நாளை உருவாகிறது ‘அா்னாப்’ புயல்! தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை! இந்தியா - ரஷியா வா்த்தகத்தை விரிவாக்க மோடி, புதின் உத்தரவு!காா்கில் போரில் உயிரிழந்த வீரா்களின் உடல்களைப் பெற மறுத்தது பாகிஸ்தான்: இந்தியா விமா்சனம்பிரான்ஸில் தீவிர போராட்டம்: 4 லட்சம் போ் பங்கேற்பு! கண்ணீா்ப் புகை குண்டுகள் வீச்சு! பிரேஸில் அதிபா் தோ்தலில் இன்று இறுதிச் சுற்று வாக்குப்பதிவு!அமெரிக்க இடைத்தோ்தல் பரப்புரை: ஆபரேஷன் சிந்தூா் குறித்து மீண்டும் பேசிய டிரம்ப்

ஐயம் வேண்டாம்; எப்போதும் பிரியோம்!

பெண்கள் ஆண்களைவிடச் சொல்லாற்றலிலும் மதிநுட்பத்திலும் சிறந்தவர்கள் என்பர். இதனை,""செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்

Updated On :

பெண்கள் ஆண்களைவிடச் சொல்லாற்றலிலும் மதிநுட்பத்திலும் சிறந்தவர்கள் என்பர். இதனை,

""செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்

அறிவும் அருமையும் பெண்பாலான'' என்பார் தொல்காப்பியர்.

தன் தலைவன் தன்மேற் கொண்ட காதலை ஐயம் கொண்டு இயற்பட மொழிந்த தன் தோழிக்கு, அவள் கூறும் மொழி அவளின் மதி நுட்பத்தையும், சொல்லாற்றலையும் "ஐந்திணை எழுபது' நூல் வெளிப்படுத்துகிறது.

தலைவன், தலைவியை வரைவு கொள்ளாது காலங் கடத்துகிறான். "அவன் அவ்வாறு செய்யாதிருப்பதனால் அவன்மேல் தனக்கு ஐயம் வருகிறது' என்று தலைவியிடம் தோழி சொல்கிறாள். அதுகேட்ட தலைவி, தன் தலைவன்மேல் தோழிக்கு ஏற்பட்டிருக்கும் ஐயத்தைத் போக்கும் விதத்தில் தலைவனின் நற்பண்புகளை உணர்த்த, மலை நாட்டின் விலங்குகளின் நற்பண்புகளை உவமையாக்கி அன்றொருநாள் தான் கண்ட காட்சியினை விளக்கிக் கூறுகிறாள்.

""பல பாக்கங்களை உடைய நமது மலைநாட்டில் அழகிய மன்றங்கள் உள்ளன. அவ்வூரின் மன்றில் ஒருநாள் நான் உட்கார்ந்திருந்தேன். அம்மன்றின் அருகே உள்ள பலா மரத்தில் நன்கு முதிர்ந்த கனியொன்று பழுத்து வெடித்திருந்ததைக் கண்ட மந்தியொன்று, அப் பலாச்சுளைகளைத் தின்று மகிழ்ந்தது. அதனால், நீர்வேட்கைக்குள்ளான அம்மந்தி, நீரைத் தேடி அலைந்தது. அப்போது சற்றுத் தொலைவில் காட்டுப் பசுக்கள் தத்தம் கன்றுகளுடன் படுத்திருப்பதையும், பசுக்களின் பால் சுமந்த மடியினையும் கண்டது. உடனே, தன் நீர் வேட்கையைப் போக்கிக்கொள்ள அப்பசுவின் பாலைக் குடித்தாலென்ன என்று எண்ணியது. உடனே அப்பசுக்களின் அருகே சென்று, ஒரு பசுவின் மடியை மெல்ல வருடியது. அப்பசு தன் கன்றுகளிடத்தே அன்பு கொண்டு பால் சொரிவதைப் போல, தம் மடி வருடும் அம் மந்திக்கும் பாலைச் சொரிந்நு மகிழ்ந்தது. நீர் வேட்கை தணிந்த அம்மந்தியும் அங்கிருந்து மகிழ்வுடன் சென்று விட்டது. இதனை நான் மட்டுமன்றி அம்மன்றில் இருந்த அனைவரும் கண்டனர். விலங்குகளின் இத்தகைய பண்புகள் வியப்பாக இல்லையா?'' என்று தோழியிடம் கேட்டாள். காட்சி இன்பம் நல்கும் அப்பாடல் வருமாறு:

""மன்றப் பலவின் சுளைவிளை தீம்பழம்

உண்டுவந்து மந்தி முலைவருடக் - கன்றமர்ந்து

ஆமா சுரக்கும் அணிமலை நாடனை

யாமாப் பிரிவ திலம்''

(ஐந்திணை எழுபது, குறிஞ்சி-பா.4)

முன்பின் தெரியாத கன்றொன்றுக்குப் பசு பால் கொடுப்பின் வியப்பில்லை. ஆனால், தன் மடியை வருடுவது மந்தியென்று தெரிந்தும் சற்றும் யோசிக்காமல் மகிழ்வுடன் பசு, பால் சொரிந்ததாகக் கூறுகிறாள். இத்தகைய உயர் பண்பு மலைநாட்டின விலங்குகளுக்கே இருக்கும்போது, அந்நாட்டின் தலைவனுக்கு இல்லாமலா போகும்? என்று தோழியுணரும் வகையில் குறிப்பாக உணர்த்தி, "அவன் தன்னை என்றும் மறக்கமாட்டான்; நாங்கள் எப்போதும் பிரியமாட்டோம்; ஐயம் வேண்டாம்' என்று கூறும் சங்கத் தலைவியின் மதிநுட்பம் பெண்களுக்கே உரித்தானதன்றோ!

- சு.சொக்கலிங்கம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.