கவி பாடலாம் வாங்க - 56

 மருட்பா என்ற பாவகை ஒன்று உண்டு. அது நால்வகைப் பாக்களில் ஒன்றாகிய வெண்பாவும் ஆசிரியப்பாவும் இணைந்து வருவது. அதாவது, முதலில் பல அடிகள் வெண்பா அடிகளாக அமைய, பின்னுள்ள
கவி பாடலாம் வாங்க - 56

16.மருட்பா
 மருட்பா என்ற பாவகை ஒன்று உண்டு. அது நால்வகைப் பாக்களில் ஒன்றாகிய வெண்பாவும் ஆசிரியப்பாவும் இணைந்து வருவது. அதாவது, முதலில் பல அடிகள் வெண்பா அடிகளாக அமைய, பின்னுள்ள அடிகள் ஆசிரியப்பா அடிகளாக அமையும். முதலில் வெண்பாவோ என்று தோன்றச் செய்து, முடிவில் ஆசிரியப்பாவோ என்று ஐயுறச் செய்வதால் இதற்கு "மருட்டா' என்ற பெயர் வந்தது போலும்! மருள் - மயக்கம்.
 அடியிலக்கணத்தால் மருட்பா எல்லாம் ஒரு வகையாகவே அமையும். ஆனால், பொருளைக் கருதி அதை நான்காகப் பிரித்திருக்கிறார்கள். வேறு பாக்களில் இவ்வாறு பொருளை நோக்கிய பிரிவு இல்லை. புறநிலை வாழ்த்து மருட்பா, கைக்கிளை மருட்பா, வாயுறை வாழ்த்து மருட்பா, செவியறிவுறுஉ மருட்பா என்பவை அந்த நான்கு வகை.
 புறநிலை வாழ்த்து என்பது, "உன்னுடைய தெய்வம் உன்னைப் பாதுகாக்க, நீ சிறந்து வாழ்வாயாக!' என்ற பொருள் அமையப் பாடுவது.
 "என்றும் இளையான் எழிலான் திருமுருகன்
 நன்றருளிக் காப்ப நலஞ்சிறந்து கன்றலின்றிச்
 சீரும் பொருளும் தெருளும் மிகப்பொலிய
 ஆரும் புகழ அறிவோர்தம் நட்பமைய
 நாளும் நாளும் வாழிய
 கேளும் நண்பரும் கெழுமிப் பொலியவே'
 இதில், "முருகன் காக்க வாழ்வாயாக' என்ற பொருள் அமைதலின், இது புறநிலை வாழ்த்து மருட்டா. இதில் முதல் தான்கு அடிகள் வெண்பா அடிகளாகவும் பின் இரண்டடிகள் ஆசிரியப்பா அடிகளாகவும் வந்தன.
 "தென்ற லிடைபோழ்ந்து தேனார் நறுமுல்லை
 முன்றில் முகைவிரியும் முத்தநீர்த் தண்கோளுர்க்
 குன்றமர்ந்த கொல்லேற்றான் நிற்காப்ப வென்றும்
 தீரா நண்பிற் றேவர்
 சீர்சால் செல்வமொடு பொலிமதி சிறந்தே'
 இதில் முன் மூன்றடி வெண்பா அடிகளாகவும் பின் இரண்டடி ஆசிரியப்பா அடிகளாகவும் வந்தன. "சிவபெருமான் காக்க நீ வாழ்க' என்ற பொருளுடைமையால் இதுவும் புறநிலை வாழ்த்தாயிற்று.
 கைக்கிளை மருட்பா கைக்கிளை என்னும் ஒருதலைக் காமத்தைப் பற்றி வருவது. ஆண், பெண் என்னும் இருவருள் யாரேனும் ஒருவர் மட்டும் மற்றவரைக் காமுறுவது ஒருதலைக் காமம் அல்லது கைக்கிளை. அகப்பொருள் நூல்களில் இதை ஒரு திணையாகக் கூறியிருக்கிறார்கள்.
 ஒருவன், ஒருத்தியைக் கண்டு அவள் விரும்பாமலே தான் விரும்பிய நிலையில் கூறுவதும்; அப்படியே ஒருத்தி, ஒருவனைக் கண்டு காமுற்றுக் கூறுவதும் கைக்கிளையில் அடங்கும். முன்னே சொன்னது ஆண்பாற் கைக்கிளை என்றும், பின்னே சொன்னது பெண்பாற் கைக்கிளை யென்றும் பெயர் பெறும். இந்த ஒருதலைக் காமம் பற்றி வரும் மருட்பா, கைக்கிளை மருட்பா.
 "திருநுதல் வேர்வரும்பும் தேங்கோதை வாடும்
 இருநிலம் சேவடியும் தோயும் - அரிபரந்த
 போகிதழ் உண்கணும் இமைக்கும்
 ஆகும் மற்றிவள் அகலிடத் தணங்கே'
 இது ஒரு பெண்ணைக் கண்டு, இவள் மானிட மகளோ, தெய்வப் பெண்ணோ என்று ஐயுற்ற ஆடவன் ஒருவன் பிறகு இன்ன இன்ன காரணத்தால் இவள் நிலவுலகில் உள்ள பெண்தான் என்று தெளிந்து கூறியது.
 அவன் அவளிடம் விருப்பம் கொண்டவன். ஆனால், அவள் அவனை இன்னும் காணவில்லை; விரும்பவில்லை. ஆதலின் இது ஒரு பக்கம் மட்டும் காமம் உண்டான நிலை; ஒருதலைக் காமமாகிய கைக்கிளை. பாட்டில் முன் இரண்டடி வெண்பா அடிகளாகவும் பின் இரண்டடி ஆசிரியப்பா அடிகளாகவும் இருத்தலின் இது மருட்பா.
 வாயுறை வாழ்த்து மருட்பா, உண்மையைச் சொல்வது. கசப்பான உண்மையாக இருந்தாலும் அதை வற்புறுத்திச் சொல்வது இது.
 "பலமுறையும் ஓம்பப் படுவன கேண்மின்
 சொலல்முறைக்கண் தோன்றிச் சுடர்மணித்தேர் ஊர்ந்து
 நிலமுறையின் ஆண்ட நிகரில்லார் மாட்டும்
 சிலமுறை அல்லது செல்வங்கள் நில்லா
 இலங்கும் எறிபடையும் ஆற்றலும் அன்பும்
 கலந்ததங் கல்வியும் தோற்றமும் ஏனைப்
 பொலஞ்செய் புனைகலனோ டிவ்வாறா னாலும்
 விலங்கிவருங் கூற்றை விலக்கலும் ஆகா
 அனைத்தாதல் நீவிரும் காண்டிர் நினைத்தக்க
 கூறிய வெம்மொழி பிறழாது
 தேறிநீர் ஒழுகிற் சென்றுபயன் தருமே'
 "கூற்றுவனை விலக்கலாகாது' என்ற உண்மையைச் சொன்னமையால் வாயுறை வாழ்த்தாயிற்று. இதில் இறுதி இரண்டடிகள் ஆசிரிய அடிகள்; மற்றவை வெண்பா அடிகளாக நின்று மருட்பா ஆயிற்று.
 செவியறிவுறுநூஉ மருட்பா, இன்னபடி நடக்க வேண்டும் என்று அறிவுறுத்துதலைக் கூறுவது.
 "பல்யானை மன்னர் முருங்க அமருழந்து
 கொல்யானைத் தேரொடும் கோட்டந்து நல்ல
 தலையாலங் கானம் பொலியத் தொலையாப்
 படுகளம் பாடுபுக் காற்றிப் பகைஞர்
 அடுகளம் வேட்டோன் மருக அடுதிறல்
 ஆளி நிமிர்தோட் பெருவழுதி எஞ்ஞான்றும்
 ஈரம் உடையையாய் என்வாய்ச்சொற் கேட்டி
 உடைய உழவரை நெஞ்சனுங்கக் கொண்டு
 வருங்கால் உழவர்க்கு வேளாண்மை செய்யல்
 மழவர் இழைக்கும் வரைக்காண் நிதியீட்டம்
 காட்டும் அமைச்சரை ஆற்றத் தெளியல்
 அமைத்த அரும்பொருள் ஆறன்றி வெளவல்
 இனத்தைப் பெரும்பொரு ளாசையாற் சென்று
 மன்ற மறுக அகழாதி என்றும்
 மறப்புற மாக மதுரையார் ஒம்பும்
 அறப்புறம் ஆசைப்பட் டேற்க அறத்தால்
 அவையார் கொடுநாத் திருத்தி நவையாக
 நட்டார் குழிசி சிதையாதி ஒட்டார்
 செவிபுதைக்கும் தீய கடுஞ்சொற் கவியுடைத்தாய்க்
 கற்றாற் கினனாகிக் கல்லார்க் கடிந்தொழுதிச்
 செற்றார்ச் செறுத்துநிற் சேர்ந்தாரை ஆக்குதிநீ
 சுற்றம் அறிந்த அறிவினாய் மற்றும்
 இவையிவை வீயா தொழுகின் நிலையாப்
 பொருகட லாடை நிலமகள்
 ஒருகுடை நீழல் துஞ்சுவள் மன்னே'
 இது, இன்னது செய்யாதே, இன்னது செய்க என்று அறிவுறுத்தி வந்தமையால் செவியறிவுறுஉ மருட்பா வாயிற்று.
 கடவுள் புறத்தே நின்று காக்க, வாழ்க என்ற பொருளைப் பற்றி வருதலால் புறநிலை வாழ்த்து என்றும், ஒரு பக்கத்து விருப்பத்தைக் கூறுவதனால் கைக்கிளை என்றும், உண்மையை வற்புறுத்தி வாழ்த்துவதனால் வாயுறை வாழ்த்து என்றும் (வாய்-உண்மை), செவியில் அறிவுறுத்துவதனால் செவியறிவுறுஉ என்றும் இவை பெயர் பெற்றன.
 - நிறைவு பெற்றது-
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com