ஒரு பறவை "கா கா' எனக் கத்துகிறது. இன்னொன்றும் கத்துகிறது; கூட்டத்தையே கூட்டிவிடுகிறது. கருநிறமான அப்பறவையை நாம் அனைவரும் அறிவோம். அதற்குப் பெயர் எவர் சூட்டினார்? எவர் விழா நடத்தினார்? அதன் ஒலியால் அதற்குப் பெயர், அதுவே சூட்டிக் கொண்டது. அல்லது அதன் ஒலியைக் கேட்டவன் அவ் வொலியையே அதற்குப் பெயராக்கி, அதனைக் கண்ட இடத்தும் காணாத இடத்தும் உலாவரச் செய்தான். பிறரும் அவ்வாறே செய்தனர்.
"காக்கா' என்னும் ஒலிப் பெயரே அதன் பெயராயது. "காக்கை' எனவும், "காகம்' எனவும், "காகோளம்' எனவும் வழக்கில் வந்தன. "கரும்பிள்ளை' எனவும் கூறப்பட்டது. கரும்புள் என்பதும் அது. கரிய நிறத்தொடும் கூட்டமாகவும் இருந்ததால் "கருங்கொடி' எனவும் வழங்கப்பட்டது.
சங்கச் சான்றோருள் ஒருவர் நச்செள்ளையார்; பெண்பாற் புலவர். காக்கையைப் பாடியதால் அவரும், அவரால் பாடப்பட்டதால் காக்கையும் ஒருங்கே சிறப்படைந்த பேறு பெரிதாம். அதனால் "காக்கை பாடினியார் நச்செள்ளையார்' என வழங்கப்பட்டார்.
தலைவன் பிரிந்து வினைமேற் செல்லலால் தலைவி துயரமிக்கு இருந்தாள். மெலிந்தும் போனாள். ஒரு நாள் காகம் கரைந்தது; அதனை நற்குறியாகக் கருதினாள் தோழி. அன்று தலைவன் வந்தான். தலைவி துயர் நீங்கினாள். அதனால் மகிழ்ந்த தோழி, காக்கையை "நீ கரைந்து உதவிய நன்றிக்கு வள்ளல் நள்ளியின் பல ஆக்களும் உதவிய நெய்யுடன், தொண்டி நகரில் முழுவதாக விளைந்த வெண்ணெற் சோற்றைப் பல கலங்களில் ஏந்திப் படையலாக இட்டாலும் ஈடாகாது' என்று பாராட்டினாள். இப்பாட்டின் நயமுணர்ந்த சான்றோர் "காக்கை பாடினியார்' என்றே பெயர் சூட்டினர்.
குறிஞ்சிக் கபிலர், பாலை பாடிய, மருதம் பாடிய, வெறி பாடிய எனப் பாராட்டப்பட்ட சான்றோர்கள் இருந்தனரே அல்லாமல், இப்படி ஒரு பறவையைப் பாடியவராக எவரும் இலர். இப்பெயரின் அருமை வழிவழியாகப் போற்றப்பட்டமையால் காக்கை பாடினியார், சிறுகாக்கை பாடினியார் எனப் புலவர்கள் விளங்கினர். இருவரும் யாப்பிலக்கண நூலும் செய்தனர்.
காக்கை கருநிறத்ததாகலின் கருஞ்சோளம் காக்கைச் சோளம் எனப்பட்டது. காக்காப் பொன் எனக் கருமையாய்ப் பளிச்சிடும் தகடு உண்டு. ஒருச் சாய்த்துப் பார்ப்பவரைக் காக்கைக் கண்ணன் என்பர். கருமையாய் மூக்குத்தடிப்பாய் இருப்பாரைக் "காக்கன் மூக்கன்' என்பர்.
"சரணாலிங்கர்' என்ற புலவர் கன்னட நாடு சென்று அரசரைப் பார்க்க, அவர் புலவர் நிறத்தைப் பார்த்து, "அண்டங் காக்கையா?' என்றாராம். "தாங்கள்தான்' என்றாராம் புலவர். செக்கச் செவேள் என இருந்த அரசர் "நானா?' என்றாராம். "ஆம்! அண்டம் - உலகம், நாடு. இந்நாட்டைக் காக்கிறாயா? (காக்கையா) என்றீர்கள். அது நீங்கள்தான் என்றேன்' என்பது வரலாறு.
ஒருவரைப் புகழ்ந்து தம் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்பவரைக் "காக்கை' பிடிக்கிறார் என்பர். அது "கால் கை' பிடித்தல் "காக்கை பிடித்தல்' ஆயிற்று. "காக்கை வலி' என்பதும் "கால் கை' வலித்தலேயாம். கலைவாணர் ஒரு படத்தில், ""காக்காய் கறிசமைத்துக் கருவாடு மென்று தின்பர் சைவர்'' என்பார். அது, கால் காய் அளவு கறிசமைத்து, கரு வாடும் என்று (உயிர் வாடிப் போகும் என்று) மென்று தின்பர் என்பதாம்!
தொடர்வோம்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இந்தியாவுக்கு விமான சேவையை விரிவுபடுத்த மாலத்தீவு திட்டம்!
எல்ஐகே டிரைலர்!
திருமாவளவன் விலகல்! விசிகவில் காங்கிரஸ் முன்னாள் தலைவரின் மகனுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு


