திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்
/

தமிழ்ச் செல்வங்கள்: பலி

பல் - பலி. ’பல்' வெண்ணிற இயற்கையது. பகல் வெண்ணிறத்தது. பகல், பால் எனினும் வெண்ணிறமே உடையது. வெள்ளை, தூயது; களங்கம் கறை அற்ற உள்ளம் வெள்ளை மனம்! தூய மனம்

News image
Updated On :11 மார்ச் 2017, 7:34 pm

பல் - பலி. ’பல்' வெண்ணிற இயற்கையது. பகல் வெண்ணிறத்தது. பகல், பால் எனினும் வெண்ணிறமே உடையது. வெள்ளை, தூயது; களங்கம் கறை அற்ற உள்ளம் வெள்ளை மனம்! தூய மனம். உடலில் உள்ள உறுப்புகள் மூன்று வெண்மையும் ஒளியும் உடையவை. வெளிப்பட விளங்குவது பல். அதனால் முத்துப் பல், முல்லைப் பல் என்பர். முத்தைத் தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்தி அமைத்த பல் என்பதை, ’’முத்தைத் தரு பத்தித் திருநகை'' என்றார் அருணகிரியார். திரு நகை அழகிய பல் என்பதாம்.
உடம்பின் அகத்தே உள்ள வெண்ணிற உறுப்பு எலும்பு. என்பு என்பதும் அது. ’எல்' ஒளிமிக்கது. ’’எல்லே இலக்கம்'' என்பது தொல்காப்பியம். இலக்கமாவது ஒளியுடைய கதிரோன். பகல் கடை எல்லங்காடி; இரவுக்கடை அல்லங்காடி. சிலப்பதிகாரத்தில் சுட்டப்படுவன இவ்வங்காடிகள். எலும்பின் வெண்மை எவரும் அறிந்தது.
மூன்றாம் ஒளி உறுப்பு ’நகம்'; நகை எனப்படும் பல் ஒளி போல் இல்லை எனினும், நகம் ஒளியுடையதென்பது விளங்கும். ஒளிக்கு எதிரொளியும் செய்யும். ’’பன்னகமும் நகும் வெள்ளிப் பனிவரை'' எனப் பனியை வெண்மைக்கு எடுத்துக் காட்டினார் கம்பர். நகம், ஒளி செய்யும் பனிமலை.
பலி என்பது திருக்கோயில்களில் - பெரிய கோயில்கள் எல்லாவற்றிலும் அமைந்த மேடை இடம். பலி இடப்படும் இடமாகிய உயர்ந்த மேடை ’பலி பீடம்' ஆகும்.
அங்கே குருதிப் பலி இடப்படுவது இல்லை. பலியோ வெள்ளை; குருதியோ சிவப்பு நிறம். எதனைப் பலியாக இட்டனர்? ’’பூப்பலி இடுமின்; பூப்பலி தூவுமின்'' எப் பூ? வெண்ணிறப் பூவைப் பலிசையாக வழிபாட்டுக் கடமையாக இட்ட இதனை அறிக. அப் பூவும் வெண்ணிறப் பூவாக இருந்ததால் பலி, பலிசை எனப்பட்டன. வெண்ணிறச் சோறும் நீரும் பலிசையாக இட்டனர். கோயிலின் தூய்மையும், கொல்லாமையும் கொள்ளப்பட்ட முதன்மை இடம் பலி பீடம் ஆகும்.
பின்னவர் கொண்ட கொலைப் பலி இடம், பலி பீடம் அன்று. ’’சலம் பூவொடு மறந்தறியேன்'' என்பது அப்பரடிகள் வாரப் பாடல். கோயில் கொலைக்களமோ, காவு வாங்கும் இடமோ இல்லை என்பதை நுழைந்ததும் அறிவிப்பது பலிபீடம்!
வளமும் உளமும் ஒருங்கே அமைந்த வீடுகளில் தட்டில்லாமல் சோறு கிடைக்கும். வறியவர் வீடுகளில் ஒருவேளையில் மூவேளை உணவும் ஆக்கும் நிலை இருக்கும். ஆனால், சுட்டிக்காட்டிய வளமனைகளில் வேளை தொறும் சுடு சோறு ஆக்கப்படும். ’’செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பர்'', வறிய வீட்டுக் குழந்தைகளுக்குக் கிண்ணம் கிண்ணமாகச் சோறு வழங்குவர். அதற்குக் ’குழந்தை பலி' ’குழவி பலி' என்பது பெயர். குழந்தைக்கு வழங்கும் உணவே, குழவி பலி. இதனை அருளற அந்தண்மை இல்லாக் கீழ்மை உணர்வர், புது வீடு கட்டுங்கால் அதற்குக் காப்பாகக் ’குழவிப் பலி' எனக் குழந்தைகளைப் பலியிடும் சிறுமைகளைச் செய்தனர்.
’குழவி பலி', ’குழவிப் பலி' என்பவற்றின் பொருள் வேறுபாடு அறியாமல் தொலைந்தாலும், தொலையட்டும்! தம் குழந்தையைப் பலியிடுவரா? தம் குழந்தைக்குத் தாய் போல் பால் சுரக்கும், ஆடு மாடுகளைப் பலியிடுவரா? கடவுள் பெயராலா இக் கொடுமை புரிய வேண்டும்? சிந்திப்பாரேனும் சிந்தித்துச் சிறுமை நீக்கட்டும்!
- தொடர்வோம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.