எதிர்பாராத முத்தம்' என்ற தலைப்பைப் பார்த்தவுடன் பாரதிதாசனின் நூல் இது என்று நினைவுக்கு வருகிறதா? உண்மைதான். இத்தலைப்பு பாரதிதாசனோடு தொடர்புடையது என்றாலும் இக்கட்டுரை அந்நூல் பற்றியதல்ல. இது என்ன புதிர்...? தொடர்ந்து படியுங்கள். புரியும்.
1963-ஆம் ஆண்டு. பாரதிதாசனைச் சந்திப்பதற்காக மூன்றுபேர் சென்றுகொண்டிருந்தார்கள். ஒருவர் கவிஞர் பொன்னடியான், மற்றொருவர் சோமையா என்னும் பதிப்பாளர். மூன்றாமவர், அவருக்காகத்தான் அவர்கள் இருவருமே பாரதிதாசனைச் சந்திக்கப் போகிறார்கள். அவர் ஒரு கவிஞர்; இளம் பேராசிரியரும்கூட. அவர் புதிதாக ஒரு கவிதைத் தொகுப்பு நூலை வெளியிட இருந்தார். அதற்குப் பாரதிதாசனிடம் முன்னுரை பெறத்தான் அம்மூவரும் பாரதிதாசனைப் பார்க்கச் சென்றனர்.
பாரதிதாசன் படுக்கையில் ஓய்வாகப் படுத்திருந்தார். வணக்கம் கூறி, வந்த நோக்கத்தைச் சொல்லிக் கவிஞரை, பாரதிதாசனுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தபோது, முன்னுரை பெறவந்த கவிஞருக்குத் தமது வகுப்பறை நினைவுக்கு வந்துவிட்டது.
பாரதிதாசனின் மாணவரும், தமது பேராசிரியருமான ஒருவர் உணர்வு கொப்பளிக்கப் பாரதிதாசனின் பாடல்களைச் சொல்லி, அதற்குள் புதைந்திருக்கும் கவித்துவத்தை, புரட்சிப்பாங்கை விளக்கிக் கொண்டிருந்த காட்சி மனதுக்குள் கவியத் தொடங்கியது. தம்மை ஒரு கணம் உற்றுப்பார்த்த பாரதிதாசனை நோக்கி, ""வணக்கம், நான் பேராசிரியர் மு.அண்ணாமலையின் மாணவன்'' என்று கரங்குவித்தார் அந்த இளங்கவி.
கேட்டவுடனே, படுக்கையில் படுத்திருந்த பாரதிதாசன் எழுந்து உட்கார்ந்தார். இளங்கவியைப் பக்கத்தில் அழைத்தார். ""அப்ப நீ என்னுடைய மாணவனுக்கு மாணவன்னு சொன்னா, நீ எனக்குப் பேரன்'' என்று மகிழ்ந்து சொன்னபடி அந்த இளங்கவியின் நெற்றியில் முத்தமிட்டார்.
பாரதிதாசனின் எதிர்பாராத முத்தத்தால் மெய்சிலிர்த்துப்போனார் இளங்கவி. முன்னுரை பெறவந்த தமது கவிதைத் தொகுப்பை அவரிடம் கொடுத்தார். பாரதிதாசன் தருவதாக இசைந்து மறுநாள் அவர்களை வரச்சொன்னார்.
மறுநாள் மிகவும் பயந்தபடி அந்த இளங்கவிஞர் தமது நண்பர்களுடன் பாரதிதாசனைப் பார்க்கப் போனார். காரணம், பாரதிதாசன் பலருக்கு எழுதிய முன்னுரைகளைப் படித்த அனுபவம்.
அண்மையில் அவரது முன்னுரை ஒன்றில், இந்தக் கவிதைகளைத் திருத்திப் படித்துக்கொள்ளலாம் என்ற விமர்சனத்தோடு பாரதிதாசன் எழுதியிருந்தார்.
அதுபோல், தமது நூலுக்கு எப்படி எழுதியிருப்பாரோ, என்று சற்றே பயந்திருந்தார் இளங்கவி. ஆனபோதும், நமது காலத்தில் வாழுகிற ஒரு பெருங்கவி. பாரதியாரைத் தரிசித்தவர். அவரது பேரன்புக்குப் பாத்திரமான சீடர். எனவே அவர் என்ன எழுதியிருந்தாலும் சரி, பெற்றுக்கொள்வோம் என்று நினைத்துக்கொண்டார்.
பாரதிதாசன் அக்கவிஞரின் நூலுக்குத் தாம் எழுதியிருந்த முன்னுரையைக் கொடுத்தார். எழுத்து, கொஞ்சம் கோணல் மாணலாக இருந்ததைப் பிரதி எடுத்துக்கொள்ளச் சொன்னார்.
வியப்பும், மகிழ்வும் தரும்படி அமைந்த முன்னுரைக் கவிதையைத் தம் அழகான கையெழுத்தில் படியெடுக்கத் தொடங்கினார் இளங்கவி.
""அண்ணா மலைப்பல் கலைக்கழகப் பேராசான்
அண்ணா மலைஎன் அரியதமிழ் மாணவனின்
கண்ணான மாணவன்நான் என்று கழறித்தம்
கையெழுத்துப் படியைக் கண்ணுக் கெதிர்வைத்தே
அண்டியசீர்ப் பொள்ளாச்சிக் கல்லூரி ஆசான்நான்
அரிய நிலவுப்பூக் கவிதைநூல் நான் செய்தேன்
கண் செலுத்த வேண்டுமென்றார்
மாட்டேனென் றாசொல்வேன்
கவிதை ஒவ்வொன்றும் அமிழ்தாக நான்கண்டேன்
பாட்டுத் திறம் கண்டேன் பாலசுப்பிர மணியப்
பாவாணர் செய்தஅப் பச்சைத் தமிழ்நூலில்
நாட்டுத் திறம்என்னே நாற்கவியும் முத்தமிழும்
நல்கும் பயன்என்னே நாவூறிப் போனேன் நான்
வீட்டிற் குறட்டைவிட்ட செந்தமிழர் கண்விழிக்க
வெற்றி இலக்கியத்தை அன்றளித்த பாரதிபோல்
பாட்டை திறக்க வந்த பாலசுப் பிரமணியப்
பைந்தமிழ்ப் பாவாணர் புகழ்பெற்று வாழியவே''
என்று முடித்திருந்தார். நெகிழ்ந்தபடி படியெடுத்த இளங்கவி ஒரு தமிழ்ப் பேராசிரியரும் ஆனபடியால், "பாட்டை திறக்க வந்த' என்ற இடத்தில், இலக்கணப்படி வல்லொற்று (த்) மிகும் என்பதால், பாட்டைத் திறக்க வந்த என்று பிரதியில் எழுதிப் பாரதிதாசனிடம் நீட்டினார்.
வாங்கிப் பார்த்த பாரதிதாசன், ""நான் என்ன எழுதியிருக்கேன்? நீ என்ன எழுதியிருக்கே?'' என்று செல்லமாகக் கடிந்துகொண்டு அந்த "த்' ஐ அடித்துவிட்டு, பாரதிபோல், ""பாட்டை- பாதை திறக்க வந்த பாலசுப்பிரமணியம் என்றல்லவா எழுதியிருக்கிறேன்'' என்றார். நெகிழ்ந்துபோனார் இளங்கவிஞர்.
பாரதிதாசன் வாக்குப் பொய்க்கவில்லை. பாரதி மரபில் தமது இலக்கியப் பயணம் தொடர்ந்து, தமக்கெனத் தனிநடையுடைய கவிஞராய், இனிய மொழிபெயர்ப்பாளராய், கட்டுரையாளராய், கவிதை, காவியம், கவிதை நாடகம், சிறுவர் பாடல்கள், ஆத்திசூடி என்று பாரதியார்போல் படைப்பு பல படைத்து பல விருதுகளும் பெற்ற அவர், ஆண்டுதோறும் தமது பெயரில் கவிஞர்களுக்கு விருதளித்து இன்று பவளவிழா காணுகிறார்.
அந்தக் கவிஞர் வேறுயாருமல்ல, சிற்பி பாலசுப்பிரமணியம்தான். பாரதிதாசனிடம் "எதிர்பாராத முத்தம்' பெற்ற அந்தக் கவிஞருக்கு இன்று (31.07.2011) பவளவிழா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

