சொல் தேடல் -23

வாழ்க்கையில் பொதுவாக வெற்றி மகிழ்ச்சியையும் தோல்வி வருத்தத்தையும் தரும். ஒரு சில வேளைகளில் தோல்வி மகிழ்ச்சியைத் தருவதும் உண்டு. ஒருவனுக்குத் தன் அன்புக்கு உரியவர்களிடம் தோற்பது மகிழ்ச்சியைத் தரும்.

வாழ்க்கையில் பொதுவாக வெற்றி மகிழ்ச்சியையும் தோல்வி வருத்தத்தையும் தரும். ஒரு சில வேளைகளில் தோல்வி மகிழ்ச்சியைத் தருவதும் உண்டு. ஒருவனுக்குத் தன் அன்புக்கு உரியவர்களிடம் தோற்பது மகிழ்ச்சியைத் தரும். ஊடலில் தோற்றவர்களை வென்றவர்கள் என்கிறது தமிழ்மறை. அறிவார்ந்த பிள்ளைகளிடமும் பெயரன்-பெயர்த்திகளிடமும் தோற்பதும் பெருமகிழ்ச்சி நல்குவதாகும். மனமொத்த வாசுகியோடு இல்லறம் நடத்திய திருவள்ளுவருக்கும் இவ்வனுபவம் இருந்திருக்கும்போலும் இல்லாவிட்டால் "தம்மின் தம்மக்கள் அறிவுடைமை இனிது' என்று எப்படிச் சொல்ல முடியும்?

அறையில் சென்ற வாரம் சொல் தேடல் கட்டுரையைத் தட்டச்சு செய்து கொண்டிருந்தேன். அங்கு வந்த என் பெயர்த்தி கலைவாணி, ""தாத்தா என்ன செய்யிறீங்க?'' என்றாள். ""சொல் தேடல் கட்டுரை எழுதிக்கிட்டிருக்கேன்'' என்றேன். ""அப்படின்ன என்ன?'' என்றாள். ""நாம பயன்படுத்துகிற ஆங்கிலச் சொற்களுக்குச் சரியான தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடித்தல்'' என்றேன். உடனே, ""(Remote)

க்கு என்ன தமிழ்?'' என்றாள். என்னால் சட்டென்று விடைசொல்ல முடியவில்லை. அன்றாடம் பயன்படுத்தும் ஒரு பொருளுக்குத் தமிழ்ச்சொல் தெரியாமல் இருக்கிறோமே என்று வருந்தினேன். அதற்குரிய தமிழாக்கத்தில் ஈடுபட்டதோடு வாசகர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதனை அறிய அதனையே சொல் தேடலிலும் கொடுத்தேன்.

இக்கருவியால் குழந்தைகள் வானூர்தி, பேருந்து போன்ற பொம்மைகளை இயக்கி விளையாடுகிறார்கள்; நாம் எல்லோரும் தொலைக்காட்சி அலைவரிசைகளை மாற்றுகிறோம்; செல்வர்கள் தங்கள் மகிழுந்தின் கதவுகளையும் வண்டியில் இருந்தவாறே வளமனையின் வாயில்களையும் திறந்து மூடுகிறார்கள்; அறிவியல் வல்லுநர்கள் வானில் சுற்றும் விண்கலன்களை இயக்குகிறார்கள். பொருள்களைத் தொடாமல் தொலைவில் இருந்து இயக்கப் பயன்படும் கருவி இது.

இதற்குப் பல நல்ல தமிழ்ச் சொற்களை உருவாக்கி வழங்கிவரும் புலவர் த. கி. பச்சையப்பன், தொலைவியக்கி என்னும் சொல்லைத் தாம் உருவாக்கி, இதழ்களில் பயன்படுத்தியுள்ளதைத் தெரிவித்துள்ளார். அவருக்கு நன்றி. இதே சொல்லை மட்டுமே புதுவை ரவிஜி, ஞா. மாதவன், டி.வி. கிருஷ்ணசாமி ஆகியோரும் குறித்துள்ளனர். எஸ். சுரேஷ் தொலை தூர இயக்கி என்றும், ராஜசிம்மன் தூரக் கட்டுப்பாட்டுக் கருவி என்றும் இதே பொருள் தரும் சொற்றொடர்களைத் தந்துள்ளனர்.

வெ. ஆனந்த கிருஷ்ணன், ந.சு. சண்முகம் தொலை இயக்கி;

ச. கிருஷ்ணசாமி தொலை இயக்கி, தொலைவுப்பொறி, சேய்மைப் பொறி; கோ. தமிழரசன் நேரச்செயலி, காலச்செயலி; ப. இரா. இராசஅம்சன் சேய்மை இயக்கி, நீளிடை இயக்கி; என். ஆர். ஸத்யமூர்த்தி சேய்மை இயக்கி, தொலைவு (காரணப்பெயர்); தி.ரங்கசாமி புறப்பொறி; கோ. மன்றவாணன் கைக்கோள், தொலைச்செயலி, ஏவி ஆகியவற்றையும் தக்க சொற்களாகக் காட்டியுள்ளனர். தி. அன்பழகன் அலைமாற்றி; சந்திரா மனோகரன் தூண்டுவிசை, இயக்குபொறி, கைவிசை, கைப்பொறி, ஏவுநர் ஆகிய சொற்களையும் வழங்கியுள்ளனர்.

இவற்றுள் நேரச்செயலியும் காலச்செயலியும் அலைமாற்றியும் பொருளைக் குறுக்கிவிடுகின்றன. தொலைவு என்பதை மட்டும் சொன்னால், தொலைதல் என்னும் பொருளைத் தரும் தொழிற்பெயராகிவிடும். ஏவி என்பது ஏவி விட்டான் என்னும் தொடரில் உள்ளதுபோல வினையெச்சமாக அமைந்து மயக்கத்தை உண்டாக்கிவிடும். ஏவுநர் ஆள்பெயர்போல் அமைந்திருக்கிறது. எஞ்சிய சேய்மை இயக்கி, சேய்மைப் பொறி, நீளிடை இயக்கி, தொலைச் செயலி, கைக்கோள், கைப்பொறி ஆகியவை அனைத்தும் தரமான சொற்கள். கைக்கோளும் கைப்பொறியும் ஒரே பொருளைத் தருவன. கையில் கொள்ளப்படுவது கைக்கோள். இவற்றுள்ளும் கைப்பொறி, சேய்மைப்பொறி இரண்டும் சிறப்பான சொற்கள்.

சங்க இலக்கியத்தில் சேய்மையைக் (Remote)  குறிப்பதற்குச் சேண் என்னும் அழகிய சொல்லை ஆண்டுள்ளனர். அது சொல்லுவோன் குறிப்பிற்கு ஏற்பக் குறுகிய தொலைவையோ நெடுந்தொலைவையோ, இடைப்பட்ட தொலைவையோ குறிப்பதாக அமைந்துள்ளது. பிடவம்பூ சில காதம் மணம்வீசுவது. அதனைச் "சேண்நாறு பிடவம்' என்கிறது முல்லைப் பாட்டு. பல்லாயிரம் காத தொலைவில் இருப்பது ஞாயிறு. அதனைச் "சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு' என்கிறது புறப்பாட்டு (174). நெடுந்தொலைவிலும் இல்லாமல் அண்மையிலும் இல்லாமல் இடையில் இருப்பது வேற்று நிலப்பகுதி. அதனைச் "சேண்புலம் முன்னிய அசைநடை அந்தணிர்' என்கிறது ஐங்குறுநூறு (384) இதனையொட்டி நம்மிலிருந்து விலகி அண்மையிலோ சேய்மையிலோ இடையிலோ இருக்கும் பொருளை இயக்கும் கருவியைச் சேண்பொறி என்று குறிக்கலாம். இதற்கும் சேய்மைப் பொறி என்பதே பொருள். இதனையும் குறுக்கிச் சேணி என்னும் புதுச்சொல் படைக்கலாம். பெரும்பான்மையோர் இசைவு பெற்றிருப்பது தொலை இயக்கி. கைப்பொறி, சேண்பொறி, சேணி ஆகியவை தக்க சொற்கள். காலந்தான் இவற்றுள் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கைப்பொறி என்றோ சேணி என்றோ குறிக்கலாம் என்பது என் கருத்து.

(Remote)  - கைப்பொறி அல்லது சேணி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com