சினிமாவின் அடிப்படையே மிகைதான்!
'குலேபகவாலி' படத்தொகுப்பு அளித்தது ஆச்சரிய அறிமுகம்.
'குலேபகவாலி' படத்தொகுப்பு அளித்தது ஆச்சரிய அறிமுகம். ' வலிமை', 'துணிவு', 'மார்க் ஆண்டனி', 'குட் பேக் அக்லி' என அடுத்தடுத்த வெற்றிப் படங்களுக்கு வியூகம் வகுத்த தமிழின் நம்பத்தகுந்த படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி. ' சர்தார் 2' படத்தொகுப்பு பணிகளுக்காக இப்போது பாராட்டுகளைப் பெற்று கவனம் பெற்றுள்ளார். அடுத்து அஜித் நடிக்கும் 'டேர் டேவில்' படத்துக்காகத் தயாராகி வருகிறார்.
அவருடன் ஒரு சந்திப்பு:
படத்தொகுப்பாளரின் சுவாரசியம் எதிலிருந்து தொடங்குகிறது?
இயக்குநரின் கற்பனையை, திரைக்கதையை காட்சி அடுக்குகளாக மாற்றுவதுதான் ஒரு படத்தின் ஆக்கத்தில் இருக்கும் மிகவும் சந்தோஷமான பகுதி. எனவே படத்தொகுப்பாளராக எனது பணியை மிகவும் விரும்பிச் செய்கிறேன். முதல் படம் 'குலேபகவாலி'. விறுவிறுப்பான கதை. அடுத்த படம் 'வலிமை', 'துணிவு' எல்லாமே வேறு ரகம். அடுத்தடுத்து வரிசையாகப் படங்கள்.
இப்போதுதான் படத்தொகுப்பின் சூட்சுமமே புரிகிறது. ஒரு காட்சிக்கும், இன்னொரு காட்சிக்குமான தொடர்பை கொஞ்சம் மிகைப்படுத்தினாலும், தொகுப்பின் தன்மை மாறிவிடுகிறது. ஒரு காட்சியை எடுப்பதற்கு, அதற்கு ஒளியமைப்பதற்கு இருபதுக்கு மேற்பட்ட வழிகள் இருக்கின்றன.
இந்த இருபது வழியையும் ஒவ்வொன்றாக முயற்சித்துப் பார்த்து கடைசியில் சரியானதைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு சுவாரசியமும் இல்லை. ஒரு காட்சியை இன்னொன்றுடன் சேர்ப்பதில் சிறந்த வழி எது என்பதை பார்த்தவுடன் கண்டுபிடிக்க வேண்டும்.
நாடியைப் பிடித்து உங்கள் உடலைப் பற்றிச் சொல்வதைப் போல ஒரு நுட்பமான பயிற்சி இது. அந்தப் பயிற்சியை முதல் படத்திலிருந்து முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன். இப்போதுதான் அதன் சூட்சுமம் புரிகிறது.
சினிமாவில் எடிட்டிங் என்பதே கண்ணுக்குத் தெரியாத கலையாகத்தான் இருக்கிறது. படம் விறுவிறுப்பாக இருந்தால், அது நல்ல எடிட்டிங் என்பது சரியா?
எடிட்டிங் பற்றி நிறையப்பேர் பேச ஆரம்பித்து விட்டார்கள். கொஞ்சம் தொழில்நுட்ப அறிவு இருந்தால், எல்லோருமே எடிட் செய்யலாம் என்கிற நிலை வந்திருக்கிறது. பல படங்களுக்கு எடிட்டர் செய்கிற ட்ரெய்லரை விட, சமூக வலைதளங்களில் வெளிவரும் ட்ரெய்லர் அவ்வளவு அருமையாக இருக்கிறது. ஆனால், எடிட்டிங் அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. நிறைய விஷயங்கள் இருக்கிறது.
ஒரு கதை எனப்படுவது வெவ்வேறு கோணத்தில் வெளிப்படலாம். ஆனால், சொல்ல வருகிற இலக்கு என்பது முக்கியம். எல்லோருக்கும் தனித்தனிப் பார்வை இருக்கும். குறிப்பாக படத்தின் இயக்குநருக்கு ஒரு பார்வை இருக்கலாம். சில பேர் விரிவாக எடுத்து வருவார்கள்.
எடிட்டிங் டேபிளில் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளலாம் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருக்கும். அதற்கும் சேர்த்து எடிட்டர்தான் யோசிக்க வேண்டும். ஒரு கதையை அதன் போக்கில் போய், சுருக்கமாக, அதே நேரத்தில் திரைக்கதை சிதைவு இல்லாமல் சொல்லுவதுதான் எடிட்டிங்.
ரசிகனாக 2 மணி நேரத்தில் நீங்கள் புரிந்துகொள்ளக்கூடிய கதையை, நாங்கள் குறைந்தது 4 மணி நேர சினிமாவாகப் பார்க்க வேண்டும். அதை உங்களுக்கு சுவாரஸ்யம் குறையாமல் கொடுப்பதுதான் எடிட்டிங். கதை உங்களுக்குப் புரிந்தால் அது நல்ல எடிட்டிங்.
பெரும் மன அழுத்தம் தரும் வேலை இல்லையா?
அதற்குக் காரணம், தொடர்ச்சியான வேலைகள்தான். ஒரு படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஆரம்பித்து, படம் வெளியாகி ஒரு வாரம் ஓடும் வரையிலும் வேலை இருந்துகொண்டே இருக்கும்.
இயக்குநருக்குப் பிறகு ஒரு படத்தொகுப்பாளர்தான் ஒரு படத்தோடு அதிக நாள் பயணிக்க வேண்டியிருக்கும். சரியான திட்டமிடல், அவ்வப்போது ஓய்வு இருந்தால், மன அழுத்தத்திலிருந்து தப்பிக்கலாம். வேலையை சரியாகப் பார்ப்பது எந்தளவுக்கு முக்கியமோ, அந்தளவுக்கு இடையில் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்வதும் முக்கியம். இதைப் புரிந்து வேலை பார்த்தால் நல்லது.
தமிழ் சினிமாவில் உள்ள மிகையை படத்தொகுப்பாளராக எப்படிப் பார்க்கிறீர்கள்?
சினிமாவின் அடிப்படையே மிகைதான். அதை நாம் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது. உலக சினிமாவிலும் மிகை உண்டு. உதாரணத்துக்கு 'அவதார்' மாதிரி ஒரு வாழ்க்கை இங்கே இருக்கிறதா என்ன... அது இயக்குநரின் கற்பனை. அந்தக் கற்பனைக்குத்தான் இங்கே காசு. முதன் முதலில் சினிமாவில் வண்ணம் வந்த போது நடிகர்கள் கலர் கலராக உடைகள் அணிந்து வந்தது மாதிரிதான் இதுவும். எல்லாவற்றுக்கும் மேலாக தொழில்நுட்பம் தருகிற வசதிகள் நம் கட்டுக்குள் இருக்க வேண்டும். இதில் சில விதிவிலக்குகள் இருக்கலாம். இருந்தாலும், இது சினிமா என்ற கோணத்தில் அணுக வேண்டும்.
எந்தெந்த இயக்குநர்களிடம் வேலை பார்க்க வேண்டுமென ஆசை?
இதில் என்ன கணக்கு? எல்லோரிடமும்தான். குறிப்பாக இப்போது வருகிற இளம் தலைமுறை இயக்குநர்கள். அவர்களின் புதுப்புது கற்பனைகள் அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கின்றன. இளைஞர்கள் நிறைய வாதிடுவார்கள். அதை வேல்யூ செய்வார்கள்.
ஒரு ஐடியா சொல்லி, அதை இப்படிக் கொண்டு வரலாம் என்று கேட்பார்கள். நான் நினைப்பதை அவர்களிடம் சொல்லலாம். இந்த சுதந்திரம், சீனியர் இயக்குநர்களிடம் இருக்குமா என்று தெரியாது. நான் சொல்லுவதைக் கேட்டு அதை வேறு விதமாகக் கொண்டு வருவார்கள். ஈகோ இருக்காது. திறந்த மனதோடு இருப்பார்கள். புது இயக்குநர்கள்தான் என் விருப்பம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

