குறிஞ்சி, முல்லை, மருதங்களில் மண் மட்டுமா உண்டு; மண் போல் செறிதல் இல்லா இயற்கை ஒன்றும் உண்டே! கடற்கரைப் பகுதியே அதன் பரப்பும் விரிப்பும் தாமே! மண் போல் செயற்கையால் அன்றி இயற்கையில் செறியாத அதனை எப்படி வழங்குவது? இதில் என்ன பெரிய ஆய்வு வேண்டும்? ஓடிய ஓட்டத்தில் சொல்லிவிடலாமே! எப்படி? மண் அல்லாதது, மண் + அல் = மணல்!
சுண்ணாம்பு, கன்மா சேர்த்துச் செறிவூட்டலாமே அல்லாமல், தானே மண் போல் தண்ணீர் விட்டதும் செறிகிறதா? இல்லையே! "மணப்பாறை' என ஓர் ஊர் உள்ளதே! மணப்பாறை, எந்தப் பாறையாவது மணக்குமா? மணற்பாறை, மக்களால் "மணப்பாறை' என வழங்கப்பட்டது.
மணல் மிக்க இடம்; அதனினும் மிக்க மண்; இரண்டும் மண் தன் தன்மை இழவாமல் செறிவாயது; என்னதான் நீ என்னைச் செறித்தாலும் நான் மணல் மணல்தான் என்றமைந்தது மணல். பொலபொல என உதிரும் பாறை மணற்பாறையாம்!
""கூடிச் செறிந்தோம்; பாறையானோம்; கடப்பாறையால் குத்து! உன்னிலையும் என்னிலையும் ஊரறியும்! என்கிறதா இல்லையா? வெடி வேண்டா, வேட்டு வேண்டா, வெடி மருந்து வேண்டா, கடப்பாறையால் குத்து. அப்பொழுது உண்மைப் புலப்படும். நான் கல்லாக இருந்தேன்; நீரால் தேய்ந்து கால வெள்ளத்தில் மணல் ஆனேன்! நானும் காலவெள்ளம் தாக்கத் தாக்க மண்ணாகிப் போவேன்! அப்பொழுது நீயும் நானும் புணர்ந்து கலந்து ஒன்றாகிவிடுவோம்.'' என்கிறது.
"மணல் மேடு', "மணமேடு' எனப்பட்டாலும் உண்மை ஒருநாளும் மறைக்க - மறைய மாட்டாது! மணல் குவி குவியாக - ஏன் மலை மலையாக - பனையைத் தொடும் உயரத்தில், ஒரு சுழலில் உண்டாகி, மறு சுழலில் மறைந்து போகக் காண்பதில்லையா? அம் மணல் குவியலுக்கு என்ன பெயர்? என்ன சான்று? தேர் போல் தொலைவில் இருப்பார்க்குத் தோன்றலால் "தேரி' என்றனர். எந்தக் கடற்கரைப் பகுதியில் "தேரி' இல்லை?
கவிக்கு மணியாக ஒருவர் வாழ்ந்தாரே! ஒüவையாருக்குப் பின்னர் குழந்தைச் செல்வங்களுக்கு மணி மணிப் பாடல்கள் தந்தாரே! கவிமணி தேசிக விநாயகர்! அவர் பிறந்த ஊர் தேரூர். நிறைந்த ஊர் புத்தேரி. நாகர்கோயில் சார்ந்தது. தேரி, தேர்க்கோலம் மட்டுமா காட்டியது? தேரை என மணல் தவளைக்குப் பெயர் தந்துவிட்டதே. மணல் போல் நிறம்கொண்ட தவளைதானே, தேரை; மணல் தேரை, கிணற்றுக்குள்ளும் வந்துவிட்டதே!
""உணற்கினிய இன்னீர் பிறிதுழி இல்லெனும்
கிணற்றகத்துத், தேரைபோல் ஆகார் - கணக்கினை
முற்றப் பகலும் முனியாது இனிதோதிக்
கற்றலில் கேட்டலே நன்று''
கல்விச் சிறப்பினும் கற்றோர்வாய்ச் சொல் கேட்டலின் நயனறியத் தேரையைப் பயன்படுத்தினாரே முன்றுறை அரையனார்; ஆம்! அவர்தான் பழமொழி நூலாசிரியர்!
தொடர்வோம்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இந்தியாவுக்கு விமான சேவையை விரிவுபடுத்த மாலத்தீவு திட்டம்!
எல்ஐகே டிரைலர்!
திருமாவளவன் விலகல்! விசிகவில் காங்கிரஸ் முன்னாள் தலைவரின் மகனுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு


