திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

தமிழ்ச் செல்வங்கள்: உலகம் - 3

இயவுள், கடவுள், இறை எல்லாம் அறிவியல் எனக் கூறினால் சான்று வேண்டாவா? சான்று இல்லாத எந்த ஒன்றையும் புனைந்து - பொய்த்து எழுதாது தமிழ்க்கை! சொல்லாது தமிழ்நா! அறிவன், கணியன், முதுகண்ணன் என்னும் பெயருடைய சான்றோர் பாடிய பழம் பாட்டன் சொத்தாகக் கையில் கனியாக வாய்த்துள்ளது.

News image
Updated On :29 மார்ச் 2014, 8:25 pm

இயவுள், கடவுள், இறை எல்லாம் அறிவியல் எனக் கூறினால் சான்று வேண்டாவா? சான்று இல்லாத எந்த ஒன்றையும் புனைந்து - பொய்த்து எழுதாது தமிழ்க்கை! சொல்லாது தமிழ்நா! அறிவன், கணியன், முதுகண்ணன் என்னும் பெயருடைய சான்றோர் பாடிய பழம் பாட்டன் சொத்தாகக் கையில் கனியாக வாய்த்துள்ளது.

ஒரு வள்ளல், பாணனுக்குத் தான் முன் நின்று உணவு உண்பிக்கிறான். எப்படி? பெரிய பொற்கலம் ஒன்றை ஊடே வைத்தான். சுற்றிலும் தொடுகறி விடுகறி விடச் சிறு சிறு தட்டங்களை வைத்தான். வியப்புற்றான் பாணன்! உண்பதை விட்டு வானை நோக்கினான். கதிரோனைச் சூழ்ந்த கோள்களைப் போலப் பெருந்தட்டமும், சிறு தட்டங்களும் பரப்பிப் படைப்பதாகக் கூறுகிறான்:

""வாள்நிற விசும்பிற் கோள்மீன் சூழ்ந்த

இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து

விளங்கு பொற் கலத்தில் விரும்புவன பேணி

ஆனா விருப்பிற் றான்நின் றூட்டி''

என்கிறான் (சிறுபாண்:242-245). "ஒளிமிக்க வானில் கோள்மீன்களால் சூழப்பட்ட ஞாயிற்றைப் போலக் கலங்களைப் பரப்பி மிகு விருப்பத்தோடு முன்னே நின்று உண்பிக்கிறான்' என்பது இதன் பொருள்.

இன்னொரு காட்சி, அது பட்டினப்பாலையைச் சார்ந்தது.

""நீல்நிற விசும்பின் வலனேர்பு திரிதரு

நாண்மீன் விராய கோண்மீன் போல...''

என முன்னதை வழிமொழிவது போல் சுட்டுகிறது (66-67). "விண்ணகம் சென்று நேருக்கு நேர் கண்டுரைப்பான் போல்பவனை யான் என் கண்ணாரக் காண்கிறேன்' என்கிறான் ஒருவன்:

""செஞ்ஞா யிற்றுச் செலவும்

அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்

பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்

வளிதிரிதரு திசையும்

வறிது நிலைஇய காயமும் என்றிவை

சென்று அளந்து அறிந்தார்போல

என்றும் இனைத்தென் போரும் உளரே''

என்பது அது (புறநா:30). இதற்குரிய பழைய உரை: ""செஞ்ஞாயிற்றினது வீதியும், அஞ்ஞாயிற்றினது இயக்கமும், அவ்வியக்கத்தால் சூழப்படும் பார் வட்டமும், காற்றியங்கும் திக்கும், ஓர் ஆதாரமும் இன்றித் தானே நிற்கின்ற ஆகாயமும் என்று சொல்லப்பட்ட இவற்றை ஆண்டாண்டுப் போய் அளந்தறிந்தவர்களைப் போல நாளும் இத்துணை அளவை உடையன என்று சொல்லும் கல்வியை உடையோரும் உளர்''.

"நிலையிய காயம்' - நிலைபெற்ற வானம். போகிற போக்கில், வேலை நிலையானது என்பதன் பொருளாம் "காயம்' என்னும் ஆட்சி, கலைச் சொல்லைச் சொல்கிறதே! "காயம்'தானே வடு. மாறாததால் தானே உடலடையாளச் சான்றாகக் கொள்ளப்படுகிறது.

காயம் என்பதன் முன் "ஆ' என்பதை ஒட்டி, இவ்வறிவியல் கலைச்சொல் புரியாமல் போயிற்று. ""வளி இடை வழங்கா வானம்'' - காற்றும் இல்லாத வெற்று வெளிக்கு ஒரு பெயரிட்டான் பரிபாடலான். "பாழ்' என்பது அது. ஒன்றென இரண்டென எனத் தொடங்கிப் ""பாழென பாகென'' முடிக்கிறான். "காற்று வழங்காத வானம் உண்டென' வானியலார் சொல்கிறார். அதனை அறிவியல் வீறுடையார் மெய்ப்பிக்கின்றனர். ஒத்துக் கொள்கிறோம். நம் அறிவியல் செய்தியை மெய்ப்பிக்க முயலவே இல்லை.

வான ஊர்தி பழைமையான கலைச்சொல். அதனை இயக்குவோன் "வலவன்' (கலைச்சொல்) எனப்பட்டான்! வலவன் ஏவாமல் செல்லும் வான ஊர்தியைக் காட்டுகிறான் சங்கச் சான்றோன்: ""புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தி'' (புறநா:27).

தொடர்வோம்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.