சுஜாதா மாலி
ஹிந்து தர்மத்தின்படி, பசுக்களைப் பாதுகாத்தல் என்பது முக்கியக் கடமை. கோ சம்ப்ரக்ஷணம்' எனப்படும் கறவைப் பசுக்களைப் பாதுகாப்பது உயர்ந்த தர்மமாகக் கருதப்படுவதோடு, அறிவியல்ரீதியான தத்துவங்களும் உள்ளன. இந்தச் சூழலில் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த பாரம்பரிய பசு வளர்ப்பையும், இயற்கை விவசாயத்தையும் மீட்டெடுக்கும் முயற்சியில், ஸ்ரீ கோசம்ப்ரக்ஷணசாலா டிரஸ்ட்' என்ற அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.
மயிலாடுதுறையை அடுத்த திருவீழிமிழலையில் செயல்படும் இந்த அமைப்பின் நிர்வாகி ஆடிட்டர் குருபிரசாத்திடம் பேசியபோது:
ஆன்மிகம், அறிவியல் ரீதியில் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் முக்கியத்துவம் பெற்ற பசுக்களை தெய்வமாக முன்னோர்கள் போற்றினர். பசுக்களிடம் நாம் பெறும் பால், தயிர், நெய், கோமியம், சாணம் ஆகிய ஐந்தும் மனித வாழ்வியலில் முக்கியமானவை. நாட்டின் செல்வ வளங்களில் சிறப்பான பசுக்களைக் காப்பது ஆட்சியாளர்களின் கடமையாகும்.
இதனை ஆநிரை மீட்டல்', ஆநிரை கவர்தல்' என்றெல்லாம் சங்க காலப் பாடல்கள் புகழ்ந்துள்ளன. பசுவின் துயர்துடைப்பதற்காக தனது மகனை தேரில் இட்ட எல்லாள மன்னரே மனு
நீதிச் சோழன்' என்று வரலாற்றில் நிலை பெற்றார். இதுபோன்ற அனுபவங்கள்தான் கோ சாலையைத் தொடங்க உத்வேகத்தை அளித்தது. பசுக்களுக்குத் தேவையான நல்ல நீர், பசுமையான புல், வைக்கோல், வளமான நீர் ஆதாரம், இயற்கைத் தீவனம் அனைத்தும் ஒரே பகுதியில் கிடைக்கும் இடமாகப் பயணித்தேன்.
சென்னையைப் பூர்விகமாகக் கொண்ட நான், பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்தேன். திருவீழிமிழலைக்கு வந்தபோது, நான் பார்த்த இடம் ஒரு பனந்தோப்பு. பூலோகத்து கற்பக விருட்சம்' என்று கூறப்படும் பனை மரங்களும் பசுக்களும் சேர்ந்து அமைவது இறைவனின் பரிசாகும். அந்த இடத்திலேயே பசு பாதுகாப்பகத்தை 2007- இல் துவக்கினேன்.
இங்கு நோய்வாய்ப்பட்டவை, வயதானவை, மலட்டுப் பசுக்கள், மடிவற்றியவை என பராமரிக்க இயலாமல் கைவிடப்பட்ட பசுக்களையும், இறைச்சிக் கடைகளுக்காக அனுப்பப்படுவதில் மீட்டெடுக்கப்படும் பசுக்களையும் பராமரிக்கிறோம். இங்கே வளரும் பசுக்கள் கன்று ஈன்றவுடன், அவை தரும் பாலை அருகிலுள்ள கோயில்கள், அன்னசாலைகளுக்கு அனுப்பி விடுவோம். அவற்றை விற்பதில்லை.
கன்று ஈன்றவுடன் பசுவை எங்களுக்கு உதவிபுரியும் விவசாயிகளுக்கு அளித்து விடுவோம். கன்றுகள் பெருகும் அல்லவா? பெண் கன்றுகளாக இருந்தால் அவர்களே வைத்து, விருத்தி செய்து கொள்ளலாம். காளைக் கன்றுகளாக இருந்தால், எங்களிடம் அளித்துவிட வேண்டும் என்பதே நிபந்தனை. ஏனெனில், காளைக்கன்றுகளை இறைச்சிக் கடைகளுக்கு விற்று விடுவதைத் தடுக்கவே இந்த முயற்சியாகும்.
இயற்கை விவசாயம்
பசுக்களில் கிடைத்திடும் இயற்கை உரங்களைக் கொண்டே பாரம்பரியமான மரபு ரக விதைகளை அளித்து, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கிறோம். இப்படி விளைந்த மரபு ரக நெல் பயிர்களை நாங்களே நல்ல விலைக்கு வாங்கிக் கொள்கிறோம். அதிலிருந்து கிடைக்கும் அரிசியைச் சேகரித்து, அன்னதானத்துக்கு உபயோகப்படுத்துகிறோம்.
கடந்த ஆண்டு கும்பகோணம் மகாமக நிகழ்வின்போது, ஐந்து லட்சம் பேர் உணவு அருந்துவதற்கு இந்த ஒரே ரக இயற்கை அரிசிதான் உபயோகப்படுத்தப்பட்டது.
ரசாயன உரங்களால் சீரழிந்திருக்கும் மண் வளத்தை திரும்பவும் மீட்டெடுக்கும் இயற்கை விவசாயத்துக்கு பசுக்கள்தான் உதவுகின்றன. பசுக்களின் எருவானது மண்ணின் நுண்ணுயிர் வளத்தை அதிகரிக்கிறது.
எங்களிடமுள்ள பசுக்களிலிருந்து தரமான விபூதி தயாரிக்கிறோம். இதன் விற்பனையின் மூலம் வரும் வருவாயை கோசாலைக்குப் பயன்படுத்துகிறோம். சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளிட்ட பல கோயில்களுக்கு இங்கிருந்தே விபூதிகளை அனுப்புகிறோம்.
பனங்காடு
பனங்காடுகளில் கிடைக்கும் பனை மரங்களின் விதைகளை முளைக்க வைத்திடும் திட்டத்தையும் செயல்படுத்துகிறோம். விதைப்பந்துகள், பஞ்ச கவ்ய விளக்கு தயாரிப்புகள் போன்றவை பெண்கள் வாழ்வாதாரத்துக்கு வழி ஏற்படுத்துகின்றன. இயற்கைவழி பொருள்கள் தயாரிப்பை மேலும் விரிவாக்கம் செய்ய உள்ளோம்.
கிராமப்புறப் பெண்கள் முன்னேற்றம், மாணவர்கள் கல்வி முன்னேற்றம், மருத்துவ வசதி, யோகா வகுப்புகள் உள்ளிட்ட பல திட்டங்களைச் செயல்படுத்துகிறோம். சிதிலமடைந்த கோயில்கள் புனரமைப்பில் பங்கேற்பதுடன் தினசரி பூஜைகளுக்கும் வழிவகை செய்து தருகிறோம்.
உம்பளச்சேரி பசுவின் சிறப்புகள்
கலப்பின மாடுகளால் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ள உம்பளச்சேரி பசுக்கள் உள்ளிட்ட நாட்டு ரகங்கள் மட்டுமே எங்களிடம் உள்ளன. நாட்டின் ஒவ்வொரு பகுதியின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவகையில் ஒவ்வொரு நாட்டுப் பசு இனம் சொல்லப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதிக்கு உம்பளச்சேரி பசு இனம்தான் ஏற்றது. இதுதொடர்பான குறிப்புகள் திருமந்திரத்தில் உள்ளது.
தலைஞாயிறு பகுதிக்கு அருகேயுள்ள உம்பளச்சேரி என்கிற கிராமத்தைத் தாயகமாகக் கொண்ட இந்த பசு பிறக்கும்போது, செம்பட்டை நிறத்தில் இருக்கும். கன்றுகள் வளர வளர கருத்த நிறத்துக்கு மாறிவிடும். கடினமான குளம்புகள் சேற்றுக்குள் எவ்வளவு நேரம் நின்றாலும் அழுகுவதில்லை.
சிறிய கொம்புகள் உள்நோக்கி வளைந்து இருக்கும். இவை சேற்றுவயல் வேலைகளின்போது, மாட்டிக் கொள்வதில்லை. சதுப்புப் புற்களை விரும்பி உண்ணும். டிராக்டர்களின் வருகைக்குப் பிறகு உம்பளச்சேரி பசு இனம் குறையத் தொடங்கியது.
குறைவான பாலாக இருந்தாலும் இது ஏ2 வகையைச் சார்ந்த பால் என்பதுடன், அதிக நோய் எதிர்ப்புத் திறன் கொண்டது. இதன் கோமியத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஜீவாமிர்தம் இயற்கை விவசாயத்துக்கு உகந்தது.
சென்னையில் வழக்குரைஞராகப் பணியாற்றும் எனது மகன் கிரிதர், பல தன்னார்வலர்கள் எனக்கு உதவியாக இருக்கின்றனர்' என்கிறார் குருபிரசாத்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
17 வயது சிறுவன் கொலை: கொலையாளியை சுட்டுக் கொன்ற உத்தரப் பிரதேச காவல்துறை!
முன் விரோதத்தில் இளைஞா் கத்தியால் குத்திக்கொலை: சிறுவன் உள்பட 2 போ் கைது

முக்கியக் கனிமங்களின் சீரான விநியோகம்: இந்தியா-அமெரிக்கா முக்கிய ஒப்பந்தம்- சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க வியூகம்





