13.மயங்கிசைக் கலிப்பா வகை (2):  கவி பாடலாம் வாங்க - 52

"பொன்பூத் தலர்ந்த கொன்றைபீர் பூப்பக்கருஞ்சினை வேம்பு திருமுடிச் சூடிஅண்ணலா னேறு மண்ணுண்டு கிடப்பக்
13.மயங்கிசைக் கலிப்பா வகை (2):  கவி பாடலாம் வாங்க - 52

(சுரிதகம்)

"பொன்பூத் தலர்ந்த கொன்றைபீர் பூப்பக்
கருஞ்சினை வேம்பு திருமுடிச் சூடி
அண்ணலா னேறு மண்ணுண்டு கிடப்பக்
கண்போற் பிறழும் கெண்டைவலன் உயர்த்து
வரியுடற் கட்செவி பெருமூச் செறியப்
பொன்புனைந் தியன்ற பைம்பூண் தாங்கி
முடங்குளைக் குடுமி மடங்கலந் தவிசில்
பசும்பொனசும் பிருந்த பைம்பொன்முடி கவித்தாங்
கிருநிலம் குளிர்துங் கொருகுடை நிழற்கீழ்
அரசுவிற் றிருந்த ஆதியங் கடவுள்நின்
பொன்மலர் பொதுளிய சின்மலர் பழிச்சுதும்
ஐம்புல வழக்கின் அருஞ்சுவை யறியாச்
செம்பொருட் செல்வனின் சீரடித் தொழும்புக்
கொண்பொருள் கிடையா தொழியினு மொழிக
பிறிதொரு கடவுட்குப் பெரும்பயன் தரூஉம்
இறைமையுண் டாயினு மாக குறுகிநின் 
சிற்றடி யவர்க்கே குற்றேவல் தலைக் கொண் 
டம்மா கிடைத்தவா வென்று
செம்மாப் புறூஉம் திறம்பெறற் பொருட்டே'

இந்தப் பாட்டில் எட்டடித் தரவு ஒன்றும், ஈரடித் தாழிசைகள் ஆறும், அராகமும், மீட்டும் ஈரடித் தாழிசைகள் நான்கும், அம்போதரங்க உறுப்பும், தனிச்சொல்லும், பத்தொன்பதடி ஆசிரியச் சுரிதகமும் வந்தன. இதற்கு முன் நாம் பார்த்த கலிப்பா வகையில் இப்படி உறுப்புக்கள் கொண்ட பாட்டு ஒன்றும் இல்லை. இதில் இடவரையறையின்றியும் இத்தனை என்ற வரையறையின்றியும் உறுப்புக்கள் கலந்து அமைந்தமையின் இது மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா ஆயிற்று. தமிழில் உள்ள பிரபந்தங்களில் ஒன்றாகிய கலம்பகத்தில் முதல் பாட்டு மயங்கிசைக் கொச்சகக் கலிப்பாவாகவே இருக்கும். இங்கே காட்டிய பாடல் குமரகுருபர முனிவர் இயற்றிய மதுரைக் கலம்பகத்தில் உள்ள முதற் பாட்டு.

யாப்பருங்கலக்காரிகையில் மேற்கோளாகக் காட்டியிருக்கும் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா வருமாறு:

(தரவு)

மணிகிளர் நெடுமுடி மாயவனும் தம்முனும்போன்
 றணிகிளர் நெடுங்கடலும் கானலும் தோன்றுமால்
நுரைநிவந் தவையன்ன நொப்பறைய சிறையன்னம்
இரைநயந் திரைகூடும் ஏமஞ்சார் துறைவகேள்    (1)
வரையெனக் கழையென மஞ்செனத் திரைபொங்கிக் 
கரையெனக் காற்றெனக் கடிதுவந் திசைப்பினும் 
விழுமியோர் வெகுளிபோல் வேலாழி இறக்கலா 
தெழுமுன்னீர் பரந்தொழுகும் ஏமஞ்சார் துறைவகேள்     (2)

(தாழிசை)

கொடிபுரையும் நுழைநுசுப்பிற் குழைக்கமர்ந்த திருமுகத்தோள்
தொடிநெகிழ்ந்த தோள்கண்டும் துறவலனே என்றியால்     (1)
கண்கவரு மணிப்பைம்பூண் கயில்கவைய சிறுபுறத்தோள் 
தெண்பனிநீ ருகக்கண்டும் திரியலனே என்றியால்     (2)
நீர்பூத்த நிரையிதழ்க்கண் நின்றொசிந்த புருவத்தோள் 
பீர்பூத்த நுதல்கண்டும் பிரியலனே என்றியால்    (3)
கனைவரல்யாற் றிருகரைபோல் கைநில்லா துண்ணெகிழ்ந்து 
நினையுமென் நிலைகண்டும் நீங்கலனே என்றியால்     (4) 
கலங்கவிழ்ந்த நாய்கன்போல் களைதுணை பிறிதின்றிப்
புலம்புமென் நிலைகண்டும் போகலனே என்றியால்     (5)
வீழ்சுடரி னெய்யேபோல் விழுமநோய் பொறுக்கலாத் 
தாழுமென் னிலைகண்டும் தாங்கலனே என்றியால்     (6)

(தனிச்சொல்)
அதனால்
(அராகம்)

அடும்பல் இறும்பி னெடும்பணை மிசைதொறும் 
கொடும்புற மடலிடை யொடுங்கின குருகு         (1)
செறிதரு செருவிடை யெறிதொழி லிளையவர் 
நெறிதரு புரவியின் மறிதரும் திமில்          (2)
அரைசுடை நிரைபடை விரைசெறி முரைசென 
நுரைதரு திரையொடு கரைபொரும் கடல்         (3)
அலங்கொளிர் அவிர்சுட ரிலங்கொளி மறைதொறும் 
கலந்தெறி காலொடு புலம்பின பொழில்         (4)

(தாழிசை)

விடாஅது கழலுமென் வெள்வளையும் தவிர்ப்பாய்மன் 
கெடாஅது பெருகுமென் கேண்மையும் நிறுப்பாயோ?      (1)
ஒல்லாது கழலுமென் னொளிவளையுந் தவிப்பாய்மன் 
நில்லாது பெருகுமென் னெஞ்சமும் நிறுப்பாயோ?     (2)
தாங்காது கலுழுமென் றகைவளையும் தவிர்ப்பாய்மன் 
நீங்காது பெருகுமென் நெஞ்சமும் நிறுப்பாயோ?     (3)
மறவாத அன்பினேன் மனனிற்கு மாறுரையாய் 
துறவாத தமருடையேன் துயர்தீரு மாறுரையாய்     (4) 
காதலார் மார்பன்றிக் காமக்கு மருந்துரையாய் 
ஏதிலார் தலைசாய யானிற்கு மாறுரையாய்               (5)
இணைபிரிந்தார் மார்பன்றி யின்பக்கு மருந்துரையாய் 
துணைபிரிந்த தமருடையேன் துயர்தீரு மாறுரையாய்     (6)

(தனிச்சொல்)
எனவாங்கு
(அம்போதரங்கம்)

பகைபோன் றதுதுறை-பரிவா யினகுறி 
நகையிழந் ததுமுகம்-நனிவாடிற் றுடம்பு 
தகையிழந் தனதோள்-தலைசிறந் ததுதுயர் 
புகைபரந் ததுமெய்-பொறையா யிற்றுயிர்

(தனிச்சொல்)
அதனால்
(சுரிதகம்)

இனையது நினையா வனையது பொழுதால்
நினையல் வாழி தோழி தொலையாப் 
பனியொடு கழிக உண்கண்
என்னொடு கழிகவித் துன்னிய நோயே

இது தரவு இரண்டும், தாழிசை ஆறும், தனிச் சொல்லும், அராகம் நான்கும், மீண்டும் தாழிசை ஆறும், தனிச் சொல்லும், அம்போதரங்க உறுப்பு எட்டும், தனிச் சொல்லும், நான்கடிச் சுரிதகமும் பெற்று வந்த மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா.

(தொடர்ந்து பாடுவோம்...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com