அம் என்பது விரியும் வகையைக் கண்டோம். தமிழுக்குத் தனிச் சிறப்பான எழுத்துகளுள் தனிச் சிறப்பான எழுத்து "ழ'கரம்! அதனால் அதனைச் சிறப்பு "ழ'கரம் என்றனர். சிறப்பு "ழ'கரம் அமைந்த சொற்களைச் சரியாக ஒலிக்காமல் பொது "ள'கரம் போல் பலர் ஒலிப்பதால் அதன் அருமை விளங்குவதில்லை. "ழ'கரம் என்றே ஓர் இதழ் தொடங்கித் தொடர்ந்து வந்துகொண்டும் உள்ளது.
÷"ழ'கரம் சேர்ந்த சொல், சொல்வார்க்கும் கேட்பார்க்கும் இன்பம் தரும். தமிழ், மழலை, அழகு, எழில், பொழில், ஒழுக்கம், விழுப்பம் - இப்படிச் சொல்லிப் பாருங்கள்! இப்படிச் சொல்லிச் சொல்லிப் பார்த்துச் சுவைகண்ட தொல்காப்பியர், ""இழுமென் மொழியால் விழுமியது பயிலல்'' என இலக்கணம் சொல்லும் போதே, அதற்கு இலக்கியமும் படைத்தால்போல் கூறினார்.
÷"சிறந்த ஒன்றைச் சொல்ல வேண்டுமா?,
ழகரமொடு கூடிய இனிய சொல்லால் கூறுக' என்றார். மழலையைப் பற்றி முன்னரே கண்டோம். கொஞ்சு தமிழ்க் குமரகுருபரர் சொக்கனைச் சொக்கிப் போக வைக்கும் சொக்கியை, எப்படிச் சொக்கும் ஓவியம் தீட்டுகிறான் என்பதைக் கூறுகிறார்.
÷""அழகு ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிரோவியமே'' என்கிறார். தீட்டுபவனை ஒருவன் - ஒப்பற்றவன் - என்கிறார். அவன் யாருக்கோ தீட்டவில்லை - எதிலேயோ தீட்டவில்லை என்பாராய்த், ""தன் திருவுள்ளத்தில்'' தீட்டுகிறான் என்கிறார்.
÷இலக்கணப் புலமையர் தொடை வகையுள் "வழி எதுகை' என ஒன்று கண்டனர். முதலெழுத்து அளவாய் ஒத்திருக்க, இரண்டாம் எழுத்து வந்த எழுத்தாகவே வருதல் எதுகை என்னும் இலக்கணமாம். வழியெதுகை வரும் அடியின் சீர்களில் எல்லாம் அல்லது பலவும் அவ்வெதுகை அமைவிலேயே வருதலாம்.
÷"கற்றதனால் ஆய பயன்என் கொல்' என்னும் குறளுக்குத் தம் உரையில் (நன்னூல்) மயிலை நாதர் (முதல் உரையாளர்) ""கற்றதனால் ஆயபயன், குற்றமற்ற முற்ற உணர்ந்த ஒற்றை நற்றவன் பொற்றாள் இணை தொழுதல்'' என்பார்.
÷ஞானசம்பந்தப் பிள்ளையார், வழியெதுகையாக "ழ'கரம் வரப்பாடிய பாடல் இது:
""ஒழுகலரி தழிகலியில் உழியுலகு
பழிபெருகு வழியை நினையா
முழுதுடலில் எழுமயிர்கள் தழுவுமுனி
குழுவினொடு கெழுவு சிவனைத்
தொழுதுலகில் இழுகுமலம் அழியும்வகை
கழுவுமுறை கழுமல நகர்ப்
பழுதிலிறை யெழுதுமொழி தமிழ்விரகன்
வழிமொழிகள் மொழிதகை யவே''
"அம்மா', "அம்மை', "அம்மையப்பன்' பெயர்களால் எண்ணற்ற ஊர்கள் உள்ளதை அறிவோம்! பிறந்த குழந்தையும் சரி, பெரு மூதாட்டியும் சரி "அம்மா' என்பது நம்மவர் பண்பாட்டு வழக்கு. அழும் குழந்தையும் சரி, வாயிலில் நின்று இரப்பவனும் சரி, விளிக்கும் சொல் "அம்மா'!
÷தட்ப வெப்பச் சமனிலையமைந்த நம் நாட்டுக் குழந்தை "அம் அம்' என "அம்மம்' உண்டால், குளிர்நாட்டுக் குழந்தை "மம்மம்' என்று உண்ணும் போலும்! "மம்மி' என்கிறதல்லவா ஆங்கிலம்! இங்கும் அப்படி நிலை செயற்கையாக ஆக்கப்படுதல் நாமறியாததா?
தொடர்வோம்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இந்தியாவுக்கு விமான சேவையை விரிவுபடுத்த மாலத்தீவு திட்டம்!
எல்ஐகே டிரைலர்!
திருமாவளவன் விலகல்! விசிகவில் காங்கிரஸ் முன்னாள் தலைவரின் மகனுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு


