'ஒருமுறை நான் நாரதகான சபாவில் நாடகம் பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன். அங்கு அறுபத்தைந்து வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் என்னைப் பார்த்து, 'நாங்கள் எம்.எஸ். அம்மாவை கடவுளாக நினைக்கிறோம். எம்.எஸ்.ஸாக உங்கள் நடிப்பைப் பார்த்தபிறகு அவர் உயிருடன்தான் இருக்கிறார் என்று பேசிக் கொண்டோம்' என்று கூறியதைக் கேட்டதும் நான் மெய்சிலிர்த்தேன்.
என்னை அவர்கள் எம்.எஸ்.ஸாக ஏற்றுக்கொண்டார்கள் என்பதே எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த நாடகத்தை உலகம் முழுவதும் எடுத்துச்செல்லவேண்டும்'' என்கிறார் நடனக் கலைஞரும், மேடை நாடக நடிகையுமான லாவண்யா வேணுகோபால்.
இசைப்பேரரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் 'காற்றினிலே வரும் கீதம்' எனும் நாடகம் சென்னையில் மேடையேறி இருக்கிறது. எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடித்து, ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்திருக்கிறார் லாவண்யா வேணுகோபால். அவர் தனித்துவமான நடிப்புக்காக 'வாணி கலா நிபுணர்', 'கே.பாலசந்தர் விருது', அரக்கோணம் அருகேயுள்ள நெமிலி பாலா பீடம் வழங்கிய 'பால ரத்னா' விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். அவரிடம் பேசியபோது:
'எனதுஆறு வயதில் பிரபல நடனத் தம்பதி வி.பி.தனஞ்செயன்- சாந்தா தனஞ்செயனிடம் எட்டு ஆண்டுகள் நடனம் கற்றேன். பின்னர், நடனக் கலைஞர் ராதாவிடமும், கலைமாமணி ஊர்மிளா சத்தியநாராயணாவிடமும் பயிற்சி பெற்றேன். பல மேடைகளில் நடனம் ஆடியிருக்கிறேன்.
2013-இல் குடந்தை மாலி தயாரித்த 'மன்னிக்க வேண்டுகிறேன்' என்ற நாடகத்தில் நடித்தேன். பின்னர், 'ஷேரத்தா' என்ற அமைப்பு தயாரித்த 'இப்படிக்கு நந்தினி' என்கிற நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தபோது, மயிலாப்பூர் அகாதெமி சார்பில் சிறந்த நடிகை விருது பெற்றேன்.
காத்தாடி ராமமூர்த்தியின் 'ஸ்டேஜ் கிரியேஷன்ஸ்' நாடகக் குழு சார்பில் எட்டு ஆண்டுகள் பல்வேறு நாடகங்களில் நடித்தேன். எஸ்.எஸ்.கிரியேஷன்ஸ் குழுவின் 'தெய்வத்துள் தெய்வம்' நாடகத்தில் நடனக் கலைஞர் பத்மா சுப்பிரமணியமாக நடித்தேன். 'கோமல் தியேட்டர் நாடகக் குழு' இயக்கிய பல நாடகங்களிலும் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது.
2023-இல் 'ஷத்ரீ' என்ற நாடகக் குழுவை நாடகக் கலைஞர் பாஸ்கருடன் இணைந்து ஆரம்பித்தேன். முதன்முதலாக 'பாயும் ஒளி' என்ற நாடகத்தை மேடையேற்றினோம். அந்த நாடகத்தில் சிறப்பாக நடித்ததற்காக, மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸின் சிறந்த நடிகைக்கான விருது எனக்குக் கிடைத்தது. 2024-இல் 'காட்சிப் பிழைகளோ' என்ற நாடகத்தைத் தயாரித்தோம். அதில் கண் பார்வையற்ற பெண்ணாக நடித்தது சவாலான அனுபவம். கோடை நாடக விழாவில் அந்த நாடகம் பல விருதுகளைப் பெற்றது.
2025-இல் 'களவு நீக்கிய படலம்' எனும் நாடகமும் பல விருதுகளை வென்றது. 'மென்டல் மனதில்' என்ற நான்காவது நாடகத்தை கொல்கத்தாவில் அறிமுகப்படுத்தினோம்.
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு நாடகம்
'காற்றினிலே வரும் கீதம்' நாங்கள் தயாரித்திருக்கும் ஐந்தாவது நாடகம். 2017-இல் மும்பை சண்முகானந்தா அரங்கத்துக்குச் சென்றபோது, அங்கிருந்த எம்.எஸ். அம்மாவின் சிலை, அவரது புகைப்படங்களைப் பார்த்துப் பரவசமானேன். எம்.எஸ்.ஸின் வாழ்க்கை மற்றவர்களுக்கு மிகப் பெரிய உந்துசக்தியை அளிக்கும் என்று நினைத்து, நாடகமாக ஏன் எடுக்கக் கூடாது என்ற எண்ணம் என் மனதில் வேர்விட்டது. பின்னர், சொந்தமாக 'ஷத்ரீ' நாடகக் குழுவை ஆரம்பித்தபோது, சக அமைப்பாளரான பாஸ்கரிடம் இதைப்பற்றிச் சொன்னபோது அவரும் ஆமோதித்தார்.
எழுத்தாளர் வி.எஸ்.வி. ரமணனின் 'எம்.எஸ்.' குறித்த நூலை அடிப்படையாகக் கொண்டு 'காற்றினிலே வரும் கீதம்' நாடகத்தைத் தயாரித்தோம். எம்.எஸ்.ஸாக நானும், எம்.எஸ்.ஸின் கணவர் சதாசிவம் கேரக்டரில் பாஸ்கரும் நடித்தோம். தட்சிண் இசையமைத்துள்ளார். இரண்டு மணி நேர நாடகத்தில், எம்.எஸ்ஸின் குழந்தைப் பருவம், சதாசிவத்தை அவர் முதன்முதலில் சந்தித்த நிகழ்வு, சதாசிவத்தின் பங்கு, திரைப்படத்தில் எம்.எஸ்.
நடித்தது, புகழின் உச்சியில் இருந்தபோதே திரைத்துறையை விட்டு விலகியது, குடும்பத் தலைவியாக எம்.எஸ்.ஸின் பெருமைகள், பொருளாதாரத்தில் நலிவைச் சந்தித்தபோதும் அமைதியாக அவர் தனது இசைப் பயணத்தைத் தொடர்ந்தது, அவரிடம் மகா பெரியவாவே அன்னமாச்சாரியாவின் கீர்த்தனைகளைப் பாடச் சொன்னது, 'பாரத ரத்னா' விருது பெற்றது என்று அரிய நிகழ்வுகள் இந்த நாடகத்தில் இடம்பெற்றுள்ளன.
இதுவரை நான் 37 நாடகங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தபோதும், இந்த நாடகம் எனக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது. எம்.எஸ். அம்மாவுடன் நெருங்கிப் பழகிய, அவரைப் பற்றி நன்கு அறிந்த பலர் இப்போதும் வாழ்ந்து வருகிறார்கள். மறைந்த ஒருவரின் ஆளுமையாக நடிக்கும்போது அவரது மேனரிசங்கள், உடல் மொழிகள், பழக்கவழக்கங்கள் எல்லாவற்றையும் பிரதிபலிக்கும் வகையில் என் நடிப்பு இருக்க வேண்டும் என்பதற்காகப் பெரிதும் மெனக்கெட்டேன்.
எம்.எஸ். அம்மாவின் இளமைப் பருவ விடியோக்கள் அதிகம் இல்லை. வயதான காலத்தில் விடியோக்கள் மட்டுமே கிடைத்தன. அதை வைத்து இளம் பருவத்தில் அவர் எப்படி இருந்திருப்பார், எப்படிப் பேசியிருப்பார், அவரது இயல்பு என்ன என்பதையெல்லாம் கற்பனை செய்து பார்த்து என் நடிப்பை மெருகேற்றிக் கொண்டேன். எம்.எஸ். மீது ஆத்மார்த்தமாக நான் வைத்திருக்கும் அபிமானம்தான் என் நடிப்பில் பிரதிபலித்தது. இந்தக் கதாபாத்திரத்தின் புனிதம் கெடாமல் இருக்க, மிகுந்த பயபக்தியுடன் பயிற்சி எடுத்துக்கொண்டேன். அதற்கு நல்ல பலனும் கிடைத்திருக்கிறது.
ரசிகர்களின் வரவேற்பு
எம்.எஸ். அம்மாவை போலவே நான் நடித்துள்ளதாக ரசிகர்கள் பலர் மனதாரப் பாராட்டினர். முதல் சீசனில் தொடர்ந்து நான்கு காட்சிகளைப் போட்டோம். தொடர்ந்து பணம் கொடுத்து நுழைவுக்கட்டணத்தைச் செலுத்தி ரசிகர்கள் பார்த்தனர். இரண்டு பெண்கள் என்னைச் சந்தித்து, மிகப் பெரிய பூங்கொத்தைப் பரிசளித்தனர். அந்தப் பூங்கொத்திலுள்ள பூக்கள் வாடி, சருகாகிவிட்டபோதிலும் இன்னமும் அதை நான் பத்திரமாக வைத்திருக்கிறேன். எத்தனை விருதுகள் பெற்றாலும் அதற்கு ஈடாகாது'' என்கிறார் லாவண்யா வேணுகோபால்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நாடகத்தில் நாராயண குரு
எஸ்.எம். சுப்பையா நாயுடு - நான் சந்தித்த பிரபலங்கள் - 45

ரேகா - நான் சந்தித்த பிரபலங்கள் - 44

பாரதிராஜா - நான் சந்தித்த பிரபலங்கள் - 41
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

