தமிழ்ப் புலமை உடைய அதிசய அக்கா-தங்கையரைப் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவர்கள் நம் செந்தமிழ் மொழி தந்த தமிழ்க் கருவூலங்கள் ஆவர்.
கிருட்டினவேணி அம்மையார்: சென்னை மாநகரில் 1888ஆம் ஆண்டில் பிறந்த இவர், இடைநிலைப்பள்ளி வரை கல்வி கற்றார். திருமணம் முடித்த சில ஆண்டுகளில் கணவரையிழந்து, இளவயதிலேயே கைம்பெண் ஆனார். பிறகு தமிழை நன்கு கற்றுப் புலமை பெற்று, இருபத்தாறு ஆண்டுகள் வரை தமிழாசிரியையாகப் பணிபுரிந்தார். நூல்கள் பல படைத்தார். அவையாவன: கோதையார், வைதேகியார், வீரக்கற்பின் வெற்றி, பறம்பு நாடும் பாரி மகளிரும், பெரியாழ்வார் பெண்கொடி முதலியன. தந்தையார் காலமானபோது பாடியது பாடல் இது:
கருணையுடன் ஈன்றென்னைக் கண்ணிமைபோல் வளர்தெடுத்தென்
இருளகலக் கல்விநலம் இசைவுடனே தந்துண்மைப்
பொருளுணர்ந்து நல்வழியான் புகவேண்டிப் பன்முறையும்
தெருளீயுந் தந்தாய் நீ தேவரீர் சென்றனையே!
தனபால பதுமாவதி அம்மையார்: சென்னை மாநகரில் 1896ஆம் ஆண்டிற் பிறந்தவர். கிருட்டினவேணியம்மையார்க்குத் தங்கையார். தம் தமக்கையாரோடு தமிழ் கற்றுப் புலமை பெற்றார். ஊதியமில்லாமல் தமிழாசிரியையாகப் பணிபுரிந்தார். பெரியாழ்வார் பிள்ளைத் தமிழ், வசந்தையார், மாதவியார், மலையா நாடு, இசைச் செல்வியார், அறச் செல்வியார், ஆண்டாள் முதலியன அம்மையாருடைய நூல்கள். தந்தையார் காலமானபோது இவர் பாடியது பாடல் இது:
கல்விபொறை அருளடக்கம் கருணையுடன் ஈகைதயை
நல்லொழுக்கம் இவைபொதிந்து நல்வழியில் யாமொழுகப்
பல்கலைகள் எமக்களித்த பண்புடைய எந்தாயோ!
வல்வினையேம் உமைப்பிரிந்து வாழ்ந்திடுதல் எவ்வாறோ?
அக்கா - தங்கையர் மூவர் (ஒளவை, உப்பை, உறுவை):
ஒளவையை யாவரும் அறிவர். ஒளவையின் சகோதரியான உப்பையைப் பற்றிய செய்திகள் வருமாறு: ஆதிக்கும் பகவனுக்கும் தோன்றிய இவரைத் திருவள்ளுவரின் சகோதரி என்பர். இவரே தம்மைப் பெற்ற தாயைப் பார்த்துப் பாடியதாகச் சிலர் கூறுவர். துளசியாப்பட்டினம் கோயிலில் இவர் சிலை (ஒளவையின் பக்கத்தில்) உள்ளது. தனிப்பாடல் திரட்டில் ஒரே ஒரு பாடல் இவர் பாடியதாகக் கருதப்படுகிறது. அப்பாடல் வருமாறு:
அத்தி முதல் எறும்பு ஈறான உயிர் அத்தனைக்கும்
சித்த மகிழ்ந்தளிக்கும் தேசிகன் - முற்றவே
கற்பித்தான் போனானோ காக்கக் கடன் இலையோ
அற்பனே அன்னாய் அரன்.
யானை முதல் எறும்பு ஈறான எல்லா உயிர்களுக்கும் மனம் மகிழ்ந்து உணவு முதலியவற்றைத் தருபவன் கடவுள். அவன் உண்மை அனைத்தும் எனக்குக் கற்பித்தவன். அவன் இப்போது இல்லாமல் மறைந்தானோ? என்னைக் காப்பது அவனது கடமை அன்றோ? அவன் ஆற்றல் இல்லாத எளியவனோ? என்கிறார். திருவள்ளுவர் சரித்திரம், வள்ளியம்மை நாடகம், பாவலர் சரித்திரத்தீபகம், இவற்றிலும் இவரைப் பற்றிய செய்திகள் உள.
உப்பை தொண்டை நாட்டில் பிறந்தவர். ""ஊற்றுக்காடெனும் ஊர்தனில் தங்கியே வண்ணார் அகத்தினில் உப்பை வளர்ந்தனள்'' என்று கபிலர்தம் அகவலில் (கபிலரின் சகோதரி உப்பை என்னும் கதை சொல்லப்படுகிறது) கூறினார். இவரைப் பெற்ற தாய் ஆதி, இவரைப் பிறந்த இடத்தில் விட்டுப்பிரிய மனம் வருத்தமுற்றபோது இவர் பாடியதாகக் மேற்கண்ட பாடலைச் சுட்டுவர்.
உறுவை: திருவள்ளுவர் சகோதரி நால்வரில் இவரும் ஒருவர். இவர் காஞ்சிபுரத்தில் சான்றோர் வீட்டிலே பிறந்து, வளர்ந்து அரிய கலைகள் கற்றுத் தேர்ச்சி பெற்று விதுடி எனும் நாமஞ் சூட்டப்பெற்றவர். காவிரிப்பூம்பட்டினத்தில் கள் விலைஞர் சேரியில் சான்றோர் அகந்தனில் உறுவை வளர்ந்தனள். பெற்ற தாய் பிரிய ஆற்றாது வருந்தியபோது உறுவை பாடிய பாடல் இது:
சண்டைப்பைக் குள்உயிர்தன் தாயருந்தத் தான் அருந்தும்
அண்டத்து உயிர்பிழைப்பது ஆச்சரியம் - மண்டி
அலைகின்ற அன்னாய், அரனுடைய உண்மை
நிலைகண்டு நீயறிந்து நில்.
"என்னைப் பிரிந்து செல்ல வேண்டும் என்பதனால் மனம் வருந்தும் தாயே! கரு உருவாகும் கர்ப்பப் பையில் வளரும் உயிரானது அதன் தாய் உணவை உண்ணத் தானும் உணவை உண்டு உயிர் வாழ்கின்றது, இது வியப்பாய் உள்ளது! கடவுளின் உண்மையிருப்பையும் செயல்திறனையும் அறிந்து நீ வருந்தாமல் இருப்பாயாக' என்பது பொருள். தமிழர், உப்பையைத் தெய்வமாகக் கொண்டாடியது போல உறுவையையும் கொண்டாடுகின்றனர்.
-தாயம்மாள் அறவாணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


