இன்று சேவியர் தனிநாயகம் அடிகளின் பிறந்த நாள். விரைவில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படும் என்கிற தமிழக அரசின் அறிவிப்பும், கனடாவில் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு உலகத் தமிழ் ஆய்வு மாநாடு நடத்தப்பட இருக்கிறது என்கிற தகவலும் அவரது ஆன்மாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் வேண்டாம்.
தமிழுக்கு மாநாடு நடத்தி, உலகளாவிய தமிழர்களை இணைப்பது என்கிற முயற்சிக்கு அடித்தளம் மட்டுமல்ல, உலகத்தமிழ் மாநாடு எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துத் தமிழுலகத்துக்கு வழிகாட்டியவர் தனிநாயகம் அடிகளார் என்பதை இன்றைய தலைமுறையினர் அறிவார்களா என்று தெரியவில்லை.
யாழ்ப்பாணத்தில் பிறந்து, பண்டிதர் குருசாமி சுப்பிரமணிய ஐயரிடம் முறையாகத் தமிழ் கற்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 'குருதேவர்' தெ. பொ. மீனாட்சிசுந்தரனாரால் அடையாளம் காணப்பட்டு சங்க இலக்கிய ஆராய்ச்சியை மேற்கொண்டவர் தனிநாயகம் அடிகள். ஆங்கிலம், லத்தீன், பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பான், போர்ச்சுகல் மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்.
1964-இல் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தைத் தொடங்கியதிலும், உலகத் தமிழாராய்ச்சி கழகத்தை நிறுவியதிலும் அவரது பங்களிப்புதான் முக்கியமானது. 1966-இல் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில், அந்த நாட்டு அரசின் துணையுடன் முதலாவது உலகத் தமிழ் மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்தி, பின்னாளில் நடந்த மாநாடுகளுக்கு இலக்கணம் வகுத்துத் தந்த பெருமைக்குரியவர் அவர்தான். அந்த மாநாட்டில் அரசியல் மனமாச்சர்யங்களை மறந்து அன்றைய தமிழக முதல்வர் எம். பக்தவத்சலம், எதிர்க்கட்சித் தலைவர் இரா. நெடுஞ்செழியன், தமிழரசுக் கட்சித் தலைவர் ம.பொ.சி. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பதை இப்போது நினைக்கத் தோன்றுகிறது.
விரைவில் தமிழகத்தில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படும் என்றும், அதற்கான முனைப்புகள் தொடங்கிவிட்டன என்றும் முதல்வர் ஜோசப் விஜய்யின் சார்பில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்திருக்கிறார். சென்னை, மதுரை, தஞ்சை, கோவையில் தமிழ் மாநாடுகள் நடந்துவிட்டன. இந்த முறை அந்தப் பெருமை திருநெல்வேலிக்குக் கிடைத்தால் நன்றாக இருக்கும். திருச்சியும், சேலமும் கூடப் பரிசீலனைக்கு உகந்த நகரங்கள்தான்.
தில்லிக் கம்பன் கழக நிகழ்ச்சிக்காக நான் தலைநகரம் வந்திருக்கிறேன்.
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன் தொலைபேசியில் அழைத்திருந்தார். விரைவில் கனடாவில் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு நடத்த இருப்பதாகவும், அது தொடர்பாகப் பேசுவதற்காக அதன் அமைப்பாளர்கள் என்னிடம் பேச விரும்புவதாகவும் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசனின் அழைப்பு வந்தது. 'செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்' எனும் பெயரிலான ஓர் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி முதல் மூன்று நாள்கள் கனடாவில் உள்ள டொராண்டோ மாநகரில் நடைபெறவுள்ள தகவலைத் தெரிவித்தார். உலகளாவிய அளவில் தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்களை ஒருங்கிணைத்து மாநாடு நடத்தப்பட இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
செம்மொழித் தமிழ், மெய்ப்
பொருள் இயல், பண்பாடு, புலம்
பெயர்ந்தோர் வாழ்வு, உலகமயமாதல்,
வரலாறு ஆகிய துறைகளில் இணை இசைவுகளை ஆராய்வதற்கான அறிவியல் தளமாக அந்த மாநாடு அமையவிருக்கிறது. உலக நாடுகளிலுள்ள ஆய்வாளர்களிடம் இருந்து 497 ஆய்வுக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன என்றும், இலங்கை, இந்தியா, பிற நாடுகள் என்று தலா 20 கட்டுரையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அழைக்கப்படுவர் என்றும் தெரிகிறது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை விரைவில் அனுப்பித்தருவதாக குகதாசன் தெரிவித்தார்.
தமிழகத்தில் உலகத் தமிழ் மாநாடும், கனடாவில் செம்மொழி மாநாடும் நடத்தப்படுவதில் எந்தவிதத் தவறுமில்லை. ஒரு வகையில் நல்லதும்கூட. தாய்த் தமிழகமும், புலம் பெயர்ந்த தமிழர்களும் போட்டி போட்டுக் கொண்டு தமிழ் வளர்க்கத் தலைப்படுகிறார்கள் என்றால், அது தமிழுக்கு நல்லதுதானே!
கம்பன் கழக நிகழ்ச்சிக்காக தலைநகர் தில்லிக்கு வந்திருக்கும் நான், சாணக்கியபுரி தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருக்கிறேன். தமிழ்நாடு இல்லத்தில், ஏனைய மாநில அரசு விருந்தினர் மாளிகையில் இல்லாத ஒரு தனித்துவம் உண்டு. அது அங்கிருக்கும் நூலகம். நூலகம் சிறியதாக இருந்தாலும், அதிலிருக்கும் நூல்கள் பல சிறப்பானவை.
மின்தூக்கியில் தரைத் தளத்துக்கு வந்திறங்கியபோது, நேராகக் கண்ணில் படும் தமிழ்நாடு இல்ல நூலகம் என்னைக் காந்தமாக ஈர்த்தது. இந்த முறை தங்கியிருக்கும்போது நான் படிப்பதற்கு அங்கிருந்து எடுத்துக் கொண்ட புத்தகம் 'அனந்தன்' எழுதிய 'நாமறிந்த கி.வா.ஜ.'
'கலைமகள்' பருவ இதழின் ஆசிரியராக இருந்த 'வாகீச கலாநிதி' கி.வா.ஜகந்நாதன் தமிழுக்கு ஆற்றியிருக்கும் தொண்டு நிகரற்றது. 'தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாதையரின் சீடராக இருந்து, அவரது கடைசிக் காலம் வரை தொண்டாற்றிய பெருமை அவருக்கு மட்டுமே உண்டு. இலக்கிய இலக்கணங்களில் தேர்ந்தவர் என்பது மட்டுமல்ல, தனது சிலேடைப் பேச்சால் அன்றைய தலைமுறையினரை சிந்திக்கவும், சிரிக்கவும் வைத்தவர் என்ற பெருமை கி.வா.ஜ.வுக்கு உண்டு.
தொல்காப்பியம் என்றாலே புரிந்து கொள்வது மிகவும் கடினம் என்ற நிலையை மாற்றி, 'பயப்படாதீர்கள்' என்ற தொடரை எழுதிப் பாமரர்களுக்கும் புரிய வைத்தார்; கவிதை புனைவது எப்படி என்று 'கவி பாடலாம்' என்ற மரபுக் கவிதை இலக்கணத்தைக் கற்றுத் தந்தார்; கம்பனின் கவி நயத்தை 'அழியா அழகு' என்று விளக்கியவர்;
திருமுருகாற்றுப்படையின் விளக்கத்தை 'வழிகாட்டி' மூலமும், கந்தர் அநுபூதியை 'ஞான மாலை' என்றும் எளிமைப்படுத்திப் பாமரருக்கு அளித்தவர்.
இவையெல்லாம் 'நாமறிந்த கி.வா.ஜ.' நூலுக்கு அல்லயன்ஸ் ஸ்ரீநிவாசன் எழுதியிருக்கும் பதிப்புரையில் சொல்லப்பட்டிருக்கிறது. தமது ஆசிரியர் பிரான் குறித்து கி.வா.ஜ. எழுதியதுபோல, தனது ஞானாசிரியரான கி.வா.ஜ. குறித்து ஜி.எஸ். அனந்த நாராயணன் என்கிற அனந்தன் எழுதியிருக்கும் அற்புதமான புத்தகம்தான் 'நாமறிந்த கி.வா.ஜ.' வாகீச கலாநிதியின் வாழ்வும், வாக்கும் மட்டுமல்ல, அவரது வாழ்க்கையில் நடந்த பல சுவாரஸ்யமான சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
கவிஞர் தெ.சு. கவுதமனின் 'மெல்லின தேசம்' கவிதைத் தொகுப்பில் இடம்
பெறுகிறது
இந்தக் கவிதை...
ஆற்று மணல் திருடி
கட்டிய வீட்டின் வரவேற்பறையில்
தொட்டி நீரும், கூழாங்கற்களும்,
கொஞ்சம் மீன்களும்
ஆற்றின் நினைவாக...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்த வாரம் கலாரசிகன் - 12-07-2026

இந்த வாரம் கலாரசிகன் - 05-07-2026

இந்த வாரம் கலாரசிகன் - 28-06-2026

இந்த வாரம் கலாரசிகன் - 21-06-2026
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



