
பசுமை கலாம்!
சுற்றுச்சூழல் மீதான அக்கறையால் இளைய தலைமுறையினர் ஒன்றிணைந்து சேலம் மாவட்டத்தில் ஆறாவது ஆண்டாகப் பல்வேறு விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெ.பெரியார்மன்னன்
சுற்றுச்சூழல் மீதான அக்கறையால் பாக்கியராஜ், பிரதீப் குமார், பாலமுருகன், மணிகண்டன், ஜெயசீலன், சாந்தி, காமாட்சி, முருகன், மணிகண்டன், ஆசிப், இக்பால், சண்முகம், சரவணன், கார்த்திக், வைகைநாதன், சீனிவாசன், ஜெகநாதன் உள்ளிட்ட இளைய தலைமுறையினர் ஒன்றிணைந்து சேலம் மாவட்டத்தில் ஆறாவது ஆண்டாகப் பல்வேறு விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இக்கட்டான குடும்பச் சூழ்நிலை, பணிச்சுமைகளுக்கு இடையே மேற்கொண்டு வரும் சமூகப் பணிகள் குறித்து அவர்களிடம் கேட்டபோது:
'பூமியில் அதிகரித்துள்ள சுற்றுச்சூழல் மாசுபாட்டால் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு வறட்சி, பெருவெள்ளம் உருவாகி வருகிறது. இதனால் மனிதர்களுக்கும், உயிரினங்களுக்கும் மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு சுற்றுச்சூழல் மாசுபாடு, பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் அரசோடு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கரம் கோர்த்து வருகின்றனர்.
இதேபோல், நாங்கள் ஒன்றிணைந்து, 'பசுமை கலாம் நண்பர்கள் அறக்கட்டளை'யைத் துவக்கி, விடுமுறை நாள்களில் கல்வி நிலைய வளாகங்கள், அரசு அலுவலகங்கள், பொது இடங்கள், நீர்நிலைகளில் முகாமிட்டு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் பணிகளைச் செய்து வருகிறோம்.
இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை விதைகளை விதைத்துள்ளோம். இவற்றில் பெரும் பகுதி துளிர்விட்டு வளரத் தொடங்கியுள்ளன. இந்த ஆண்டும் பல்வேறு இடங்களுக்குச் சென்று 2 மாதங்களில் 9 ஆயிரம் பனை விதைகளைச் சேகரித்தோம். வலசையூர், மாசிநாயக்கன்பட்டி ஏரிகள், வரட்டேரி, கஞ்சமலை அடிவாரம், தும்பல், கருமந்துறை மலைப் பகுதிகளில் இதுவரை சுமார் 6,500 பனை விதைகளை விதைத்துள்ளோம். மீதமுள்ள பனை விதைகளை முளைக்க வைத்து நாற்றுகளாக உருவாக்கி, அடுத்த ஆண்டு நடவு செய்ய உள்ளோம்.
தமிழ்நாட்டின் மாநில மரம் மட்டுமின்றி, முழுவதும் பயனாகும் மரங்களில் முதன்மையாகத் திகழும் நிலத்தடி நீர்மட்டத்தைக் காக்கும் பனை மரத்தின் விதைகளைச் சேகரித்து விதைத்து வருவது மனதுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
எங்களுடன் சிறார்கள் யோகேஸ்வரி, தியானேஸ்வரன், கெளதம், கார்த்திகேயன், அச்சுதன், அதித்ரா, ஹேமந்த் மித்ரன், பாத்திமா உள்ளிட்டோர் ஆர்வத்துடன் களப்பணி ஆற்றுகின்றனர். இது எதிர்வரும் தலைமுறையினருக்கும் சுற்றுச்சூழல் மீது புதிய நம்பிக்கையை தந்துள்ளது. மாணவ- மாணவியருக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்' என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





