மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் தாம் இந்நில உலகில் வாழ்ந்த அறுபது ஆண்டுகளில் தமிழைத் தாமே பயின்றும், தம் மாணாக்கர் பலருக்கும் பயிற்றியும் செலவிட்ட காலம் போக, எஞ்சிய காலங்களில் தமிழ்த்தாய்க்கு அணிகலன்களாக இயற்றிய நூல்கள் பலவற்றுள் தெரியாதவை சில; தெரிந்தவை பல. தனிப்பாடல்கள் அளவிறந்தன. இந்த அளவுக்கு புராணங்களோ பிள்ளைத்தமிழ்களோ அந்தாதிகளோ கோவைகளோ பாடிய புலவர்கள் வேறு எங்கும் எவரும் இருந்ததாக அறியக்கூடவில்லை.
"அத்தகைய பெருங்கீர்த்திக் கவிநாதன்
யாவனெனின் அமலை யோடும்
நித்தனுறை பலதலமான் மியமினிய
செந்தமிழில் நிகழ்த்தி னோனங்
கைத்தலவா மலகமெனத் தனையடைந்தோர்
பலர்க்குமின்ன கால மென்னா
தத்தகைய பெருநூலு மெளிதுணர்த்திப்
பயனுறுத்தும் இணையி லாதோன்.'
இது மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய "உறையூர் புராணம்' நூலுக்கு அவருடைய மாணாக்கரான உ.வே. சாமிநாதையர் இயற்றிய சிறப்புப் பாயிரத்தின் ஒரு பகுதி. ஆம், எத்தகைய பெருநூலும் எளிதுணர்த்திப் பயனுறுத்தும் இணையிலா தமிழறிஞர் அவர்.
ஒருநாள் பிள்ளையவர்கள் சில அன்பர்களுடன் திருவானைக்கா கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய ஓடத்தில் புறப்பட்டார். அப்போது உடனிருந்த ஓர் அன்பர் பிள்ளையவர்களிடம் திருவானைக்கா ஸ்ரீ அகிலாண்டேஸ்வரியின் மீது ஒரு மாலை இயற்ற வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். மற்றொரு அன்பர், "முன்னர் திருவண்ணாமலையை வலம்வரத் தொடங்கிய துறைமங்கலம் சிவப்பிரகாச ஸ்வாமிகள் ஒருமுறை வலம் வருவதற்குள் "சோணசைல மாலை' நூலைப் பாடி முடித்ததுபோல, திருவானைக்கா சென்று நாம் திரும்புவதற்குள் அந்த மாலையை செய்ய இயலுமா?' என்று வினவினார். பிள்ளையவர்கள், "நேருமானால் செய்யலாம்' என்று கூறிவிட்டுப் பாடத்தொடங்கினார். சில பாடல்களைப் பாடியும் சில பாடல்களை எழுதுவித்தும் கோயிலுக்குச் சென்று அங்கேயே ஓரிடத்தில் அமர்ந்து மீண்டும் எழுதியும் அம்மாலையை இயற்றி முடித்தார்.
இவர் தம்மிடம் யார் வந்து கேட்பினும் பாடம் சொல்லுவார். இவரிடம் படித்தவர்களில் பல சாதியினரும் பல சமயத்தினரும் உண்டு. பிராமணர்களில் ஸ்மார்த்தர்கள், வைஷ்ணவர்கள், மாத்வர்கள் போன்ற பிரிவினரும் வேளாளரில் பல வகுப்பினரும், பிற சாதியினரும், கிறிஸ்தவர்களும், முகமதியர்களும் இவரிடம் பாடம் கற்றதுண்டு. நாகூரில் புகழ் பெற்று விளங்கிய குலாம் காதர் நாவலர் என்பவர் இவரிடம் சீறாப்புராணம் முதலியவற்றைப் பாடம் கேட்டார். புதுச்சேரியிலிருந்த செ. சவராயலு நாயகர் என்ற கிறிஸ்தவர், பிள்ளையவர்களிடம் தேம்பாவணி, திருக்காவலூர்க் கலம்பகம் போன்ற நூல்களைப் பாடம் கேட்டார். அப்போது சில சைவர்கள், "பிள்ளையவர்கள் சைவராக இருந்தும் புறச் சமய நூல்களைப் படித்தலும் பாடஞ்சொல்லுதலும் புறச்சமயத்தாருடன் அளவளாவி மாணாக்கராகக் கொள்ளுதலும் தகுதியல்ல' என்று குறை கூறினர். அதனையறிந்த பிள்ளையவர்கள், "நான் தேம்பாவணியைப் பாடஞ்சொல்லுதலும் கிறிஸ்தவர் முதலிய பிற மத மாணாக்கர்கள் என்பாற் பாடங்கேட்டலும் கூடாத செயல்களென்று சிலர் சொல்லி வருவதாகத் தெரிகிறது. மாணாக்கராக யார் வந்தாலும் அன்போடு பாடஞ் சொல்லுதலையே எனது முதற் கடமையாக எண்ணியிருக்கிறேன். எல்லா தானங்களிலும் வித்தியா தானமே சிறந்தது. அன்னமிடுவதற்கு பசியுள்ளவரே பாத்திரர்; அதுபோல பாடஞ்சொல்வதற்கு, படிப்பில் ஆர்வம் உடைய யாவரும் பாத்திரர்களே. கிறிஸ்தவ மதத்தைப் பிரசாரம் செய்ய வேண்டுமென்பது என்னுடைய கருத்தன்று. தமிழ் நூல் என்னும் முறையில் யாதும் விலக்கப்படுவதும் அன்று' என்று கூறினார். அவரைக் குறை கூறியவர்கள் அடங்கி விட்டனர்.
பிள்ளையவர்கள் மாயூரத்தில் இருந்தபோது கோபாலகிருஷ்ண பாரதியார் அடிக்கடி வந்து சந்திப்பது வழக்கம். அவர் இயற்றிய "நந்தன் சரித்திர கீர்த்தனைகள்' பக்திச் சுவையோடு அமைந்திருப்பதாகப் பலராலும் பாராட்டப்பட்டது. ஆயினும் அச்சரித்திரம் பெரியபுராணத்திலுள்ள "திருநாளைப்போவார் புராண'ப்படி அமையாமலும் தமிழ் இலக்கண வழுக்கள் பொருந்தியும் இருப்பதாக பிள்ளையவர்கள் கருதினார். இவருடைய நோக்கத்தை அறியாத கோபாகிருஷ்ண பாரதியார் தனது நூலுக்கு பிள்ளையவர்களிடம் எப்படியும் ஒரு சிறப்புப் பாயிரம் பெற்றுவிட வேண்டுமென்று பலமுறை அலைந்தார். யார் வந்தாலும் சிறப்புப் பாயிரம் கொடுத்தனுப்பும் பிள்ளையவர்கள், கோபாலகிருஷ்ண பாரதியாரிடம், "மற்றொரு சமயம் பார்க்கலாம்' என்று தட்டிக் கழித்து வந்தார். ஆயினும் கோபாலகிருஷ்ணர் தனது முயற்சியை நிறுத்தவில்லை.
ஒருநாள் மதியம் பிள்ளையவர்களைக் காண கோபாலகிருஷ்ணர் வந்தபோது, அவர் மதிய உணவை முடித்துவிட்டு உறங்கிக் கொண்டிருந்தார். அதனையறிந்த பாரதியார் திண்ணையில் அமர்ந்து, "கனவோ நினைவோ', "வாராமலிருப்பாரோ?', "சிந்தனை செய்து கொண்டிருந்தால்' "தீயினில் மூழ்கினார்' முதலிய கீர்த்தனங்களை மெதுவாகப் பாடி தானே ரசித்துக் கொண்டி
ருந்தார்.
பாட்டு சத்தம் கேட்டு பிள்ளையவர்கள் விழித்துக் கொண்டார். அப்போது பாரதியார், "கனகசபாபதி தரிசன மொருநாள் கண்டால் கலி தீரும்' என்ற கீர்த்தனத்தைப் பாடத் தொடங்கினார். பிள்ளையவர்கள் எழுந்து உட்கார்ந்து அந்த கீர்த்தனத்தைக் கேட்டார். கேட்கக் கேட்க அந்த இசைப்பாட்டு அவரது மனத்தை உருக்கி அதில் அவரை ஈடுபடச் செய்தது. பாரதியார் மேலும் சில கீர்த்தனங்கள் பாடினார். பிள்ளையவர்களின் மனம் கனிந்து விட்டது. பக்தியினால் கண்ணீர் வழிந்தது. உடனே எழுந்து வாசலுக்கு வந்து பாரதியாரை வரவேற்றார். அதுமட்டுமல்ல, உடனே,
"கோமேவு திருத்தில்லை நடராசப்
பெருமான்றாள் கூடி யுய்ந்த
பூமேவு பேரன்பர் திருநாளைப்
போவார்தம் புனிதச் சீரைப்
பாமேவு பலவகைய விசைப்பாட்டா
லினிமையுறப் பாடி யீந்தான்
ஏமேவு கோபால கிருட்டண
பா ரதியென்னு மிசைவல் லோனோ'
என்னும் பாடலை இயற்றி அவரிடம் கொடுத்து, "இதை உபயோகப் படுத்திக்கொள்ள வேண்டும். சாம்பவர்களாகிய உங்களை இதுவரையில் அலைக்கழித்ததைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்' என்று கூறினார். பாரதியாரும் மிகவும் மகிழ்ச்சியடைந்து அதனைப் பெற்றுக்கொண்டு சென்றார்.
இன்று (6-4-1815) மகாவித்துவான்
மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
200ஆவது பிறந்தநாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லக்னோவில் விஐடி முன்னாள் மாணவா் சங்கக் கிளை தொடக்கம்

ஆன்லைன் பகுதிநேர வேலை: தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ.11.8 லட்சம் மோசடி
திமுகவின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் : பிரேமலதா விஜயகாந்த்

புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


