மூளையின் 'நினைவகம்' செயல்படுவது எப்படி?
மத்திய அறிவியல் ஆலோசகர் அலுவலகம் கொடுத்த ரூ.30 கோடி உதவியுடன் உருவானது ஐ.ஐ.டி.யிலுள்ள சுதா கோபாலகிருஷ்ணன் பிரைன் மையம் என்கிற மனித மூளை ஆராய்ச்சி மையம்.
கரோனா தொற்று காலகட்டத்தில் மத்திய அறிவியல் ஆலோசகர் அலுவலகம் கொடுத்த ரூ.30 கோடி உதவியுடன் உருவானது சென்னை ஐ.ஐ.டி.யிலுள்ள சுதா கோபாலகிருஷ்ணன் பிரைன் மையம் (எல்.ஜி.பி.சி.) என்கிற மனித மூளை ஆராய்ச்சி மையம். அதன்பின்னர் தனியார் நன்கொடையாளர்கள், பெருநிறுவன சமூக பொறுப்பு நிதி போன்றவை மூலம் சுமார் ரூ.180 கோடி வரை வசூலானது.
இதில் ரூ.100 கோடிக்கும் மேல் நிதிவழங்கியவர் இன்போசிஸ் இணை நிறுவனர் கிரீஷ் கோபாலகிருஷ்ணன். இதனால் இந்த மையத்துக்கு அவருடைய மனைவி சுதா கோபாலகிருஷ்ணன் பெயர் வைக்க உரிமை வழங்கப்பட்டது. இப்படிப்பட்ட பின்னணியோடு இந்த மையத்தின் சமீபத்திய முன்னேற்றம் பிரதமர் நரேந்திர மோடியை இங்கு வரவழைத்தது.
கம்ப்யூட்டர் ஹார்ட்டு டிஸ்க் - மெமரி (நினைவகம்), ரேம், சூப்பர் கம்ப்யூட்டர் போன்றவற்றை ஐ.ஐ.டி.க்கள் உருவாக்கும். மனித மூளையின் மெமரி (நினைவாற்றல்), உயிரணுக்கள் விவகாரத்தை இந்தத் தொழில் நுட்ப நிறுவனம் கையில் எடுத்துள்ளது.
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் சில தொழில் நுட்பநிறுவனங்கள் மூளையை ஆராயத்தொடங்கியுள்ளன. இந்தியாவும் இந்த ஆய்வில் இறங்கியுள்ளது.
'பொதுவாக இந்தியா மற்ற மேலைநாடுகளிடம் ஆய்வுகளையும் தரவுகளையும் கேட்கும் வழக்கம் இருந்தது. ஆனால், நிலைமை மாறி தற்போது இந்த விவகாரத்தில் எங்களோடு பணியாற்ற பிரிக்ஸ் நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து கோரிக்கைகள் வருகிறது. இது ஒரு பெரிய மாற்றம்' என்கிறார் சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி.
இப்போது சென்னை ஐஐடி 'மூளை'ஆராய்ச்சி மையம் செய்துவரும் பணிகள் குறித்து அவர் மேலும் கூறியது:
'சென்னை, வேலூர் மருத்துவமனைகளில் உயிரிழந்த மனித மூளைகளை சென்னை ஐ.ஐ.டி.யின் எஸ்.ஜி.பி.சி. பெற்றது. கருக்கலைப்பு செய்யப்பட்ட ஒரு அரைகுறை சிசுவின் மூளை முதல், 2, 3, 5 மாதங்கள் வளர்ச்சிக்கட்டங்களில் இருந்த குழந்தைகளின் மூளைகள், வயதான முதியவர்களின் மூளைகள் வரை பெறப்பட்டது.
இது தவிர மூளை தொடர்பான உயிரிழப்புகளான பக்கவாதம், அல்சைமர் உள்ளிட்ட ஞாபகமறதி, வெறிநாய்க்கடி உள்ளிட்ட நோய்களில் பாதிக்கப்பட்ட மூளைகள் என சுமார் 60 மூளைகள் வரை பெறப்பட்டு எஸ்.பி.ஜி.பி.சி.யில் ஆராய்ச்சியில் உள்ளன. மூளையின் கட்டமைப்பைக் கண்டறிவது முதல் கட்ட நோக்கம். இந்த மூளைகள் 0.5 மைக்ரான் (0.000019685) அளவில் துண்டுகளாக வெட்டப்படுகிறது. அதற்குள் இருக்கும் கட்டமைப்பு ரீதியான இணைப்புகள் கண்டறியப்படுகிறது.
அதாவது, மூளையில் அடுக்கான லேயர்கள் உள்ளன. ஒவ்வொரு லேயருக்கும் நடுவே ஏராளமான இணைப்புகள் உள்ளன. இதில் மிகப்பெரிய அளவிலான தரவுகள் உள்ளது. சம்பந்தப்பட்ட நோயாளிகள் பாதிப்புகளைக் கண்டறிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்திருக்கலாம். இந்த எம்.ஆர்.ஐ. ரிப்போர்ட்டில் மில்லி மீட்டர் துல்லியமாகக் காணமுடியும். ஆனால், எஸ்.பி.ஜி.பி. மையத்தில் செல் (உயிரணு) அளவில் (அதுவும் 3டி அட்லஸ் முப்பரிமான) காணும் தொழில் நுட்பம் மூலம் காணப்படுகிறது. இப்படி பக்கவாதம் பாதித்த நோயாளியின் மூளையில் செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது. இதன் தரவுகள் சேமிக்கப்படுகிறது.
மனித மூளை 5 பெட்டாபைட்
ஒரு மனித மூளையிலுள்ள தரவுகளை சேமித்து வைக்க 5 பெட்டாபைட் தரவு நினைவகம் (சுமார் 1000 லேப்-டாப்களுக்குச் சமம்) தேவை. 1000 ஜிகாபைட் (ஜிபி) சேர்ந்தால் 1 டெராபைட், 1000 டெராபைட் சேர்ந்தால் 1 பெட்டாபைட். (ஒரு பெட்டாபைட் என்பது சுமார் 10 லட்சம் கிகாபைட் அளவுக்குச் சமம்.) இந்த மாதிரி 5 மடங்காக 5 பெட்டாபைட் ஸ்டோரேஜ் மனித மூளையின் தரவுக்குத் தேவை.
இந்த அளவிலான தரவு ஒவ்வொரு மூளைக்குள்ளும் சேமிக்கப்படுகிறது. இப்படி இதில் முதற்கட்டமாக 5 குழந்தைகளின் மூளைகளைக் கையாண்டு, அதன் தரவுகளை முற்றிலுமாகப் பெறப்பட்டு பொதுவெளியில் (ஓப்பன் சோர்ஸ்) வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சி 'ஐ.ஐ.டி. மெட்ராஸ் ஃபார் ஆல்' என்கிற நோக்கத்தின் அடிப்படையிலானது. தரவுகளை வைத்து நோபல் பரிசை பெற முயற்சிக்கவில்லை. அது மட்டுமே நோக்கமல்ல. இது எல்லோருக்கும் பயன்பெற வெளிப்படையாக வைக்கப்பட்டது' என்கிறார் ஐ.ஐ.டி. இயக்குநர் வி.காமகோடி.
மனித மூளையை வைத்து உலகில் வளர்ந்த நாடுகள் ஆய்வு செய்யவில்லை; இதைச் செய்யும் ஒரே இடம் சென்னை ஐ.ஐ.டி. தான் என்கின்றனர்.
கடந்த 11- ஆம் தேதி பிரதமர் மோடி இந்த மையத்துக்கு வந்தபோது, 60 மூளைகளைப் பார்த்ததோடு, மொத்தம் 100 மூளைகளுக்கான ஆராய்ச்சி என்கிற இலக்கினை அவர் தொடங்கிவைத்தார். இங்குள்ள மூளைகளின் ஆய்வுகளைக் கேட்டு வியந்தார். தரவுகள் எவ்வாறு சேகரிக்கப்படுகிறது என்பதை கேட்டறிந்த அவர், இந்த நூறு போதாது; விதவிதமான 1000 மூளைகளை கூட ஆய்வு செய்யலாம்.
இதன் தரவுகளை சேகரிக்க எவ்வளவு காலமாகும்? தரவுகளை சேகரிக்க ஏன் தாமதமாகிறது? இதில் நெறிமுறைச் சிக்கல்கள், சமூகச் சிக்கல்கள் இருக்கிறதா? என்ன தேவை? எனவும் கேட்டு, அதற்கான நோக்கத்தையும் பிரதமர் ஆய்வாளர்களிடம் வெளிப்படுத்தினார். பிரதமர் வைத்த கேள்விகளை இந்த மையத்தின் பேராசிரியர்கள் நம்மிடம் விளக்கினர்.
யானையின் மூளை
'ஒருவர் கோமாவில் இறந்துவிட்டால், அவருடைய மூளை எப்படி இருந்தது என ஆய்வு செய்யலாம். ஒரு யோகியின் மூளை எப்படிப்பட்டது? தியானம், யோகா செய்பவர்களின் மூளை எப்படிப்பட்டது? பக்கவாதம் ஏற்படும் மூளையில் என்ன பாதிப்புகள் நடக்கிறது? மருந்து உள்கொள்ளும்போது எப்படிப்பட்ட மாறுதல்கள் ஏற்படுகின்றன. இவையெல்லாம் சாதாரண மனிதமூளையோடு ஒப்பிட்டுப் பார்க்கலாமே' என்றவர், 'யானைக்கு ஞாபக சக்தி அதிகம் எனப்படுகிறது. யானையின் மூளை எவ்வளவு பெரிது? அதை யாராவது ஆராய்ச்சி செய்துள்ளார்களா?' எனவும் பிரதமர் கேட்டார்.
பேராசிரியர்களும் பொறியாளர்களும் எல்லாவற்றையும் விளக்கினர். தென்னாப்பிரிக்காவில் யானையின் மூளையை ஆராய்ச்சி செய்த விவகாரம் பிரதமருக்கு விளக்கப்பட்டது.
'ஒரு செயற்கை நுண்ணறிவை இயக்குவதில் முக்கியப் பிரச்னை அதற்கு ஏராளமான மின் சக்தி (குறைந்தது 20 வாட்ஸ்) தேவைப்படுகிறது என்பதுதான். ஆனால், மனித மூளை மட்டும் எப்படி வெளிப்புற (மின்)ஆற்றல் ஏதுவுமின்றி எப்படி இயங்குகிறது? அதன் ரகசியம் என்ன ?' என பிரதமர் கேட்க, மனித மூளையைப் போன்று குறைந்த ஆற்றலில் செயல்படும் 'நியூரோமார்பிக் கம்ப்யூட்டிங்' தொழில்நுட்பம் வளர்கிறது. 'இன்ஃபெரன்சிங்' தொழில்நுட்பம் வருகிறது - போன்றவைகளை இந்த எஸ்.ஜி.பி.சி. மையத் தலைவர் மோகன சங்கர் சிவபிரகாசம் விளக்கும் போது தொழில்நுட்ப ரீதியாக அனைத்துக் கேள்விகளையும் கேட்டு எல்லாவற்றையும் புரிந்துகொண்டார் பிரதமர்.
'அவரிடம் ஒரு மாறுபட்ட பரிமாணம் இருந்தது. அதிலும் நாங்கள் இந்த ஆய்வுகளுக்கு எந்தக் கருவிகளையும் வெளிநாட்டுகளிலிருந்து இறக்குமதி செய்யவில்லை. ஸ்லைசர் (வெட்டும் கருவி), பிம்பம் எடுக்கும் கருவிகள் என நிறைய உபகரணங்களை நாங்களே தற்சார்பு முறையில் தயாரித்தவை' எனக் கூறியதைக் கேட்டு பிரதமர் மோடி மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ஆய்வகத்தில் இருந்த எல்லோரையும் அழைத்துப் பேசி உற்சாகப்படுத்தினார் பிரதமர் மோடி.
'மையத்தின் நோக்கத்தையும் சாதனைகளையும் கண்ட மகிழ்ச்சியில் அனைவரையும் அழைத்து அவரே குழுப் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்' என்றனர் இந்த மைய ஆராய்ச்சியாளர்கள்.
எப்படி ஒரு கணினி வன்பொருளில் (ஹார்டு-டிஸ்க்) பேக்-அப் எடுக்கப்படுகிறதோ அதைப்போன்று எதிர்காலத்தில் இயற்கை எய்திய ஒரு மனித மூளையிலிருந்தும் பேக்-அப் எடுக்கும் காலத்துக்கு சென்னை ஐ.ஐ.டி.யின் மூளை ஆராய்ச்சி மையம் நகர்ந்து கொண்டு போகிறது என்று சொல்லலாமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

