கவிஞர் எழுதிய கவிதையைப் பாராட்டி ஆண் கவிஞர்கள் பலர் எழுதிய அணிந்துரைக் கவிதைகள் பல தமிழ் இலக்கியங்களில் உள்ளன. ஆனால், பெண்கள் போற்றி ஏற்றும் அணிந்துரை மரபு பிற்காலத்தில் தோன்றியது. பெண்கள், ஆண்கள் எழுதிய நூலைப் போற்றுவது ஒன்று. மற்றது பெண்கள், பெண்கள் எழுதிய கவிதையைப் போற்றிப் பாடுவது. அந்த வகையில் ஒன்றுதான் இங்கு குறிப்பிட்டுள்ள பாராட்டுக் கவியும்!
19-ஆம் நூற்றாண்டு தமிழ்ப் படைப்பு வரலாற்றில் சகோதரியர் இருவர் படைப்பாளர்களாகத் திகழ்ந்தனர். தம் சகோதரியின் நூலுக்கு அக்காள் உருக்குமணி அம்மையார் சிறப்புப் பாயிரம் இயற்றியுள்ளார்.
விழுப்புரம்-திண்டிவனம் அருகிலுள்ள இரட்டணை என்ற ஊரில் ரா.பெருமாள் ஐயரின் முதல் மகள் உருக்குமணி. இவர் 1875 ஜூலை 16-இல் பிறந்த பண்டிதை அசலாம்பிகை அம்மையாரின் உடன்பிறந்த அக்காள்.
அசலாம்பிகை அம்மையார் திருவிடைத் தலபுராணம், எட்டுக் காண்டங்கள் கொண்ட காந்திபுராணம், இராமலிங்கர் சரிதம், திலகர் மான்மியம், திருவாமாத்தூர் திரிபு அந்தாதி, திருவொற்றியூர்ப் பஞ்சகம், ஆத்திச்சூடி வெண்பா, குழந்தைசாமிப் பதிகம், நீதித் தொகுதி கட்டுரை நூல் முதலிய நூல்களை இயற்றியவர். இவரும் இரட்டணை என்ற ஊரில் வாழ்ந்தார். 11ஆம் வயதில் திருமணம் முடிக்கப் பெற்றார். இரண்டு ஆண்டுகளில் கணவனை இழந்தார்; இளம் விதவையானார்; மறுமணம் செய்துகொள்ளவில்லை.
தமிழ் இலக்கணம், இலக்கியங்கள், சம்ஸ்கிருதம், வரலாறு, அரசியல் என்று பல்வேறு கோணங்களில் தம் மகளுக்குத் தந்தை கல்வி அறிவு புகட்டினார். கடலூரில் தங்கி ஆதீனசுவாமிகளான சுப்பிரமணியம் தம்பிரானை வீட்டிற்கு வரச்செய்து இலக்கியப் புலமை பெறச் செய்தார். அக்கா - தங்கை இருவரும் தமிழ்க் கல்வி கற்றனர். கவிதை எழுதும் ஆற்றல் பெற்றனர். கவிதை உலகில் அக்காவும் தங்கையும் பெண்களில் இரட்டைப் புலவராகத் திகழ்ந்தனர். 18 வயதில் தமிழ்ப் புலமை பெற்றனர்; கவிதை எழுதும் ஆற்றல் பெற்றனர்.
திருவிடையூர்த் தல புராணத்தில் முதல் காண்டத்தை அசலாம்பிகை அம்மையார் எழுதி முடித்தவுடன் இறந்து விடுகிறார். சிறந்த படைப்பாசிரியரான தங்கை இறந்த நிலையில், தங்கையின் நூல் வெளிவருகிறது. தங்கையின் நூலுக்கு நெஞ்சம் நெகிழும் சிறப்புப் பாயிரம் ஒன்றை அக்கா உருக்குமணி எழுதியுள்ளார். அச்சிறப்புப் பாயிரம் இலக்கிய நயம் மட்டுமன்றி வரலாற்று நயமும், சோக ரசமும் ததும்பப் படைக்கப் பெற்றுள்ளது. மிகப் புகழ்பெற்ற தங்கையின் தமக்கை என்பதைப் பெருமிதம் பொங்கக் கவிதையில் குறிப்பிடுகிறார் அக்காள் உருக்குமணி.
திருவிடையூர்த் தல புராணச் சிறப்புப் பாயிரத்தில் உள்ளவை வருமாறு: ""1899 இரட்டணை மகாராஸ்ரீ பெருமாள் ஐயர் அவர்கள் மூத்த குமாரத்தியும் சென்னை நுங்கம்பாக்கம் பாபுராவையரவர்கள் மனைவியுமாகிய உருக்குமணியம்மாள் தங்கை அசலாம்பிகையின் நூலுக்கு இயற்றிய சிறப்புப் பாயிரம்.
"".... .... .... ....
மங்கள நாயகி மகிழும் மணாள
நங்குல நாயக நாகா பரணன்
அமரும் மூதூரரும் புராணத்தை
திமிரவெம்பவ நோய் தீர்க்கும் மருந்தை
சொற்சுவை பொருட்சுவை யாவும் தோன்றப்
பொற்சடை யெம்மான் பொன்னடி நாடி
ஆன்றபேர் உலகில் ஆடவர் தமக்கே
சான்றநற் புலமை உளதெனறவிர்த்து
தன்னின மடவார் தலைமை பெற்று உவப்ப
மன்னிய புகழ்சால் மறையவர் குலத்தில்
அந்தணன் நாவில் அருங் கலைமானே
வந்தனள் ஆகும் எனச் சிலர் வழுத்தத்
தன்னுடை நாமத் தகைமைக்கு ஏற்ப
மன்னிய மலைமகள் எனச்சிலர்சாற்ற
எங்கை என்றே யானும் களிக்க
நங்கை என்றே நானிலம் வியக்க
அசலம் ஈன்றெடுத்த அன்னையின் அருள்கொடு
அசலாம்பிகையும் மறைந்தனள் மாதோ!''
ஆண்களுக்குத்தான் புலமை இருக்கிறது என்பதில்லை. அதைத் தவிர்த்துப் பெண்கள் தலைமை பெற்று மகிழத்தக்க வகையில் அசலாம்பிகை வந்து பிறந்தனள். மறையவர் குலத்தினள். சரசுவதியே வந்து தோன்றினாளோ என்று பலரும் பாராட்டும்படி அறிவு சான்றவள். அசலம் என்றால் மலை. மலைமகளாம் பார்வதியே (அசலாம்பிகை) இப்பூமிதனில் வந்து தோன்றினள் என்று பலரும் போற்றினர். நல்ல பெண் எனும் பொருளில் நங்கை என்றே மகிழ்ந்தனர் நானிலத்தார். ஆனால், உரிமையாக அசலாம்பிகையைத் தங்கை என்றே அழைத்து மகிழ்கிறார் அக்காள் உருக்குமணி. இவர் இலக்கணம் பயின்றவர்; இலக்கியப் பயிற்சியும் உடையவர். தன் தங்கையின் இறப்புத் துயரம் தாங்காமல் அழுது புலம்பும் பாடலின் ஈற்றடி நெஞ்சை உருகச் செய்கிறது. ""அசலாம்பிகையும் மறைந்தனள் மாதோ'' என்று முடிகிறது சிறப்புப் பாயிரம்.
தந்தையார், தங்கை அசலாம்பிகை, அக்காள் உருக்குமணி ஆகியோர் தமிழ் இலக்கியக் குடும்பத்தினராக வாழ்ந்தனர் என்பது தெளிவு. தங்கையின் நூலுக்கு அக்காவே பாயிரம் தருதல் என்ற நிலையையும் கண்டு வியக்கலாம்!
நெஞ்சை நெகிழ வைக்கும் பாயிரம். இலக்கிய நயம் மட்டுமன்றி வரலாற்று நயமும் ததும்பப் படைக்கப்பட்டுள்ளது. அக்காள் உருக்குமணி வேறு நூல் எதுவும் இயற்றியதாகத் தெரியவில்லை.
மேலும் பண்டிதை மனோன்மணி அம்மையார், அசலாம்பிகை அம்மையாரின் நூலான திருவாமாத்தூர் திரிபு அந்தாதி என்ற நூலுக்குச் சாற்றுக்கவி பாடிய கவிதை ஒன்று காணப்படுகிறது. இது பெண் எழுதிய கவிதைக்கு மற்றொரு பெண் வழங்கிய பாராட்டுக் கவிதை ஆகும்.
-தாயம்மாள் அறவாணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


