புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

பத்திரிகையாளர் பால்யூ!

தமிழ் எழுத்தாளர் உலகிலும், வாசகர் உலகிலும் "பால்யூ' என்றால்தான் தெரிந்து கொள்வார்கள். ஜடாதரன், மங்களம், ஆத்ரேயி, துருவன் என்ற புனைபெயர்களில் எழுதினாலும் "பால்யூ' என்ற பெயர்தான் பரவலாக அறியப்பட்டு நிலை

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:00 pm

தமிழ் எழுத்தாளர் உலகிலும், வாசகர் உலகிலும் "பால்யூ' என்றால்தான் தெரிந்து கொள்வார்கள். ஜடாதரன், மங்களம், ஆத்ரேயி, துருவன் என்ற புனைபெயர்களில் எழுதினாலும் "பால்யூ' என்ற பெயர்தான் பரவலாக அறியப்பட்டு நிலைத்துவிட்டது.

1926-ஆம் ஆண்டு அக்டோபர் 19-ஆம் தேதி திருவாரூரில், நாகநாதன்-சம்பூர்ணம் இணையருக்குப் பிறந்தார். என்.பாலசுப்ரமணியன் என்பது பெற்றோர் வைத்த பெயர்.

திருவாரூரில் உள்ள ஆரம்பப் பள்ளியில் பயின்று, பின் மயிலாடுதுறையில் உயர்நிலைக் கல்வியை முடித்தார். அப்போது இவருடன் படித்தவர் எம்.எஸ்.உதயமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. சென்னைக்கு வேலை தேடிவந்து, "அஞ்சல் பணி தணிக்கை அலுவலகத்தில்' (போஸ்டல் ஆடிட்) பணியாற்றினார்.

பத்திரிகை நிருபராகத் தம் இலக்கியப் பணியைத் தொடங்கும் எண்ணம் தொடக்கத்தில் அவருக்கு இல்லை. சிறுகதை, நாவல்கள் எழுதினால்தான் எழுத்தாளரா? ஆனால், சிறுகதை, நாவல் எழுத்தாளராக மட்டும் இருந்திருந்தால், திரிலோக சஞ்சாரியைப் போல் பலதுறை பிரமுகர்களிடம் தொடர்பு கொண்டிருக்க முடியாது.

தம் 21-ஆம் அகவையில் "கல்கி' வார இதழில் முதல் சிறுகதை எழுதத் தொடங்கினார். எழுத்தாளர் விந்தன் ஆதரவு அவருக்கு இருந்தது. பிறகு தமிழகத்தின் பிரபலப் பத்திரிகைகளிலும் சிறுகதைகள் எழுதி ஆசிரியர்களை நேரே சந்தித்துக் கதைகள் கொடுத்ததால், ஆசிரியர் மற்றும் துணை ஆசிரியர்களின் நன்மதிப்பைப் பெற்றார்.

"குமுதம்' ஆசிரியர் எஸ்.ஏ.பி.யிடம் உதவி ஆசிரியர் ஜ.ரா.சுந்தரேசன் அளித்த ஊக்கத்தின் விளைவாக பால்யூ நிருபர் குழுவில் சேர்ந்தார். 1965-இல் இருந்து 1999 வரை "குமுதம்' சார்பாக அவர் சந்திக்காதவர்களே இல்லை எனலாம்.

"ஜடாதரன்' என்ற புனைபெயருடன் சிறுகதைகள் எழுதியவர். குமுதத்திற்காகப் பல புனைபெயர்களில் அவர் சந்தித்து எழுதாதவர்களே இல்லை என்று கூறுமளவுக்கு இன்றியமையாதவரானார்.

தமிழகத்திலுள்ள அரசியல் கட்சித் தலைவர்களுடன் நன்கு பழகி அவர்களின் அன்பைப் பெற்று புதிய செய்திகளைத் - தகவல்களைச் சேகரிக்கும் ஆற்றல் அவரிடமிருந்தது. மாநில முதலமைச்சர்களைத் தவிர இந்திய குடியரசுத் தலைவர்களையும் சந்தித்துப் பேட்டி கண்டிருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்லாமல், தி.மு.க. அரசியல் தலைவர்கள் பலரையும் சந்தித்திருக்கிறார். பால்யூ செய்த சாதனை, மு.கருணாநிதி எழுதிய "ரோமாபுரிப் பாண்டியன்' கதை, குமுதத்தில் தொடராக வெளிவர அனுமதி பெற்றது.

ஏவி.எம். செட்டியாரைச் சந்தித்து, "திரையுலக அனுபவங்கள்' என்ற தொடரை ஆறு மாதங்கள் எழுதினார். ஆசிரியர் எஸ்.ஏ.பி. இதற்குச் சம்மதம் அளித்தார். "பால்யூ பார்த்தது' என்னும் தலைப்பில் ஒரு பக்கக் கட்டுரை 1981-ஆம் ஆண்டிலிருந்து ஏறத்தாழ ஓராண்டுக்கு அந்தப் பகுதி வெளிவந்தது. பலராலும் விரும்பிப் படிக்கப்பட்ட பகுதி அது.

பால்யூவின் சிறப்பான குணம், அவரைக் கண்டு ஒருவரும் வெறுப்படையாத அளவுக்குப் பழகுவது. படாடோபம் - தற்பெருமை இல்லாமை. பேட்டி காணும்போது எதிராளி கோபம் வருமாறு நடந்து கொண்டால் கூட இவர் கோபமடையாதவர். ஒரு வார்த்தை கூட அவரைப்பற்றி அவதூறாகப் பேசமாட்டார். அதனால் எல்லா அரசியல் தலைவர்களும் பால்யூவைச் சந்திக்க எளிதில் சம்மதித்தனர்.

பிரபல எழுத்தாளர்கள் பால்யூவிடம் அன்புடன் பழகினார்கள். ஆசிரியர் எஸ்.ஏ.பி. மறைவுக்குப் பிறகு பொறுப்பேற்ற சுஜாதா, மாலன் ஆகியோருடன் நெருக்கமாகப் பழகினார். எழுத்தாளர் ரஸவாதி இவருடைய நெருங்கிய நண்பர். பால்யூவுக்கும் இரட்டைக் குழந்தைகள். ரஸவாதிக்கும் இரட்டைக் குழந்தைகள். எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு பால்யூவிடம் மிகுந்த மரியாதை கலந்த அன்பு. தன் வாழ்க்கைச் சரிதத்திலும் பால்யூவின் நட்பைப் பற்றியும், அவர் உழைப்பைப் பற்றியும் புகழ்ந்து எழுதியிருக்கிறார்.

பால்யூவின் மனைவி பெயர் மங்களம். இவர்களுக்கு மூன்று மகன்கள், நான்கு மகள்கள்.

பொதுவாக நிறுவனம் ஒன்றிலிருந்து ஓய்வு பெறும்போதோ, வெளியேறும்போதோ அந்த நிறுவனத்தில் மனம் திறந்த பாராட்டுக் கிடைப்பது மிகவும் அரிது. 27 ஆண்டுகள் பணியாற்றிய நிறுவனம் இவர் ஓய்வு பெற்றபோது, குமுதம் இதழ் வளர்ச்சிக்கு மெய்யுணர்வுடன் உழைத்த இவரைப் பற்றி எழுதியிருப்பதையும் பதிவு செய்ய வேண்டும்.

""தொடர்ந்து குமுதம் படிக்கும் வாசகர்கள் மறக்க முடியாத பெயர் பால்யூ. அரசியலாகட்டும், பொதுச் செய்திகளாகட்டும் - முன்னணியில் நின்று கொண்டிருப்பவர் பால்யூ என்ற பாலசுப்ரமணியன். வாரியாரையும், எம்.ஆர்.ராதாவையும் சந்திக்க விட்டு மோதவிடுவார்.

சுப்புடுவையும் ஜெயமாலினியையும் சந்திக்க வைப்பார். "மனிதன்' என்னும் பெயரில் மனிதர்களுக்குள் ஒளிந்து நிற்கும் குணாதிசயங்களைச் சுலபமாய் வெளிக்கொணர்வார். சுவாமி வம்பானந்தாவாய் மாறி, நாரதரை நினைவுக்குக் கொண்டுவருவார்.

சுறுசுறுப்புக்கு எறும்பையும் பால்யூவையும் உதாரணமாகச் சொல்லலாம். அவர் பேட்டி காணாத பிரபலங்கள் இனிமேல்தான் பிறக்க வேண்டும். எல்லாக் கட்சிகளிலும் அவருக்கு நண்பர்கள் உண்டு. எதிரிகளே இல்லாத இனிய மனிதர் பால்யூ. குமுதம் குடும்பத்துக்காக உழைத்த பால்யூ இனி, தன் குடும்பத்திற்காகவும் கொஞ்ச நேரம் உழைக்கட்டுமே. பால்யூ மறக்க முடியாத - மறுக்க முடியாத மனிதர். எங்கள் மனங்களில் என்றென்றும் நீங்கா இடம்பெற்றவர். அவர் இத்தனை நாள் ஆற்றிய பணிக்கு எங்கள் நன்றிகள்' (குமுதம் குடும்பம்).

ஜனவரி 2002-ஆம் ஆண்டு பால்யூவின் சிறுகதைத் தொகுப்பு ஒன்று "பத்திரிகையாளர் பால்யூ சிறுகதைகள்' என்னும் பெயரில் அவர் நண்பர் ஜி.அசோகன் வெளியிட்டார். அவர் சந்தித்த அன்பர்களைப் பற்றி வெளியிடத் தொகுப்பு ஒன்றைத் தொகுத்து வைத்திருந்தார்.

பழகிய தலைவர்கள், தொண்டர்கள் அனைவரிடமும் நற்பெயர் பெற்ற என்.பாலசுப்ரமணியன் என்னும் பால்யூ 2007-ஆம் ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதி அமரராகிவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.