

இலக்கியம் என்பது கற்பனை கலந்த அழகுடன் உள்ளத்தைக் கவரும் வகையில் இயற்றப்படுவது என்ற எண்ணம் நம்மிடையே உள்ளது. தமிழ்ப் புலவன் வார்த்தைகளையும், காட்சிகளையும் கொண்டு கற்பனை அழகுடன் நிகழ்வுகளைப் பதிவு செய்யவில்லை. எதார்த்தமாக ஒன்றின் நிகழ்வை ஒன்றின்மேல் ஏற்றிக் கூறவில்லை.
"கண்ணாடி அல்லது உருவத்தைப் பிரதிபலிக்கும் எதுவாயினும் அது தன்னுடைய உருவம் என்பதை அறியும் திறன் முதலில் மனிதன், பிறகு குரங்கின் பரிணாம வளர்ச்சிதான் மனிதன் என்று சொல்லக்கூடிய வகையில் இருக்கும் நிலம்வாழ் விலங்கான குரங்கு. அடுத்து, டால்ஃபின் வகை மீன்கள் என இவற்றிற்கு மட்டுமே என்பதுதான்' என்கிறது ஒரு பத்திரிகை செய்தி!
இத்தகவல் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சங்கப் புலவர் இளனாகநாரின் பாடல் அடிகளில் இடம்பெற்றிருப்பதைப் பாருங்கள்:
"நல்லுதல் .... ....
முறியார் பெருங்கிணை யறிதல் அஞ்சிக்
கறிவளர் அடுக்கத்திற் களவிற் புணர்ந்த
செம்முகமந்தி செல்குறி கருங்காற்
பொன்னிணர் வேங்கைப் பூஞ்சினைச் செலீஇயர்
குண்டு நீர் நெடுஞ்சுனை நோக்கிக் கவிழ்ந்துதன்
புன்தலைப் பாறுமயிர் திருத்தும்
குன்ற நாடன் இரவினானே
(நற்றிணை குறிஞ்சித்திணை! பா-151, அடி : 5-12)
இரவுக் குறியின்கண் வந்த தலைவன் சிறைப்புறமாக நிற்க, தோழிக் கூற்றாக இப்பாடல் இடம்
பெற்றுள்ளது.
"மிளகுக்கொடி வளர்ந்து படருகின்ற மலைப் பக்கத்தில் களவுப் புணர்ச்சியில் கடுவனோடு (ஆண்குரங்கு) சிவந்த முகத்தினை உடைய மந்தி (பெண்குரங்கு) ஈடுப்பட்டது. அப்புணர்ச்சியினால் வேறுபட்ட தன்தோற்றத்தினை தளிர்களைத் தின்னும் தன்னுடையச் சுற்றத்தார்கள் அறிந்துவிடுவார்களோ என்று அஞ்சி கரிய நிறமுடைய அடி மரத்தினையும், பொன் போன்ற பூங்கொத்தினையும் உடைய வேங்கை மரத்தின் கிளை மீது சென்று, அதற்குக் கீழே ஓடிய சுனை நீரை நோக்கி புணர்ச்சியில் குலைந்திருந்த தன் உச்சி மயிரை திருத்தும்' என்று பதிவாகியிருக்கும் இச்செய்தி வெறும் காட்சிக்கும், கற்பனைக்கும் உருவம் கொடுத்துப் பாடிய பாடல் என்றால், மலைப்பகுதியில் எத்தனையோ விலங்கினங்களையும், பறவையினங்களையும் கண்டிருப்பார் அவற்றின்மேல் ஏற்றிக் கூறாமல் குரங்கின்மேல் ஏற்றிக்கூறக்காரணம், குரங்கின் அறிவுத்திறனை அறிந்திருந்த சங்கப் புலவரின் அறிவியல் சிந்தனையின் வெளிப்பாடே இப்பாடல் எனலாம்.
-முனைவர் பு. இந்திராகாந்தி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.