கார்டிங்' செய்தோம்.
தமிழ்த் திரையுலகில் பிரசித்தமான பாடகரும், ஒலித் தொகுப்பாளருமான ரவி ஜி, சவுண்ட் ரிக்கார்டிங், மிக்ஸிங் மாஸ்ட்டர்டிங் ஆகியவற்றை மிக அருமையாகச் செய்தார்.
இந்தத் திட்டம் வெறும் பாட்டுடன் முடிவடையவில்லை. அழகான காட்சிகளும் தேவைப்பட்டன. வரிகளுடன் சேர்ந்து உதித்த கற்பனைக் காட்சிகளுக்கு காமிராவில் உயிர் கொடுத்தார் அகமதாபாத்தைச் சேர்ந்த ஒளிப்பதிவாளரும் தொகுப்பாளருமான சச்சின் தவே.
இந்த ஆறு நிமிடப் பாடலுக்கு சென்னை கோவளம் கடற்கரையின் எழில்மிக்க பின்னணியில் நாகசுவரம் , தவிலின் கம்பீரமான, துள்ளலான இசையோடு தொடங்கும் பாடலின் படப்பிடிப்பு என ஆறு மாதப் பணிகளையும் அமெரிக்காவிலிருந்தே 'ரிமோட்' டைரக்ஷன் கொடுக்கப்பட்டது. பல லட்சம் பார்வையாளர்களைச் சென்று சேர்ந்தது என்பது மகிழ்ச்சிதான். கும்மிடிப்பூண்டியில் உள்ள பள்ளியில் ஒரு சிறுமி இந்தப் பாடலை மனப்பாடமாகப் பாடும் ஒரு காணொலி எங்களின் முயற்சிக்குக் கிடைத்த பெரிய விருது' என்கிறார் கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மொராக்கோ தரும் படிப்பினை...

இந்த வாரம் கலாரசிகன் - 02-08-2026
ஆங்கிலத்தைக் கல்யாணம் செய்தேன் தமிழைக் காதலிக்கிறேன்

நதிநீர் இணைப்பு - பகீரத முயற்சி!
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



