ஐம்பூதங்களுள் ஒன்று நீர்; அதற்கு ஒலி, ஊறு, ஒளி, சுவை உண்டு. மணம் இல்லை. அதனால், ""நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி'' என்றார் மாணிக்கவாசகர் (திருவாசகம்). நான்கு தன்மைகள் இருந்தாலும் அதற்கு உயிரில்லை; ஆதலால், அறிவும் இல்லை! ஆனால், உயிர்களை உண்டாக்கும்; உயிரைத் தான் வளர்ப்பதோடு உடல் வளர்க்கப் பயிர், செடி, கொடி, மரமென மற்றை ஓரறிவு உயிர்களையும் உருவாக்கும்; பயன் தருமாறும் செய்யும்.
நீரில் இருந்து பிறக்கும் பண்பாடே நீர்மை. நீர்மையாவது, நீரின் தன்மை. நீரின் தன்மை, தன்னை அறியாமலே ஆறறிவு உயிராம் மாந்தர்க்கு, ஒழுக்கத்தை உண்டாக்குகிறது. ஒழுகும் நீர், மாந்தர்க்கோ ஒழுக்கமாம் நீர்! அதனால்தான்,
""நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு''
என்றது வள்ளுவ வான் சிறப்பு. நீரில்லை என்றால் உயிர்த் தோற்றமில்லை; ஒழுக்க மேன்மையும் இல்லை. ஒழுக்க மேன்மைக்கு நீர்மைப் பெயரும் இல்லை.
நீர்மை வழங்கும் நீர்மை என்ன? ""உலகத்தோடு ஒட்ட ஒழுகு'', ""ஒத்த தறிந்து வாழ்'', ""ஒப்புரவோடு உயர்வடை'' - இவற்றை எல்லாம் நான் கொண்டுள்ளேன்; என்னை உற்றுப்பார்; ஆராய்ந்துபார்; உண்மை புலப்படும். மேலும் ஒன்றும் புலப்படும். "கைம்மாறு கருதிச் செய்தலைக் கைவிடு' அதாவது, "உனக்கு வரும் மீள் பயன் கருதிச் செய்யாதே'
என்பதாம்.
நீராக இருக்கிறேன். இப்படியேயா நான் இருக்கிறேன், வெங்கதிர் வாட்டி எடுத்தலால், ஆவியாகிறேன். நீரின் பெயரை விடாமல் நீராவியாகிறேன். நெடுவானில் பரவுகிறேன்; கருக்கொள்கிறேன். கருமுகில் ஆகிறேன். மிக மிக மேலே போகிறேன். குளிர் மிகக் கொள்கிறேன்; கல்லாகவும் செய்கிறேன். தூவானம் நான்; தூறல் நான்; மழை நான்; ஆலங்கட்டியாம் கல்மழையும் நான்; இடமறிந்தும் காலமறிந்தும் வாழ்கிறேன் இல்லையா? இப்படி வாழ்வதுதானே நீர்மை!
மலையில் பொழிந்தால் என்ன? மண்ணில் பொழிந்தால் என்ன? புனலாய்ப் பெருகி, அருவியாய்க் கொழித்து, ஆறாய், காலாய், ஏரியாய், குளமாய், வாய்க்காலாய், வடிகாலாய், ஆயிரம் காலால் நடையிட்டு ஆக்கம் புரிகிறேனா, இல்லையா! இது நீர்மை இல்லையா?
உடலழுக்கைப் போக்கும் நான், ஊரழுக்குகளையும் அள்ளிப்போகும் உயிர்நலத் தொண்டு செய்கிறேனா இல்லையா? இந்நீர்மையைக் கற்றாயா நீ? உன்னைத் தூயனாய், ஊரைத் தூயதாய் நீ வைத்தாயா? நீர் ஆகிய நான் எப்படி ஓடுகிறேன்... நான் ஓடுதலால்தானே, ஓடு! நான் ஓடுதலால்தானே, ஓடை; என்மேல்தானே, ஓடம்! ஓடுவதுதான் இயக்கம். ஓரியக்கம் தேக்கமாகலாமா?
என் பெயர் "நீள்' இல்லையா? ஏன்? எங்கே விட்டாலும் நீள்வேன்; பரவுவேன். என் பெயர் "நீளி' என்பதும் அதனால்தானே! என் பெயர் "நீல்', "நீலி' என ஆனதேன்? கடல் நீர், வான்முகில் தோற்றம் அதுதானே! விட்டதும் நீண்டு ஓடுதலால்தானே "தார்' என்றும், "தாரை' என்றும் பெயர் பெற்றேன்! அம்மட்டோ? உறுதிப்படுத்துதலைத் "தாரை வார்த்தல்' என்பதில்லையா? என்னைக் கையில் விட்டுத்தானே வாய்மை காக்க வைக்கின்றனர்!
இன்னொரு பெயர் அறிவாயோ? காய்ந்த ஓலை சலசலக்கும். நான் "சலசல' என ஓடுவதால் "சலம்' என்னும் பெயர் கொண்டேனா இல்லையா? என்னனைய வெல்லாம் கூடிச் சேர்தலால்தானே "புணரி' எனப் பட்டது, கடல்? அதற்குச் "சலதி' என இலக்கியவாணர் பெயர்சூட்டி வழங்கவில்லையா? வீட்டுக்குள் வந்தேனே, "சலதாரை'யாய்! "சலக்கால் புரை'யும் ஆனேனே! என்னால் உண்டாய பண்புச் செல்வம், சொற்செல்வம்}மொழிச்செல்வம் பார்த்தாயா?
தொடர்வோம்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இந்தியாவுக்கு விமான சேவையை விரிவுபடுத்த மாலத்தீவு திட்டம்!
எல்ஐகே டிரைலர்!
திருமாவளவன் விலகல்! விசிகவில் காங்கிரஸ் முன்னாள் தலைவரின் மகனுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு


