ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

இல்லற வாழ்வின் இணைப்புப் பாலம்

சங்க இலக்கியத்தில் உள்ள அக இலக்கியம் இல்லற வாழ்வின் மேன்மையைக் கூறுகிறது.

News image
Updated On :27 மே 2017, 9:28 pm

சங்க இலக்கியத்தில் உள்ள அக இலக்கியம் இல்லற வாழ்வின் மேன்மையைக் கூறுகிறது. அக இலக்கியங்களில் கூற்றுக்குரிய பலருள் தோழி முதன்மையானவள். தோழி இல்லாமல் தலைவன்-தலைவியின் அகவாழ்வு செம்மைப்படாது. தலைவியின் தோழியானவள் மதிநலம் மிக்கவள்; துணிவானவள்; கண்டிப்பானவள்; அறத்தொடு நிற்பவள்; எந்தத் தீய விளைவுக்கும் ஆட்படாதவள்.
தலைவன்}தலைவி இருவரும் இணைந்து இல்லற வாழ்வில் ஈடுபடுவதற்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவள். இவளின் பேச்சு நயமானது. சான்றாக, தலைவனிடத்து தலைவி குறித்தும், தலைவியிடத்து தலைவன் குறித்தும் பேசுகிற பின்வரும் இரு பாடல்கள் தோழியின் மாண்பை, மதிநுட்பத்தை எடுத்துரைக்கின்றன.
புலவர் பெருங்கடுங்கோ பாடிய பாலைத்திணைப் பாடல் இது. தலைவன், தலைவியை விட்டுப்பிரிந்து சென்றிருக்கிறான். அவன் பிரிவைப் பொறுக்க முடியாமல் தலைவி வருந்துகிறாள். அதையுணர்ந்த தோழி, தலைவியின் வருத்தம் போகக் கூறும் ஆறுதல் மொழிகள் இவை.
""தலைவன் உன் மீது மிகுந்த அன்புடையவன். எனவே, அவன் அந்த அன்பை உனக்கு வழங்குவதில் தடையில்லாதவன். அவன் பாலை நிலத்து வழியாகத்தான் பொருள் ஈட்டுவதற்குச் சென்றிருக்கிறான். பாலை நிலம் வறண்டது. நீர்த்தாகம் எழ வைப்பது. என்றாலும் அங்கே அருமையான காட்சிகள் உண்டு. ஒன்றை சொல்கிறேன் கேள். தன்னுடைய இணையான பெண் யானைக்கு நீர்த்தாகம் எடுப்பதையுணர்ந்த ஆண் யானை, அந்தப் பாலைநிலத்தில் வளர்ந்துள்ள "யா' என்கிற மரத்தின் நீர்ப்பட்டையை உரித்துக் கொடுக்க, அதை வாங்கியுண்ணும் பெண்யானை நீர்த் தாகத்தைத் தணித்துக் கொள்ளும். இது அன்பால் நிகழும் காட்சி. இக்காட்சியை அந்நிலத்தின் வழியாகச் செல்லும் தலைவன் பார்க்கிறபோது, கண்டிப்பாக உன்
நினைவு வந்து, விரைவில் திரும்பிவிடுவான்; வருந்தாதே!'' என்கிறாள் தோழி.

நசைபெரி துடையர் நல்கலு நல்குவர்
பிடிபசி களைய பெருங்கைவேழம்
மென் சினை யா அம் பிளக்கும்
அன்பின் தோழிஅவர் சென்ற வாறே! (குறு-27)

இதே போன்று பிரிந்து சென்ற தலைவன், காலம் நீட்டித்துத் தலைவியைச் சந்திக்க வரும்போது, அவனைத் தடுத்துத் தோழி பேசுவாள். கபிலர் பாடிய குறிஞ்சித்
திணைப் பாடல் இது.
இரவு நேரத்தில் (இரவுக் குறி) வந்து செல்லும் தலைவனிடத்துத் தோழி பேசுகிறாள்: ""மூங்கிலால் தன்னுடைய காவல் மரமான வேர்ப்பலா மரத்திற்கு வேலியிட்டிருக்கும் மன்னனின் நாட்டைச் சேர்ந்த தலைவனே! உனக்கு ஒன்று சொல்கிறேன் கேள். அந்தக் காவல் மரத்தின் வேர்ப்பலா இருக்கிறதே... அது பெரிய பழம். ஆனால், சிறிய காம்பில் தொங்கிக் கொண்டிருக்கும் வல்லமை படைத்தது. இது இயற்கையாக நடப்பது. பலாப்பழம் பெருக்கப் பெருக்க அந்தச் சிறிய காம்பிலேயே அது தொங்கும். இது இயல்பானது. ஆனால், உன்னுடைய பிரிவின் காரணமாக உன் மீது எம் தலைவி கொண்ட ஆசையானது அந்தப் பலாப்பழம் பெருப்பது போல பெருத்து வளர்கிறது. ஆனால், இந்த ஆசை எனும் பழம் பெருப்பதோ அவளுடைய உயிர் எனும் சிறிய காம்பில். இது பலாப்பழத்தைப்போல தாங்கும் ஆற்றல் கொண்டதல்ல. உரிய காலத்தில் நீ வரவில்லை என்றால், ஆசை எனும் பழத்தின் பெருக்கத்தால் தாங்க முடியாமல் இவளுடைய உயிர்க்காம்பு முறிந்துவிடும். எனவே, உடனே வந்து அவளை மணந்துகொள்'' என வரைவு கடாவுகிறாள் (திருமணம் செய்து கொள்ளத் தூண்டுகிறாள்).

வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யார் அஃது அறிந்திசி னோரே? சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கியாங்கு இவள்
உயிர் தவச்சிறிது காமமோ பெரிதே! (குறு. 18)

இவ்வாறு, தலைவனும் தலைவியும் இல்லற
வாழ்வில் இணைந்து வாழ்வதற்குப் பலவழிகளில்
பாடுபடும் தோழி, அவ்விருவரையும் இணைக்கும்
இணைப்புப் பாலமாகத் திகழ்கிறாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.