அசத்திய குழந்தைகள்...

தமிழின் ஆற்றலையும், அடையாளத்தையும் உலகுக்கு எடுத்துச் செல்லும் பெருவிழாவாக, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இருநாள் அயலகத் தமிழர் தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
அசத்திய குழந்தைகள்...
Updated on
2 min read

பொ.ஜெயச்சந்திரன்

தமிழின் ஆற்றலையும், அடையாளத்தையும் உலகுக்கு எடுத்துச் செல்லும் பெருவிழாவாக, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இருநாள் அயலகத் தமிழர் தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. அதில் பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டன.

தமிழ் இணையக் கழகத்தால் இணைய வழியில் நடத்தப்பட்ட பேச்சு, மாறுவேடம், கதை சொல்லுதல், ஒப்புவித்தல் உள்ளிட்ட போட்டிகள் இளஞ்சிறார், சிறார், இளையோர் ஆகிய மூன்று பிரிவுகளில் நடத்தப்பட்டன.

இதில், சீனா ஜியாஜிங் தமிழ் இணையக் கழகம், ஐக்கிய அரபு அஜ்மன் கற்றல் கல்வி மேலாண்மை நிறுவனம், நவி மும்பை தமிழ்ச் சங்கம், இலங்கை கிண்ணியா நம்ஸ் உயர் கல்விக் கல்லூரி, ஓமன் ரூவி டேலண்ட் பயிற்சி நிறுவனம், விசாகப்பட்டினம் தமிழ்க் கலை மன்றம், மலேசியா கோலாலம்பூர் தமிழ் இணையக் கல்விக் கழகம் போன்ற தொடர்பு மையங்களின் மாணவர்கள் பங்கேற்றனர்.

இதில் ஒப்பித்தல் போட்டியின் சிறார் பிரிவில் 'கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை' எனும் தலைப்பில் பேசி, முதலிடம் பெற்ற மலேசியா கோலாலம்பூர் தமிழ் இணையக் கல்விக் கழக மாணவர் தக்ஷீத் சதீஷ்குமாரின் தாய் ரம்யா கூறியது:

'எங்களுடைய சொந்த ஊர் திருச்சி மாவட்டம்தான். மலேசியா, கோலாலம்பூர் பகுதியில் பத்து ஆண்டுகளாக வசித்து வருகிறோம். நான் இல்லத்தரசி. கணவர் சதீஷ்குமார் மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிகழ்வில் பங்கேற்ற மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.

'இன்றைய காலத்தில் தமிழ் பேசினால் உயர்வு இல்லை' என்ற தவறான எண்ணத்தைத் தகர்த்து, தமிழில் ஒப்பித்தல் போட்டி எங்களுக்குப் பெருமையைத் தேடித் தந்துள்ளது. அதைவிடவும், அந்தப் பரிசை நேரடியாகப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புக்காக நாடு கடந்து, சொந்த நாட்டுக்கு வந்துள்ளோம். தமிழ்நாடு அரசின் பண்பும், பாராட்டும் எங்களின் நெஞ்சை நெகிழச் செய்துள்ளது.

தாய்மண் மீதுள்ள பற்று எப்போதும், மனதிற்குள் உயிரோட்டத்துடன் இருந்து கொண்டே வருகிறது. அந்தப் பற்று எங்கள் மகனின் வளர்ப்பிலும், அவன் கற்ற கல்வியிலும், குறிப்பாக தமிழ் மொழியின் மீது அவனுக்குள்ள ஆர்வத்திலும் விருப்பமாக இருந்தது.

தமிழ் மண்ணில் நின்று, தமிழின் பெயரில் மகன் கெளரவிக்கப்படுவது எங்கள் வாழ்க்கையின் மறக்க முடியாத நிகழ்வாகும். இதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் மகனின் ஆசிரியர் ராதிகா ஹரீஸ். குழந்தைகளைக் கொண்டாடிய அயலகத் தமிழர் தின விழா எங்களுக்கு இனிப்புப் பொங்கலாகவே அமைந்துள்ளது' என்றார்.

சி.தமீம் பாதுஷா, வெளிநாடு வாழ் தமிழர்கள் அறக்கட்டளை நலச் சங்கத்தின் பொருளாளர்:

'தமிழர்களின் நலன், இணைப்பு, சமூகப் பாதுகாப்பு செயல்பாடுகளுக்கான பல முயற்சிகளை ஒருங்கிணைத்து வருகிறேன். 'உலகத் தமிழர்களின் வாழ்வியலும் வரலாறும்' என்ற நூல் தொகுப்பில் எங்கள் சங்கத்தைச் சேர்ந்த 12ஆளுமைகளின் கட்டுரையைத் தொகுத்துள்ளேன்.

இந்த நூலை இந்த நிகழ்வுக்கு வருகை தந்த சில ஆளுமைகளுக்கு நேரடியாகக் கொடுக்கின்ற வாய்ப்பும் அமைந்தது. இதுபோன்ற விழாக்களை நடத்தும் தமிழ்நாடு அரசின் தொலைநோக்குப் பார்வை பாராட்டப்பட வேண்டியது. இது உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் பண்பாட்டு பாலமாகும்.'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com