"நெல்கின்டா' என்னும் நெற்குன்றம்!

சங்க காலத்தில் தமிழகத்தை ஆண்ட பாண்டியருக்குக் கொற்கை துறைமுகப்பட்டினமாக இருந்தது.
"நெல்கின்டா' என்னும் நெற்குன்றம்!

சங்க காலத்தில் தமிழகத்தை ஆண்ட பாண்டியருக்குக் கொற்கை துறைமுகப்பட்டினமாக இருந்தது. வைகை நதி கடலில் சேருமிடத்தில் உள்ள அழகன்குளம் என்ற ஊரில் அண்மையில் நடந்த அகழ்வாய்வுகளில் ரோமானிய நாணயங்களும் மட்பாண்டங்களும் கிடைத்தன. எனவே, அதுவும் பாண்டியரின் ஒரு துறைமுகப் பட்டினமாக இருந்திருக்க வேண்டும். இவை இரண்டுமே கிழக்குக் கடற்கரைப் பக்கம் உள்ளன. இவை தவிர பாண்டியருக்கு மேற்குக் கடற்கரைப் பக்கத்திலும் ஒரு கடற்கரைப் பட்டினம் இருந்திருக்கிறது. அதைப் பற்றிய விளக்கத்தை இனிக் காண்போம்.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் சிறப்புகளை மாங்குடிமருதனார், "மதுரைக் காஞ்சி'யில் பாடியுள்ளார். அதில் இப்பாண்டியன் பெற்ற போர் வெற்றிகளை வரிசையாகக் கூறுகின்றபோது, இவனது தலையாலங்கானத்துப் போர் வெற்றியினை இரண்டாவதாகவே புலவர் கூறுகிறார். இப்போருக்கு முன்னர் சேர மன்னர்க்குரிய குட்டநாட்டுப் பகுதியில் பல குறுநில மன்னர்களை இவன் வெற்றி கொண்டதாகப் புலவர் கூறுகிறார். (பல் குட்டுவர் வெல் கோவே - மது.105) இதன் உச்சகட்டமாக அப்பகுதியில் இருந்த ஒரு கடற்கரைப் பட்டினத்தையும் இவன் கைப்பற்றியதாகக் கூறுகிறார்.

பொன் மலிந்த விழுப்பண்டம்

நாடு ஆர நன்கு இழிதரும்

ஆடு இயல் பெரு நாவாய்

மழை முற்றிய மலை புரைய

துறை முற்றிய துளங்கு இருக்கை

தெண்கடல் குண்டு அகழி

சீர்சான்ற உயர் நெல்லின்

ஊர் கொண்ட உயர் கொற்றவ (81-88)

"நெல்லின் ஊர்' என்ற ஓர் ஊரைப் பாண்டியன் வென்றிருக்கிறான். இது இப்பாண்டியன் பெற்ற முதல் வெற்றியும், மிகச் சிறப்பான வெற்றியுமாகும்.

சங்ககாலத்தில் "யவனர்' எனப்படும் மேனாட்டினர் கடல்வழியாகத் தமிழகத்துக்கு வந்தனர். தமிழகப் பொருள்களை வாங்க அவர்கள் தங்கள் நாட்டிலிருந்து பெருமளவு தங்கத்தைக் கொண்டு வந்தார்கள் என்பதையே ""பொன் மலிந்த விழுப்பண்டம் நாடு ஆர நன்கு இழி தரு''வதாக என்று புலவர் பாடியுள்ளார். இவ்வூரின் பெயரை நேரிடையாகக் கூறாமல் புலவர் நெல்லின் ஊர் என்று கூறுகிறார். இதனை நெல்லூர் என்றும், சாலியூர் என்றும் உரையாசிரியர்கள் கூறுவர். இருப்பினும் அது எங்குள்ளது என்று கண்டறிய முடியவில்லை.

தமிழகத்தின் தொன்மைச் சான்றுகளில், தமிழகத்தைப் பற்றி மேனாட்டு வரலாற்றாசிரியர்கள் எழுதிவைத்துள்ள குறிப்புகள் முக்கியமானவை. பெரிப்ளூஸ் (Periplus) என்ற ஒரு பயண நூல் பாண்டியர்களைப் பற்றிப் பேசுகிறது. இதன் காலம் கி.பி 40-50 க்குள் இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். இந்நூல் தமிழக மேற்குக் கடற்கரையில் அன்றிருந்த முக்கிய துறைமுகப் பட்டினங்களைப் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது.

இதில் தொண்டி, முசிரி ஆகிய சேரர் துறைமுகப் பட்டினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுக்குச் சற்றுத் தெற்கில் சுமர் 100 கி.மீ தொலைவில் உள்ள ஓர் ஆற்றின் உட்பகுதியில் நெல்கின்டா (Nelcynda or Nelkynda) என்று அழைக்கப்படும் (காண்க: வரைபடம்) ஒரு துறைமுகப்பட்டினம் இருந்ததாகவும், அது உள்நாட்டில் வெகுதொலைவில் உள்ள மதுரை என்ற நகரை ஆளும் பாண்டியன் என்றொரு மன்னனின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் பெரிப்ளுஸ் கூறுவது கூர்ந்து நோக்கத்தக்கது.

பெரிப்ளுசை அடுத்து தமிழகத்தைப் பற்றிய தகவல் தெரிவிப்பவர் பிளினி (கி.பி.23 - கி.பி 79) என்ற உரோம வரலாற்றாசிரியர். இவர் தன்னுடைய "இயற்கை வரலாறு' (Natural History) என்ற நூலில் நெல்கின்டா, மதுரை, பாண்டியன் ஆகிய பெயர்களைக் குறிப்பிட்டு பெரிப்ளுஸ் கூறும் செய்திகளை உறுதிப்படுத்துக்கிறார். ஆனால், இவருக்கும் பின் வந்த தாலமி (கி.பி 90-கி.பி 168) என்ற கிரேக்க வரலாற்றாசிரியர் தன்னுடைய "ஜியாக்ரபிகா' என்ற நூலில் நெல்கின்டா என்ற இந்த ஊர் ஆய் அரசர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததாகக் கூறுகிறார். இந்த ஆய் அரசர்கள் பொதிகைமலைப் பகுதியை ஆண்டவர்கள் எனத் தெரிகிறது.

இப்பொழுது மீண்டும் மதுரைக் காஞ்சிக்கு வருவோம். நெடுஞ்செழியன் வெற்றிகொண்ட நெல்லின் ஊர் என்பது முதலில் ஒரு மேற்குக் கடற்கரைப் பட்டினமாகவே இருக்க வேண்டும். அது ஒரு கடற்கரைப் பட்டினம் என்பதைப் பாடலே கூறுகிறது. அது கொற்கையாகவோ, அழகன் குளமாகவோ இருக்க முடியாது. கொற்கைப்பட்டினம் சில வேளைகளில் தென்பாண்டி மன்னரின் கட்டுப்பாட்டில் இருந்திருப்பினும், இதே பாடலில் பின்னர் புலவர் ""நல் கொற்கையோர் நசைப் பொருந'' (மது.138) என்று கூறுவதால், முதலில் கூறப்பட்டது கொற்கை அல்ல என்பது தெளிவு.

மேலும், கொற்கை நெல்லுக்குப் பெயர்போனதும் அல்ல. அடுத்து அழகன்குளம் என்பது இன்றைய இராமநாதபுரப் பகுதி. அது என்றைக்குமே பாண்டியர் வசமே இருந்துள்ளது. எனவே, அதனை வெல்ல வேண்டிய நிலை பாண்டியனுக்கு இல்லை. எனவே, அந்த நெல்லின் ஊர் வேறு மன்னரின் ஆளுகைக்குட்பட்டிருந்து, பாண்டியன் அரசேற்றவுடன் முதலில் அதனைக் கைப்பற்றியிருக்க வேண்டும். அதுவே மேற்குக் கடற்கரைப் பகுதியில் பாண்டியர் ஆளுகைக்குட்பட்ட பகுதி என யவன ஆசிரியர்களால் கூறப்படும் நெல்கின்டா என்பது உறுதியாகிறது.

யவன ஆசிரியர்கள் குறிப்பிடும் நெல்கின்டா என்ற இவ்விடம், இன்றைய கேரளாவில் திருவல்லாவைச் சேர்ந்த ஆளும்துருத்தி - கடப்பரா பகுதியில் இருந்ததாக அங்கு நடந்த அகழ்வாய்வுகள் கூறுகின்றன. அந்த இடம் இன்றைக்கும் மிகுந்த நெல்வளம் மிக்க பகுதியாக விளங்குவது கவனிக்கத்தக்கது. இந்த இடம் பம்பா நதிக்கரையில் இருப்பது வரலாற்றாசிரியரின் கூற்றை மெய்ப்பிப்பதாகவே உள்ளது. புலவர், ""பல்குட்டுவர் வெல் கோவே'' என்று பாண்டியனைச் சிறப்பித்துக் கூறியதைப் பார்த்தோம்.

குட்டநாட்டை ஆண்டவரே "குட்டுவர்' எனப்பட்டனர் என்பர் உரையாசிரியர். இந்தக் குட்டநாடு இன்றைய கோட்டயம், கொல்லம் மாவட்டங்களை அடக்கிய பகுதியாகும். அகழ்வாராய்வு செய்யப்பட்ட ஆளும்துருத்தி - கடப்பரா பகுதி இந்த வட்டாரத்தைச் சேர்ந்தது என்பதுவும் கவனிக்கத் தகுந்தது.

மேலைக் கடற்கரையில் இருக்கும் இந்தப் பட்டினம் மேலை நாடுகளுடன் நேரடியாகவும், எளிதாகவும் கடல்வழி வாணிகம் செய்ய ஒரு வாயிலாகவும் விளங்கும் என்பதால் பாண்டியன் இதனை முதலில் கைப்பற்றினான் எனலாம். மிகுந்த நெல்வளம் கொண்ட காரணத்தால் இந்த இடம் நெற்குன்றம் என்று அன்றைக்கு அழைக்கப்பட்டிருக்கலாம். இதனையே யவன ஆசிரியர்கள் நெல்கின்டா என்று அழைத்தனர் என்றும் கூறலாம்.

இதன் மூலம் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் கிறிஸ்து பிறப்பையொட்டிய காலத்தில் தமிழகத்தில் ஆண்டான் என்றும், இவனது மேற்குக் கடற்கரைத் துறைமுகப்பட்டினமே நெல்கின்டா என்றும் அறியலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com